அணையாத தீபம் அன்னைபூபதியம்மா!

அணையாத தீபம் அன்னைபூபதியம்மா!
அணையாத தீபம் அன்னைபூபதியம்மா! 1

இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற முகத்திரை அணிந்து இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் சிறீலங்கா ஜனாதிபதி கொடுங்கோலன் ஜெயவர்தனாவின் குருதிதோய்ந்த ஒப்பந்தத்தின் கீழ் தமிழர் மண்ணில் 1987யூலையில் கால்பதித்தனர்.

சிறீலங்கா அரசபயங்கரவாதத்தின் இனவழிப்புப்பூதத்தின் கொடும்துயரில் தத்தளித்துக்கொண்ட எம்மக்கள் வல்லரசின் வருகையால் புன்னகையில் திளைத்தனர்.

வசந்தகாலத்தின் வாடைக்காற்று வாரி வகுடெடுக்குமென எம்மக்கள் பூரிப்பில் மிதந்தனர் அதனால் வெடிகொழுத்தினர் இனிப்பு பண்டங்களை பரிமாறினர் மாலை அணிவித்து காக்கவந்த கடவுள்களாக வணங்கினர்.

இந்தியப்படையினர் எம்மை காக்க வந்தவர்கள் அல்ல தாக்க வந்தவர்கள் என்பதை தமிழ்மக்களின் உண்மையான கேடயங்களாய் உலாவந்த விடுதலைப்புலிகள் விழிப்புணர்வை வெளிப்படுத்தியபோதும் உளக்களிப்பின் உச்சத்தில் பூத்துக்குலுங்கிய எம்மக்கள் நம்பமறுத்தனர் வசந்தகாலமொன்று தங்களை வருடிக்கொண்டிருப்பதாகவே உணர்ந்தனர்.

ஆனால் வல்லரசின் வல்லூறுகள் மனித சதைத்துண்டிற்காய்  மெல்ல மெல்ல சிறகை அசைத்து தமிழர்களின் தலைகளை குறி பார்த்தபடி பறப்பில் ஈடுபடத்தொடங்கினர். கோரச்சொண்டுகளை வெளியே நீட்டியபடி வல்லூறுகளின் வாய்கள் பிளக்கத்தொடங்கின.

குஞ்சுகள் கோழிகள் என்றபேதமின்றி இந்தியப்படைகளின் இனவழிப்பு இரைக்கு தமிழர்களின் உயிர்கள் பலியாகியன

இதன்பிற்பாடுதான் எமது மக்கள் இந்தியப்படைகள் எம்மை அழிக்க வந்தவர்கள் என்பதை உணரத்தொடங்கினர். தொடர்ந்து இந்திய இராணுவமே வெளியேறு என்ற மக்கள் கோசங்களும் ஓங்கி ஒலிக்கதொடங்கியது.

ஆனாலும் இந்திய ஆக்கிரமிப்புப்படைகள் செவிசாய்கவில்லை மாறாக சிறீலங்காவின் இனவழிப்பை பலப்படுத்தும் துணைப்படைகளாக தமிழர் தேசமெங்கணும் தடம் பதித்தனர்.

எமது மண்ணை ஆக்கிரமிக்க துடிக்கும் இந்தியப்படைகளின் அடாவடித்தனத்தை நிறுத்துவதற்காக காந்திதேசத்தின் மொழியில் புரியவைப்பதற்காக 1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து அறவழிப்போராட்டத்தினை தியாகதீபம் திலீபன் அவர்கள் ஆரம்பித்தார்.

பன்னிருநாள் நீராகாரமின்றி உண்ணாநிலைப்போராட்டத்தினை மேற்கொண்டு கோரிக்கைகள் நிறைவேறாது 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணல் யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் திலீபன் அவர்கள் வீரமரணம் எய்தினார்.

இதனைத்தொடர்ந்து மக்களையும் மண்ணையும் இந்திய வல்லூறுகளிடமிருந்து மீட்பதற்காய்

விடுதலைப்புலிகள் கெறில்லா பாணியிலான போரை ஆரம்பித்தனர் விடுதலைப்புலிகளின் துல்லிய தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாத இந்தியப்படைகள் பொதுமக்களை இலக்கு வைத்து தங்களின் வழமையான மிலேச்சத்தனமான தாக்குதல்களை தொடங்கினர் பாடசாலைப்பிள்ளைகள் பெண்கள் முதியவர் என்ற எந்த பேதமுமின்றி தங்களின் கொடூர தாக்குதல்களை நிகழ்த்தினர்.

சுற்றிவளைப்பு என்ற போர்வையில் ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாக சோதனை செய்து பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களையும் வன்புணர்வுகளையும் மிகக்கொடூரமாக நிகழ்த்தினர்.

பொதுமக்கள் மீது தொடச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த சித்திரவதைகள் கொலைகளின் காரணமாகத்தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்னைபூபதியம்மா இரண்டம்ச கோரிக்கையை முன்வைத்து அறவழிப்போராட்டத்தினை முன்னெடுக்கும் முயற்சியை மேற்கொண்டபோது இந்திய இராணுவத்தினர் குழப்ப முனைந்தனர்.

ஆனாலும் அன்னையின் உறுதிப்பாட்டை குலைக்கமுடியாமல்போக மீண்டும் உண்ணா நிலைப் போராட்டம் 19.03.1988 இல் அன்னைபூபதி அம்மாவால் ஆரம்பிக்கப்பட்டது.

தமிழ் இனத்தின் உரிமைக்காக இரண்டாவது முறையாக முன்னெடுக்கப்பட்ட அறவழிப்போராட்டம் கோரிக்கைகள் நிறைவேறாது கோரப்பலியெடுக்கும் இந்தியப்படைகளின் முன்னால் தோற்றுப்போனது  ஆனாலும் மண்ணுக்காக இறுதிக்கணம் வரை உறுதியோடு முன்னெடுக்கப்பட்ட அறவழிப்போராட்டம் உலகத்தின் தியாகங்களை வென்றது.

தங்கள் இனத்தின் விடியலுக்காக அகவைபேதமின்றி  அளப்பரிய தியாகங்களை செய்யமுடியும் என்ற உயர்நிலையை அடைந்தது.

ஆம் எங்கள் அறத்தாய் அன்னைபூபதியம்மா 19.04.1988 அன்று வீரச்சாவை அணைத்துக்கொண்டார்.

தொடர்ந்து எமது மக்களை கொன்று குவித்துக்கொண்டிருந்த இந்திபடைகளை வேறுவழியின்றி எதிர்த்துப்போராட துணிந்தனர் தமிழீழவிடுதலைப்புலிகள். அறப்போராட்டங்களை அங்கீகரிக்காத  ஆக்கிரமிப்புப்படைகள் விடுதலைப்புலிகளின் மதிநுட்டபமான தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாது  24 03.1990 அன்று வெளியேறிச்சென்றனர்.

காந்திதேசத்தின் இனவழிப்புபோருக்கு எதிராக அறப்போர் தொடுத்து 31 நாட்கள் உறுதியோடு உணவு தவிர்த்து போராடிய

அறத்தாயின் வீரவரலாற்று நாளை தமிழீழ விடுதலைப்புலிகள் நாட்டுப்பற்றாளர் நாளாக உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

அறத்தாயின் நினைவு நாளே நாட்டுப்பற்றுதியோடு பணியாற்றி விடுதலையின் வித்துக்களாய் உறங்கிக்கொண்டிருக்கும் நாட்டுப்பற்றாளர்களின் குறியீடாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

-தூயவன்-

பகிர்ந்துகொள்ள