அத்தியாவசிய உதவிகள் தேவைப்படும் நிலையில் 7 மில்லியன் மக்கள்!

You are currently viewing அத்தியாவசிய உதவிகள் தேவைப்படும் நிலையில் 7 மில்லியன் மக்கள்!

பொருளாதார நெருக்கடியின் விளைவாக உணவு, கல்வி மற்றும் சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் தொடர்ந்து சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம், நாடளாவிய ரீதியில் சுமார் 7 மில்லியன் மக்கள் அத்தியாவசிய உதவிகள் தேவைப்படும் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் விளைவாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 2.9 மில்லியன் மக்களுக்கு உதவும் நோக்கில் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் மனிதாபிமானத்தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் செயற்திட்டத்தின் ஊடாக இதுவரையில் 98.1 மில்லியன் டொலர் நிதி திரட்டப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியினால் பெருமளவான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ளது. நாளாந்தக் கூலித்தொழில்வாய்ப்புக்களில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியினால் பெருந்தொகையானோர் தமது வருமானத்தை இழந்திருக்கின்ற போதிலும், அன்றாட வாழ்க்கைச்செலவு தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்றது.

இது சமூகத்தின் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் அதேவேளை, பொதுமக்கள் தமது அன்றாட உணவுத்தேவையைப் பூர்த்திசெய்துகொள்வதற்குப் பல்வேறு மாற்றுவழிகளைக் கையாளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோன்று கல்வி மற்றும் மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட சுகாதாரசேவை கிடைப்பனவில் நிலவும் சவால்கள் இன்னமும் தொடர்கின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் மனிதாபிமானத்தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் செயற்திட்டத்தின் ஊடாகக் கடந்த புதன்கிழமை வரையான காலப்பகுதியில் 1,246,000 பேர் உணவுக்கான அல்லது நிதிக்கான காசோலை உதவியைப் பெற்றிருக்கின்றார்கள். அதேபோன்று 973,000 பேர் விவசாய மற்றும் வாழ்வாதார உதவிகளையும், 2.3 மில்லியன் பேர் போசணைசார் உதவிகளையும், 311,000 பேர் சுகாதார உதவிகளையும், 564,000 பேர் கல்விசார் உதவிகளையும் பெற்றிருக்கின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments