அணுவாயுதத்தில் முதலீடு…? செல்வாக்கை இழக்குமா, நோர்வே…!!

You are currently viewing அணுவாயுதத்தில் முதலீடு…? செல்வாக்கை இழக்குமா, நோர்வே…!!
ஒஸ்லோ:
நோர்வேயின் எண்ணெய் ஏற்றுமதி வருமானத்தின் பொருளாதாரத்தின் பகுதியை, அணுவாயுத தயாரிப்பில் முதலீடு செய்யலாம் என, நோர்வே அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டமையால், நோர்வே முழுவதும் இது பேசுபொருளாக மாறியுள்ளது.
நோர்வேயின் சர்வதேசப் பலம் அதன் எண்ணெய் வளத்திலும் நிதிச் செழிப்பிலும் மட்டும் தங்கியிருக்கவில்லை. மனிதவுரிமைகள், மனிதாபிமான உதவிகள், சமாதான முயற்சிகள் ஆகியவற்றில் அது வெளிப்படுத்தும் நிலைப்பாடுகளும் அதன் செல்வாக்குக்கான அடித்தளங்களாக உள்ளன.
அணுவாயுத உற்பத்தியுடன் தொடர்புடைய நிறுவனங்களில் எண்ணெய் நிதியை முதலீடு செய்ய அனுமதிப்பது, அந்த அடித்தளத்தில் விரிசலை ஏற்படுத்தக்கூடிய முடிவாக இருக்கும்.
தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் பரிந்துரையானது, நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு அணுவாயுதம் தயாரிக்க நேரடியாக ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முன்னிலைப்படுத்தாது என்றாலும், அணுவாயுத உற்பத்தியில் தொடர்புடைய சில நிறுவனங்களில், நோர்வேயின் எண்ணெய் விற்பனை நித்தியமான “Oljefondet” மீண்டும் முதலீடு செய்ய அனுமதிப்பதற்கான பரிந்துரையாகும்.
இதில், அணுவாயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின்படி அணுவாயுத நாடுகளாக அங்கீகரிக்கப்பட்ட, நோர்வேயும் அங்கம் வகிக்கும், நேட்டோ நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு விதிவிலக்கு வழங்கப்படவுள்ளது. “Svein Gjedrem” என்பவற்றின் தலைமையிலான குழு, 15 ஒக்டோபர் 2026 அன்று இதுகுறித்த பரிந்துரையை நோர்வே அரசுக்கு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது என்றாலும், இது இன்னும் நடைமுறைப்படுத்தப்பட்ட இறுதி அரசாங்க முடிவல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முரண்பாடு, அரசியல் விமர்சனத்தின் வலிமையைக் குறைப்பதில்லை. நிறுவனங்களின் பங்குகளை பங்குச்சந்தையில் வாங்கும்போது, அந்தப் பணம் அனைத்தும் நேரடியாக நிறுவனத்தின் அணுவாயுதத் திட்டத்துக்குச் செல்லும் என்பது அர்த்தமல்ல.
இருப்பினும், ஒரு பெரிய அரச நிதி, அந்நிறுவனங்களின் பங்குதாரராகி, அவற்றின் வருமானத்தில் பங்கேற்பது பொருளாதார ஆதரவையும் அரசியல் அங்கீகாரத்தையும் வழங்குகிறது. எனவே, பணம் எங்கே செல்கிறது என்பதுடன் கேள்வி முடிந்துவிடாது; எந்தச் செயல்பாட்டிலிருந்து நோர்வே இலாபம் பெறத் தயாராக இருக்கிறது என்பதும் இங்கு முக்கியமாகிறது.
நோர்வே செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட மனிதாபிமான அமைப்புகளும், பல எதிர்க்கட்சிகளும் இப்பரிந்துரைக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அதேவேளை, இப்பரிந்துரையை ஆதரிக்கும் அரசியல் தரப்புகளும் உள்ளன.
ஆகவே, இதை நோர்வே மக்களின் ஒருமித்த எதிர்ப்பாகக் கூறுவதற்குப் பதிலாக, நாட்டின் பாதுகாப்புக் கொள்கைக்கும் அறநெறி அடையாளத்திற்கும் இடையில் உருவாகியுள்ள ஆழமான அரசியல் முரண்பாடாகப் புரிந்துகொள்வதே சரியானதாக அமையும்.
