அரசியல் கைதிகள் விடுதலையினை வலியுறுத்தி வடக்கு கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு!

You are currently viewing அரசியல் கைதிகள் விடுதலையினை வலியுறுத்தி வடக்கு கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் இன்று (05) கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

யாழ். சாவகச்சேரி பஸ் நிலைய முன்றலில் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

COVID – 19 அபாயம் காணப்படுவதால் சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி முல்லைத்தீவு – மாங்குளம் A9 வீதியிலும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

பெண்கள் வாழ்வுரிமை கழகத்தின் ஏற்பாட்டில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆகியோர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி பதாகைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கிளிநொச்சி பழைய மாவட்ட செயலம் முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

எமது உறவுகளை சிறைகளில் மடிய விடவேண்டாம், தமிழ் அரசியல் கைதிகள் பயங்கரவாதிகள் இல்லை, கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு போன்ற வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

இதேவேளை, அம்பாறை – திருக்கோவில் பகுதியிலும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 10.30 மணிக்கு இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள