அமெரிக்க அதிபரை உடனடி பதவிநீக்கம் செய்ய ஆலோசனைகள்!

அமெரிக்க அதிபரை உடனடி பதவிநீக்கம் செய்ய ஆலோசனைகள்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களை உடனடியாக பதவிநீக்கம் செய்வதற்கான வழிவகைகள் ஆராயப்பட்டு வருவதாக, அமெரிக்க வெள்ளைமாளிகை நகர்வுகளை அவதானித்துவரும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க நாடாளுமன்ற வளாகமும், காங்கிரஸ் சபைக்கட்டிடமும் அதிபர் டிரம்ப் ஆதரவாளர்களால் நேற்று சூழப்பட்டு கலவரங்கள் நடத்தப்பட்டதோடு, கலவரக்காரர்கள் காங்கிரஸ் சபையினுள் புகுந்து பொருட்களை சூறையாடியுள்ளதோடு, காங்கிரஸ் சபை பிரதானிகள் அலுவலகங்களுக்குள் புகுந்து அவமானம் செய்திருந்தார்கள்.

காங்கிரஸ் சபைக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அதிபர் டிரம்ப் ஆதரவாளரான பெண் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டதோடு, சுமார் 15 பேர் காயமடைந்துமுள்ளார்.

மேற்படி அசம்பாவிதங்களை, அதிபர் டிரம்ப் அவர்களே தூண்டிவிட்டதாக கருத்துக்கள் வெளியிட்டுவரப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் தானே வென்றதாகவும், எனினும் எதிர்க்கட்சியினர் வெற்றியை தன்னிடமிருந்து கவர்ந்து கொண்டதாகவும் தெரிவித்திருந்த அதிபர் டிரம்ப் அவர்கள், தனது ஆதரவாளர்கள் நேற்று நடந்து கொண்ட முறையை நியாயப்படுத்துவது போலவும் சமூகவலையூடகங்கள் மூலமாக கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இதனையடுத்தது அவர்மீது உலகளாவிய ரீதியில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருவதோடு, அமெரிக்க அரச மட்டத்திலும் அவருக்கான எதிர்ப்புக்கள் உச்சநிலையை அடைந்துள்ளன. அதிபர் டிரம்ப் அவர்களின் சொந்தக்காட்சியை சார்ந்தவர்களும் அவர்மீதான கடும் கண்டனங்களை முன்வைத்துள்ளதோடு, அவரை தொடர்ந்தும் அதிபர் பொறுப்பில் நீடிக்க விடுவது ஆபத்தானது எனவும் கூறுகிறார்கள்.

அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கலவரங்கள், அரசை முறைதவறி கைப்பற்றுவதற்கான முயற்சியே என சர்வதேச மாற்றும் அமெரிக்க ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுவரும் நிலையில், அதிபர் டிரம்ப் அவர்களை தொடர்ந்து அதிபர் பொறுப்பில் நீடிப்பாரானால், மீண்டும் ஒரு கலவரத்துக்கு அவர் வழிவகுக்கலாமெனவும் அஞ்சப்படுகிறது.

அதிபர் டிரம்ப் அவர்களின் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னமும் இரு வாரங்களே இருக்கும் நிலையிலும், அவரை உடனடியாக பதவியிறக்கம் செய்வதற்காக அமெரிக்க அடிப்படைச்சட்டத்தின் 25 ஆவது நீட்சியை பயன்படுத்த முடியுமாவென தீவிர ஆய்வுகள் நடைபெறுவதாக தெரிவிக்கும் அமெரிக்க ஊடகங்கள், பதவி விலக்கலுக்கு குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயகக்கட்சி என இரு கட்சிகளிலிருந்தும் பெருமளவில் ஆதரவளிக்கப்படுவதாகவும் குறிப்பிடுகின்றன.

பகிர்ந்துகொள்ள