நோர்வேயைப் பொறுத்தவரை இந்த மாற்றம் கூடுதல் முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணம், அதன் சொந்த வரலாறுதான். அணுவாயுதப் பயன்பாட்டின் மோசமான விளைவுகள் குறித்து, 2013 ஒஸ்லோ மாநாட்டை நோர்வே முன்னெடுத்தது. அணுவெடிப்பின் பேரழிவை எந்த நாடோ சர்வதேச அமைப்போ போதுமான முறையில் சமாளிக்க முடியாது என்பதும், அதன் விளைவுகள் எல்லைகளைக் கடந்து பரவும் என்பதம் அந்த மாநாட்டின் முக்கிய முடிவுகளாக இருந்தன.
இவ்வாறான ஆபத்தை உலகுக்கு எடுத்துரைத்த நோர்வே என்ற நாடு, அதே ஆயுதங்களின் உற்பத்தியுடன் தொடர்புடைய நிறுவனங்களில் இலாபம் பெற முன்வரும்போது, அதன் பேச்சுக்கும் செயலுக்கும் இடையிலான இடைவெளி விமர்சனத்துக்குள்ளாகும்.
இந்த பரிந்துரையை ஆதரிப்பவர்களின் வாதத்தையும் நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும். ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் அணுவாயுதத் திறனை எதிர்கொள்ள நேட்டோவின் அணுவாயுதத் தடுப்புப் பாதுகாப்பு அவசியம் என்கிற வாதத்துக்கு மத்தியில், அணுவாயுதத்தாக்குதலிலிருந்து பாதுகாப்பைப் பெற முயலும் நோர்வே, அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் முதலீடு செய்வதை மட்டும் ஒழுக்கக்கேடாகக் கருதுவது முரண்பாடாக அமையும் என்பதே அரசுத் தரப்பின் வாதமாகும்.
ஆனால் இந்த வாதம், முதலீட்டை அறநெறி அடிப்படையில் கட்டாயமாக நியாயப்படுத்திவிடாது. ஒரு பாதுகாப்புக் கூட்டணியில் இருப்பதும், தனித்த முதலீட்டு வரம்புகளைப் பேணுவதும் வெவ்வேறு அரசியல் முடிவுகள்.
கூட்டணிப் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வதால் அதன் அனைத்து ஆயுத நடவடிக்கைகளிலும் நிதிப் பங்கேற்பு அவசியமாகிவிடாது. நோர்வே பாதுகாப்புத் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டே, அணுவாயுத உற்பத்தியிலிருந்து வருமானம் பெறுவதற்கு வரம்பு விதிக்க முடியும்.
இந்தப் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டால், மிகப்பெரிய பாதிப்பு, நோர்வேயின் தார்மீக நம்பகத்தன்மைக்கே ஏற்படக்கூடும். எந்த ஆயுதம் மனிதகுலத்துக்கு ஆபத்தானது என்ற கேள்விக்குப் பதிலாக, அந்த ஆயுதத்தைத் தயாரிப்பவர் நமது கூட்டாளியா என்பது முதலீட்டு அளவுகோலாக மாறும்.
அணுவாயுதத்தின் மோசமான விளைவுகள், அதைத் தயாரிக்கும் நாட்டின் கூட்டணி அடையாளத்தால் மாறுவதில்லை. இதனால் நோர்வேயின் அறநெறிக் கொள்கைகள் பொதுவான மனிதநேய விதிகளா, அல்லது அரசியல் வசதிக்கேற்ப மாற்றப்படும் விதிகளா என்ற சந்தேகம் எழும்.
இந்தச் சந்தேகத்தை நோர்வேயின் எதிரிகள் மட்டுமல்லாமல், மேற்கத்திய நாடுகளின் இரட்டை அளவுகோல்களை ஏற்கெனவே விமர்சிக்கும் பிற அரசுகளும் பயன்படுத்தக்கூடும். பிற நாடுகளிடம் ஆயுதக் கட்டுப்பாட்டையும் பொறுப்பான நடத்தையையும் வலியுறுத்தும் நோர்வேயிடம், உங்கள் கூட்டாளிகளின் அணுவாயுதத் தொழிலில் நீங்கள் இலாபம் பெறுவது எப்படி என்ற கேள்வி முன்வைக்கப்படும்.
அந்தக் கேள்வி நோர்வே கூறும் ஒவ்வொரு மனிதவுரிமை விமர்சனத்தையும் செல்லாததாக்காது. ஆனால் அதன் கருத்துக்களுக்கு ஆதரவு திரட்டுவதையும், தனது நிலைப்பாட்டின் நேர்மையை நிரூபிப்பதையும் கடினமாக்கும்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் இதன் தாக்கம் உணரப்படலாம். ஒரு மத்தியஸ்த நாடு முழுமையான அரசியல் நடுநிலையுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை; சம்பந்தப்பட்ட தரப்புகள் அதன் நோக்கத்தையும் செயல்முறையையும் நம்ப வேண்டும்.
