அரசியல் ரீதியான தன்முனைப்பின்றி வலிந்து காணாமலாக்கப்படலை முடிவுக்கு கொண்டுவர முடியாது!

You are currently viewing அரசியல் ரீதியான தன்முனைப்பின்றி வலிந்து காணாமலாக்கப்படலை முடிவுக்கு கொண்டுவர முடியாது!

லங்கை அரசாங்கங்கள் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை முடக்குவதற்கானதொரு கருவியாக வலிந்து காணாமலாக்குதலை பயன்படுத்தி வந்தமைக்கான நீண்டகால வரலாறு உண்டு.

வலிந்து காணாமலாக்கப்படல்களால் உயிர் வாழ்வதற்கான உரிமை, சித்திரவதைகளிலிருந்து விடுபடுவதற்கான உரிமை, விடுதலை மற்றும் நியாயமான வழக்கு விசாரணைகளுக்கு உட்படுவதற்கான உரிமை உள்ளிட்ட பல்வேறு மனித உரிமைகள் மீறப்படுகின்றன.

அரசியல் ரீதியான தன்முனைப்பின்றி, இந்த மோசமான நடைமுறையை முடிவுக்கு கொண்டுவர முடியாது என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமலாக்கப்பட்டு நேற்று (24) செவ்வாய்க்கிழமையுடன் 13 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், அதன் பொருட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பாதுகாப்பு படையினரால் நீங்கள் தடுத்துவைக்கப்படுவதை அல்லது காணாமலாக்கப்படுவதை கற்பனை செய்து பாருங்கள்.

நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்? நீங்கள் உயிருடன் இருக்கின்றீர்களா அல்லது உயிரிழந்துவிட்டீர்களா என்பது பற்றி யாரும் அறியாதவண்ணம் நீங்கள் தடுத்துவைக்கப்படுவதை கற்பனை செய்து பாருங்கள்.

நீங்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பதை  பாதுகாப்புத் தரப்பினர் மறுப்பதுடன், நீங்கள் இருக்கும் இடத்தை இரகசியமாக வைத்திருக்கின்றார்கள்.

உங்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. நீங்கள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றீர்களா? உங்களுக்கு அவசியமான உணவு, மருந்து என்பன வழங்கப்படுகின்றதா? அல்லது அவர்கள் உங்களை ஏற்கனவே படுகொலை செய்துவிட்டார்களா? என்பது குறித்து உங்களது அன்புக்குரியவர்களுக்கு எதுவும் தெரியவில்லை.

பல வருடங்கள் கடந்தும் உங்களுடைய விதியும், நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள் என்பதும் யாருக்குமே தெரியவில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் நீங்களும் மற்றுமொரு நபராக உள்ளடங்குகின்றீர்கள்.

13 வருடங்களுக்கு முன்னர், 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கு நேர்ந்தது இதுவே.

பல வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை. இந்த வழக்கில் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தொடர்ந்து போராடி வருகின்றபோதிலும், தற்போது வரை எந்தவொரு குற்றவாளியும் பொறுப்புக்கூறச் செய்யப்படவில்லை.

பிரகீத் எக்னெலிகொட ஓர் ஊடகவியலாளர் என்ற ரீதியில் அவரது தொழிலுக்காக மாத்திரம் இலக்குவைக்கப்படவில்லை. மாறாக, ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகளை வெளிப்படையாக விமர்சித்தமைக்காகவும் அவர் இலக்குவைக்கப்பட்டார்.

இலங்கை அரசாங்கங்கள் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை முடக்குவதற்கானதொரு கருவியாக வலிந்து காணாமலாக்குதலை பயன்படுத்தி வந்தமைக்கான நீண்டகால வரலாறு உண்டு.

வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டுக்குழுவின் முன் நிலுவையில் உள்ள பட்டியலை அடிப்படையாகக் கொண்டு நோக்குமிடத்து, உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவான இரண்டாவது நாடாக இலங்கை இருக்கின்றது.

கடந்த 1980ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் 60,000 – 100,000 வரையிலான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கும் என சர்வதேச மன்னிப்புச் சபை மதிப்பிட்டுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்படல்களால் உயிர் வாழ்வதற்கான உரிமை, சித்திரவதைகளிலிருந்து விடுபடுவதற்கான உரிமை, விடுதலை மற்றும் நியாயமான வழக்கு விசாரணைகளுக்கு உட்படுவதற்கான உரிமை உள்ளிட்ட பல்வேறு மனித உரிமைகள் மீறப்படுகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் அரசியல் ரீதியான முனைப்பின்றி, இந்த மோசமான நடைமுறையை முடிவுக்கு கொண்டுவர முடியாது என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments