அனர்த்தபகுதியில் கட்டப்பட்ட வீடுகள் முறையான அனுமதியுடனேயே அமைக்கப்பட்டன!

You are currently viewing அனர்த்தபகுதியில் கட்டப்பட்ட வீடுகள் முறையான அனுமதியுடனேயே அமைக்கப்பட்டன!

நோர்வேயின் கிழக்குப்பகுதியில், தலைநகர் ஒஸ்லோவை அண்டிய “Gjerdrum” பகுதியில் 30.12.2020 அன்று அதிகாலை நிலச்சரிவுக்கு உள்ளான பகுதியில் அமைக்கப்பட்ட குடியிருப்புக்கள், முறையான அரசு அனுமதியுடனேயே அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தம் ஏற்பட்ட இடம், சதுப்பு / களிமண்ணால் சூழப்பட்ட இடமென்பதால் அங்கு பெரும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான அதியுயர் வாய்ப்புக்கள் இருந்ததாகவும், அதனால், அங்கு குடியிருப்புக்கள் மற்றும் ஏனைய கட்டடங்களை அமைக்கும்போது நிலச்சரிவுக்கான ஆபத்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமென்றும் பல தடவைகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், எனினும் அவற்றையும் மீறி அவ்விடத்தில் குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டதாகவும் விசனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எனினும், இது விடயம் தொடர்பில் கருத்துரைத்த, அவ்விடத்தில் 2008 ஆம் ஆண்டில் குடியிருப்புக்களை அமைக்கும் வேலைத்திட்டத்துக்கு பொறுப்பாகவிருந்த “Odd Sæther” என்பவர் தெரிவிக்கையில், நிலச்சரிவு தொடர்பான அபாயம் முன்கூட்டியே ஆராயப்பட்டு, அதை தடுப்பதற்கான, விதந்துரைக்கப்பட்ட முன்னேற்பாடுகள் அனைத்தும் சுட்டவரைபுக்கு உட்பட்டு செயற்படுத்தப்பட்ட பின்பே அங்கு குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரது கருத்தை சரியானதென உறுதி செய்திருக்கும் நோர்வேயின் “புவி தொழிநுட்ப நிறுவனம் / Norges Geotekniske Institutt”, சர்ச்சைக்குரிய இடத்தில் அமைக்கப்பட்ட குடியிருப்புக்கள் தொடர்பான விடயங்களை தான் ஆய்வுக்கு உட்படுத்தியதாகவும், 2007 ஆம் ஆண்டில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பில் இறுதி செய்யப்பட்ட ஆய்வறிக்கையின் பிரகாரம், அனுமதிக்கப்படும் அளவுக்கு அவ்விடத்தின் நிலமேற்பரப்பு உறுதியாக இருக்கிறது என சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறது.

எனினும், குடியிருப்புக்கள் அமைப்பதற்கு முன்னதாக, குறித்த இடங்களின் உறுதிப்பாட்டை ஆராய்ந்து சொல்வது மட்டுமே தனது பணியாக இருப்பதாக சொல்லும் மேற்படி நிறுவனம், இருந்தாலும், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் குடியிருப்புக்களை அமைப்பதற்கு முன்பாக, அங்கு பாதுகாப்பு நடைமுறைகளுக்கான முன்னேற்பாடுகளை முறையாக நடைமுறைப்படுத்துவது, நோர்வேயின் கட்டட மற்றும் திட்டமிடல் சட்டங்களுக்கு உட்பட்டே செய்யப்பட்டிருப்பதை தான் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அனர்த்தபகுதியில் கட்டப்பட்ட வீடுகள் முறையான அனுமதியுடனேயே அமைக்கப்பட்டன! 1
மஞ்சள் வண்ணத்தில் அடையாளமிடப்பட்ட பகுதி அனர்த்தப்பகுதி.

இருந்தாலும், அனர்த்தம் ஏற்பட்டதற்கான உறுதியான காரணமெதையும் கண்டறிவதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அவ்வாறான விசாரணைகள் மேற்கொள்ளப்படுமிடத்து, அதற்கான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக இருப்பதாக குடியிருப்புக்களை அமைக்கும் திட்டத்துக்கு பொறுப்பு வகித்த “Odd Sæther” தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள