அச்சுறுத்தலுக்கு மத்தியில் போராடுகின்றோம்!

அச்சுறுத்தலுக்கு மத்தியில் போராடுகின்றோம்!


எங்கள் உறவுகளைக் காணாமல் ஆக்கச் செய்த குற்றவாளிகளும், படுகொலை செய்த குற்றவாளிகளும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டும் அவர்கள் நீதிமன்றத்தின் மூலம் விடுவிக்கப்பட்டு பதவியுயர்வுகளைக் வழங்கப்படும் அதேவேளை உரிமைக்கான போராட்டங்களைச் செய்யும் எங்களை இலங்கையின் நீதித்துறை முன் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கின்றது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.

தங்கள் உறவுகளுக்கான நீதி கோரிய ஜனநாயக ரீதியான உரிமைப் போராட்டங்களை நீதிமன்றத் தடையுத்தரவின் மூலம் தடுப்பது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவுற்ற காலம் தொடக்கம் இன்று வரை நாங்கள் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற அவர்களுக்கான நீதி கோரி கையில் புகைப்படங்களுடனும், கண்ணீருடனும் வீதிகளில் போராடிக் கொண்டிருக்கின்றோம். ஒரு பிரதேசத்தில் ஆரம்பித்த எமது அமைப்பு பின்னர் மாவட்டங்கள் தோறும் ஆரம்பிக்கப்பட்ட எமது உறவுகளுக்காகப் பல அச்சுறுததல்களுக்கும் மத்தியில் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் எட்டு மாவட்டங்களும் இணைந்து எமது போராட்டங்கள் வலுப்பெற்று இன்று சர்வதேச நீதியைக் கோரி நிற்கின்றோம். இன்று எம்மோடு இணைந்து போராடிய பல தாய்மார்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் உறவுகளைத் தேடி, அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையோடும், ஏக்கங்களோடும் மரணித்துள்ளார்கள். அவர்கள் அழிக்கப்பட்ட சாட்சியங்களாக உள்ளது மாத்திரமே பெறுபேறாகக் கிடைத்திருக்கின்றது.

சிறீலங்கா அரசினூடாக எவ்வித தீர்வும் கிடைக்கப் பெறாமையினாலேயே எமது போராட்டங்களை நாங்கள் சர்வதேசத்தை நோக்கி நகர்த்தியிருக்கின்றோம். இருப்பினும் அரசு தன் கூலிப்படைகளைக் கொண்டு எங்களைத் துரத்திக் கொண்டே இருக்கின்றது.

சிறீலங்கா நீதித்துறை முன் எங்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கின்றது அரசு. சிறு குற்றங்கள் புரிந்தவர்களுக்கு வருடக் கணக்கில் தண்டனைகளைக் கொடுக்கும் இந்த நீதித்துறை எங்கள் உறவுகளைத் தேடும் எங்களையும் பயங்கரவாதிகளாகக் காட்டி எமது உரிமைக்கான போராட்டங்களைக் கூடச் செய்யவிடாது, தடையத்தரவுகளையும் வழங்குகின்றது. இதனால் நாங்கள் தற்போது நீதி கேட்கக் கூட இயலாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இதுதான் தற்போது சிறீலங்காயின் ஜனநாயகமாக இருக்கின்றது.

ஒரு இனத்தை அழித்தவர்களுக்கும், கொலை செய்தவர்களுக்கும் கிடைக்கும் மதிப்பு வேதனையோடு வீதிகளில் போராடும் எமக்கு இல்லை. இந்த நாட்டில் சிறு பிள்ளை தொடக்கம் கற்பினித் தாய்மார், வயதானவர்கள் என்று கொலை செய்தவர்களுக்கு உயிரின் மதிப்பு தெரியாது. ஆனால் சர்வதேச நாடுகளும் அவ்வாறு இருப்பதை நினைத்தால் எமக்கு மேலும் வேதனையாகவே இருக்கின்றது.

இங்கு நீதி கிடைக்காமையினாலேயே ஐநா சபையை நாங்கள் நாடி வந்திருக்கின்றோம். எங்களை கைவிட்டு விடாதீர்கள். எமது உறவுகள் எமக்கு வேண்டும். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும். அதற்காகவே எமது போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எமது தாய்மாரையும் இழந்து கொண்டிருக்கின்றோம். எமது சாட்சியங்களும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே இனியும் தாமதிக்காமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எமது பிரச்சினைகைளப் பாராப்படுத்தி எமது உறவுகளுக்கான நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்று தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள