அமெரிக்காவை நம்பியிராமல் தனியான கூட்டுப் படையணியை உருவாக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்!

You are currently viewing அமெரிக்காவை நம்பியிராமல் தனியான கூட்டுப் படையணியை உருவாக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்!

பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளைச் சமாளிக்க ஏதுவாக நேட்டோவுக்குப் புறம்பாக 5,000 துருப்புக்களைக் கொண்ட தனியான ஐரோப்பிய ஒன்றிய கூட்டு இராணுவப் படையணி ஒன்றை உருவாக்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகின்றது.

அமெரிக்காவை நம்பியிருக்காமல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான கூட்டுப் படையணியை 2025-ஆம் ஆண்டுக்குள் உருவாக்குவதற்கான வரைவுத் திட்டத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் தயாரித்துள்ளது.

பல்வேறு நெருக்கடிகளில் தலையிட முழுமையாக அமெரிக்காவை நம்பாமல் 2025-க்குள் 5,000 துருப்புக்களைக் கொண்ட கூட்டு இராணுவப் படையை உருவாக்கும் நோக்கில் இதற்கான வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

துரித பதிலளிப்புத் திறன் கொண்ட மூப்படைகளையும் உள்ளடக்கிய இந்த கூட்டுப் படையணியை உருவாக்குவது தொடர்பான வரைவுத் திட்டம் அடங்கிய நவம்பர் 9 திகதியிட்ட 28 பக்க இரகசிய ஆவணம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த இரகசிய ஆவணத்தை தாங்கள் பார்த்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் நேற்று திங்கள்கிழமை மாலை பிரஸ்ஸல்ஸில் கூடி இந்தத் திட்டம் பற்றி சுருக்கமாக விவாதித்தனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இறுதி வரைவுத் திட்டத்தைத் தயாரிக்கும் நோக்குடன் இன்று செவ்வாய்க்கிழமையும் இந்தச் சந்திப்பு தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

முழு அளவிலான இராணுவ நெருக்கடியின்போது நிலைமையைச் சமாளிக்க வேகமாகவும் வலிமையாகவும் செயற்படக்கூடியவாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தனியான கூட்டுப் படையணி தேவை என இது தொடர்பான வரைபில் தெரிவிப்பட்டுள்ளது.

உடனடி அச்சுறுத்தல்களுக்கு நாம் பதிலளிக்க வேண்டும் அல்லது நெருக்கடி சூழ்நிலைகளின் போது விரைவாகச் செயற்பட வேண்டும். உதாரணமாக மீட்பு மற்றும் வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கும் உதவும் வகையில் நாங்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் திட்ட வரைபு வலியுறுத்துகின்றது.

அனைத்து 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்தக் கூட்டுப் படையணியில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோவில் ஐரோப்பிய ஒன்றிய கூட்டாளிகள் உள்ளபோதும் நீண்ட தூரம், இராணுவ தளபாடங்களை உடனடியாக நகர்த்துதலில் உள்ள சிக்கல் மற்றும் கட்டளையிடுவதில் உள்ள தாமதங்கள் குறித்த எண்ணத்தின் வெளிப்பாடாகவே ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டுப் படையணித் திட்டத்தின் அடிப்படை என ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments