ஒஸ்லோ:
கணினிகள், அலைபேசிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் மீதான அதிகப்படியான பாவனை, குறிப்பாக கையெழுத்துப் பழக்கத்தை குறைப்பதோடு, அடுத்த தலைமுறையின் அறிவாற்றல் (Cognitive) வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என நோர்வேயின் NTNU பல்கலைக்கழக நரம்பியல் பேராசிரியர் “Audrey van der Meer” எச்சரித்துள்ளார்.
அவரது ஆய்வுகளின்படி, கையால் எழுதும் போது மூளையின் பல பகுதிகள் ஒரே நேரத்தில் செயல்படுகின்றன எனவும், இது நுண் இயக்கத் திறன் (fine motor skills), கவனம், நினைவாற்றல் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்துகிறது எனவும், ஆனால் விசைப்பலகை (keyboard) அல்லது AI கருவிகளை மட்டுமே நம்பும்போது, இந்த மூளைத் தூண்டுதல் குறைகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குழந்தைகளும், இளைஞர்களும் தொடர்ந்து கையால் எழுதும் பழக்கத்தை இழந்தால், மொழித்திறன், கவனச்செலுத்தல் மற்றும் நினைவாற்றலை வளர்க்கும் முக்கியமான மூளைப் பயிற்சியை அவர்கள் இழக்க நேரிடும் எனவும் பேராசிரியர் எச்சரிக்கிறார்.
மேலும், இன்றைய இளைஞர்கள் ChatGPT போன்ற AI கருவிகளை, பிறந்தநாள் வாழ்த்துகள், மன்னிப்பு கடிதங்கள், காதல் கடிதங்கள் போன்ற தனிப்பட்ட எழுத்துக்களுக்குக்கூட பயன்படுத்துவது கவலைக்குரியது எனவும் குறிப்பிட்டுள்ள அவர், இதனால் மனிதர்களின் சுய சிந்தனை மற்றும் படைப்பாற்றல் குறையக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
அதேநேரத்தில், கையெழுத்து என்பது வெறும் எழுதும் முறையல்ல என்பதோடு, அது ஒரு கலாச்சார மரபுமாகும் எனவும் கூறும் பேராசிரியர், கையால் எழுதப்பட்ட கவிதை, வாழ்த்து அல்லது கடிதம் போன்றவை தனிப்பட்ட உணர்வுகளையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்தும் அரிய வெளிப்பாடுகளாகும் எனவும் குறிப்பிடுகிறார்.
இந்தக் கருத்துகள், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதாக அல்லாமல், மாறாக, AI மற்றும் டிஜிட்டல் கருவிகளை உதவிக்கருவிகளாகப் பயன்படுத்தியபோதும், கையெழுத்து, சுயசிந்தனை மற்றும் படைப்பாற்றலை தொடர்ந்து வளர்ப்பது மிகவும் அவசியம் என்பதே இங்கு முக்கியமாக கவனிக்கக்கூடியதாகும்.
18.07.2026






