அண்ணாமலை கருத்துக்கு கஜேந்திரகுமார் கண்டனம்!

You are currently viewing அண்ணாமலை கருத்துக்கு கஜேந்திரகுமார் கண்டனம்!

அண்ணாமலை ஈழத்திற்கு விஜயம் செய்த பின்னர் நாடு திரும்பி, ஈழத் தமிழர்களுடைய பிரச்சினைக்கு 13வது திருத்தம் தான் தீர்வு என்றும், இங்குள்ள மக்கள் அதைத்தான் வலியுறுத்தியுள்ளார்கள் என கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அவருடைய இந்த கருத்தை நாங்கள் நிராகரிப்பது மட்டுமல்லாது அதனை வன்மையாக கண்டிக்கிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் கடந்த 87ம் ஆண்டு, இந்த 13வது சீர்திருத்தம் ஒற்றையாட்சிக்குள் இருப்பதாக கூறி அதனை நிராகரித்து வந்துள்ளார்கள். 13வது சீர்திருத்தம் தான் தீர்வு எனக்கூறி இந்திய நாட்டின் பொம்மைகள், எடுபிடிகள் அல்லது கூலிகள் இங்கு அரசியலில் செயற்பட்டுக்கொண்டு இருந்தும்கூட அவர்கள் இங்கு தேர்தல் கேட்டு வாக்குப் பெற முடியாத சூழ்நிலை தான் இங்கு உள்ளது.

13வது சீர்திருத்தத்தை நியாயப்படுத்துவதற்காக அது தீர்வல்ல, இருக்கிறதை தான் கேட்கிறோம், எமக்கு தேவையானது சமஷ்டி, சுயநிர்ணயம் போன்ற விடயங்களை கூறித்தான் தமிழ் மக்கள் மத்தியில் அதனை திணிக்க பார்க்கின்றனர்.

இந்தியாவில் இருந்து வந்தவர்கள் இங்கு வந்து தமது முகவர்களைத்தான் சந்தித்தார்களே தவிர பொதுமக்களை சந்திக்கவில்லை. தாங்களே 13ஐ அமுல்படுத்துமாறு கூறிவிட்டு வந்து, இங்கு இருக்கின்ற முகவர்கள் அதனை கதைக்கும் போது ஏதோ ஈழத்தமிழர்கள் அதனை ஏற்றுக்கொள்வதாக கூறுவது பொருத்தமற்ற கருத்து.

நாங்கள் பாதிக்கப்பட்ட, இன அழிப்புக்குள்ளான ஒரு இனம். போருக்கு பின்னர் தொடர்ச்சியாக இன் அழிப்புக்கு உட்பட்டுள்ள ஒரு இனம். இவை அனைத்திற்கும் காரணம் இந்த ஒற்றையாட்சிக்குள் உள்ள கட்டமைப்புகள். 13வது சீர்திருத்தம் ஒரு துளியளவு கூட தமிழ் மக்களை பாதுகாக்கவில்லை இந்நிலையில் அதனை ஏற்றுக்கொள்ள போவதில்லை – என அவர் மேலும் தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments