அனைவருக்கும் தமிழ்முரசத்தின் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!

You are currently viewing அனைவருக்கும் தமிழ்முரசத்தின் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

அனைவருக்கும் தமிழ்முரசத்தின் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!! 1

 

தமிழ்முரசம் வானொலியின் ஊடகப்பணியானது இவ்வாண்டோடு 29வது ஆண்டுகளை தொடுகின்றது, எமது வானொலின் கொட்டொலியான பொங்கும் தமிழைப்பொலிவுறச்செய்வோம் எங்கள் மண்ணை விடிவுறச்செய்வோம் என்பதற்கு ஏற்ப எமது வானொலியின் ஊடகப்பணியானது உலகத்தமிழரோடு உறவாடி உணர்வுகளையும் தார்மீகக் கடமைகளையும் உணர்த்தி வருகின்றது.

நாம் கொண்ட கொள்கையில் சற்றும் வழுவாது பயணிப்பதற்கு எமது ஊடகப்பணியாளர்களின் உறுதியும் அற்பணிப்பும் அறமும் பெரும் பலமாக இருந்துவருகின்றது.

இந்த புதிய ஆண்டிலும் இனத்தின் விடுதலைக்கான விட்டுக்கொடுக்காத மாவீரர்களின் தாயக்கனவினை வென்றெடுக்கும் அரசியலை பலப்படுத்துவதற்கு எமது ஊடகப்பணியானது எப்போதும் உறுதுணையாக நிற்கும்.

புத்த மகாவம்ச சிந்தனையில் புரையோடிய சிங்கள அரசுகளின் சிந்தனையும் செய்வடிவமும் ஒருபோதும் தமிழ்மக்களின் உரிமையை வென்றெடுக்க வழிவிடப்போவதில்லை, மகாவம்சத்தின் கோட்பாடுகள் இணக்கப்பாடுகளை உருவாக்க விடப்போவதுமில்லை.

ஆனால் மாறி மாறி அதிகாரங்களை கைப்பற்றும் சிங்கள அரசுகள் தமிழருக்கு சமத்துவமான சமாதானமான வாழ்வை உறுதிப்படுத்தி நல்லிணக்கத்தை உருவாக்குவோம் என ஒவ்வொரு தேர்தல்காலங்களிலும் அறை கூவல் விடுவதும் அதிகாரங்களை கைப்பற்றியதும் மகாவம்ச கோட்பாடுகளுக்குள் கட்டுண்டு இனவாதசுரண்டல்களை உருவாக்குவதும் தொடர்கதையாகவே இருந்துவருகின்றது,இதே நிலைப்பாட்டில்தான் அநுரா தலைமையிலான அரசும் இயங்கிவருகின்றது.

ஆனாலும் ஒவ்வொரு சிங்கள அரசுகளும் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றுகின்றபோது சில அடிவருடி அரசியல் செய்கின்ற தமிழர்களை வைத்து பசப்பு வார்த்தைகளை அவர்களுக்கூடாக பரப்பி தமிழருக்கான அரசியலை வலுவிளக்க செய்கின்ற சூட்சும அரசியலையும் காலம் காலமாக செய்துவருகின்றார்கள், இன்றைய நிலையில் இந்த இழிநிலை அரசியல் இன்னும் வேகமாகவே முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அத்தோடு தமிழீழத்தேசியத்தலைவரின் சிந்தனையையும் செயல்வடிவங்களையும் அழித்து சிறு கூறுகளாக சிதைத்து பிரித்தாளும் தந்திரங்களையும் எதிரிகளும் உதிரிகளும் தங்களது கைக்கூலிகளை வைத்து செயற்படுத்த முயற்சிக்கின்றார்கள் இப்படிப்பட்ட ஆபத்தானவர்களின் மனநிலையை புரிந்துகொண்டு தமிழ்மக்கள் விலகி இருக்கவேண்டும் என்பதையும் நினைவூட்டுகின்றோம்.

ஆகவே இப்படியான சதிவலைப்பின்னலுக்குள் பிறழ்ந்துபோகாது தமிழின விடுதலைக்கான அரசியலையும் போராட்டங்களையும் பலப்படுத்துவதற்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்களும் தாய்நிலத்தில் வாழும் தமிழ்மக்களும் தமிழக தொப்புள்கொடி உறவுகளும் அடம்பன் கொடியாக திரண்டு ஒரே தமிழ்த்தாயின் கொடியாக நிற்கவேண்டுமென பிறந்திருக்கும் ஆங்கில புத்தாண்டுச்செய்தியில் தெரிவித்துக்கொள்கின்றோம்.

-தமிழ்முரசம் வானொலி-

பகிர்ந்துகொள்ள

Leave a Reply