அணுவாயுத நிறுவனங்களில் முதலீடு செய்வதால் நோர்வேயின் அனைத்து மத்தியஸ்த முயற்சிகளும் தோல்வியடையும் என்று கூற முடியாது. எனினும், மேற்கத்திய இராணுவ நலன்களுடன் நோர்வேயின் பொருளாதார நலன்களும் மேலும் இணைந்துவிட்டன என்ற குற்றச்சாட்டுக்கு இது வலுசேர்க்கும். நம்பிக்கை குறைவாக உள்ள பேச்சுவார்த்தைகளில், அத்தகைய சந்தேகமே ஒரு தடையாக அமையலாம்.
உலகளாவிய முதலீட்டுச் சூழலிலும் இதன் விளைவுகள் பரவக்கூடும். நோர்வே போன்ற பெரிய அரச முதலீட்டாளர் தனது தடையைத் தளர்த்தும்போது, மற்ற நிதிகளும் அதையே பின்பற்றுவதற்கான நியாயமாகப் பயன்படுத்தலாம். இதனால் உடனடியாக எத்தனை புதிய அணுவாயுதங்கள் உருவாகும் என்று கணிக்க முடியாது.
ஆனால் அணுவாயுத உற்பத்தியை முதலீட்டுக்கு ஏற்ற சாதாரணத் தொழிலாக ஏற்றுக்கொள்ளும் போக்கு வலுப்பெறலாம். இது அணுவாயுதங்களுக்கு எதிரான சமூக மற்றும் பொருளாதார அழுத்தத்தைத் தளர்த்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
நிதியின் அறநெறி மேற்பார்வையும் இங்கு முக்கியம். குறித்த பரிந்துரைகளில் “Etikkrådet” அமைப்பின் பங்கை மாற்றுவதும் இடம்பெற்றுள்ளது. அணுவாயுத முதலீட்டுக்கான விதிவிலக்குடன் சேர்ந்து, சுயாதீன ஆய்வும் வெளிப்படைத்தன்மையும் பலவீனமடைந்தால், எதிர்கால மனிதவுரிமைச் சர்ச்சைகளிலும் வர்த்தக அல்லது கூட்டணி நலன்களே முன்னுரிமை பெறுமா என்ற அவநம்பிக்கை அதிகரிக்கும்.
நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதற்கு அறநெறி விதிகள் இருப்பது மட்டும் போதாது; அரசியல் அழுத்தம் வரும்போதும் அவை செயல்பட வேண்டும்.
அதேவேளை, விளைவுகளை மிகைப்படுத்தவும் கூடாது. இந்த முதலீட்டு மாற்றத்தால் நோர்வே உடனடியாகச் சர்வதேசத் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும், பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளும், அல்லது புதிய இராணுவத் தாக்குதலுக்கான இலக்காக மாறும் என்று கூற ஆதாரம் இல்லை.
சில கூட்டணி நாடுகள் இதை வரவேற்கவும் வாய்ப்புள்ளது. எதிர்பார்க்கத்தக்க முக்கிய ஆபத்து என்னவெனில், நீண்ட காலத்தில் அதன் அறநெறிச் செல்வாக்கு தேய்வதும், மனிதாபிமானத் தலைமையின் மீது சந்தேகம் வளர்வதும் ஆகும். இவை இங்கு முன்வைக்கப்படும் அரசியல் மதிப்பீடுகள்; ஏற்கெனவே நிகழ்ந்த விளைவுகள் அல்ல.
நோர்வேயின் பாதுகாப்புச் சவால்கள் உண்மையானவை. ஆனால் பாதுகாப்புக்கான பதில், அது உலகுக்கு வலியுறுத்திய மனிதாபிமான வரம்புகளைத் தளர்த்துவதாக இருந்தால், அந்த முடிவுக்கு நீண்டகால விலை உண்டு.
எண்ணெய் வருமான நிதியின் கூடுதல் வருமானத்தைப் பணத்தில் கணக்கிடலாம். மனிதவுரிமைகள் பற்றி நோர்வே பேசும்போது உலகம் அதைக் கேட்கத் தயாராக இருக்கும் நம்பிக்கையின் மதிப்பை அவ்வாறு கணக்கிட முடியாது.
எதிர்காலத் தலைமுறைகளுக்காகச் சேமிக்கப்படும் பொருளாதார செல்வம், அவர்களின் பாதுகாப்பையே அச்சுறுத்தக்கூடிய ஆயுதத் தொழிலுடன் இணைக்கப்பட வேண்டுமா என்பதே நோர்வே எதிர்கொள்ளும் அடிப்படையான அரசியல் கேள்வி.
16.10.2026
பகிர்ந்துகொள்ள

Leave a Reply