அறுபடாத ஆணிவேர்!

அறுபடாத ஆணிவேர்!

கந்தகக்கரங்கள்
சொந்தங்களின்
குரல்வளையை
நெரிக்கப்போகிறது.

மகிந்த சிந்தனையில்
ஈழத்தில்
மானுடம் மண்ணில்
புதைக்கப்படப்போகிறது.

சர்வதேசமே

சர்வதேசமே

ஊரை உறவை
உன் கருணையால்
மீட்டெடுத்து
அடுத்தவனைப்போல்
வாழ்வின் வசந்தத்தில்
எம்மை நாமே ஆழ
வாழ விடு.

எத்தனை எத்தனை குரல்கள்
எத்தனை எத்தனை குமுறல்கள்

கேட்கவில்லையே…

நீங்கள் சொன்னதெல்லாம்
நாங்களே 
எமது மண்ணை விட்டு
வெளியேறவேண்டுமென்பதுதான்.

ஆண்டாண்டு காலமாய்
பாட்டன் பூட்டியோடு
வாழ்ந்த மண்ணை விட்டு
பண்பாட்டு விழுமியங்களோடு
பழகிய ஊரை விட்டு
கொத்தணிக்குண்டுகளால்
கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட
உறவுகளின் உடலங்களை விட்டு

பசியும் பட்டிணியும்
உயிரை வெட்ட
நோயும் பிணியும்
உடலை வதைக்க
வெறும் கூடுகளாய்
வெளியில் வந்தோம்.

ஆனாலும் என்ன ?

அடுத்தவேளை உணவுக்காய்
அங்கலாய்த்து நிற்கும் 
அவலக் கோலம்.
காலைக்கடனுக்கும்
குடிநீருக்கும்
குளிநீருக்கும்
வரிசையில் நிற்கும்
வதைக்கோலம்.
ஈரைந்து மாதம் சுமந்து
ஈன்றெடுத்த பிள்ளையை
ஈனரின் புனர்வாழ்வு பூதத்துக்கு
காவுகொடுக்கும் காலம்.

மீண்டுமொரு
மறைமுக இனச்சுத்தீகரிப்புக்கு
இரையாகிப்போனோம்.

இப்போது
ஒன்று மட்டும் புரிகிறது
ஒட்டுமொத்த உலகத்தின்
அரசியல் ஆசைக்குள்ளும்
வியாபார பசிக்குள்ளும்
நசிங்கிப்போனோம்
என்பதுதான்.

ஆனாலும்
ஆணிவேர் அறுபடாத
ஆலமரம் துளிர்விடும்
மீண்டும்
கிளை பரப்பும்
என்பதுதான்
யதார்த்தம்.

விடுதலை வேணவா என்றால்
கொடுக்கும் விலைகள் அதிகம்
அடுக்கடுக்காய்
சோதனைகளும் வேதனைகளும்
எமைச்சேர்ந்தாலும்
நேரிய சிந்தனையில்
இலக்கின் எல்லை வரை
நிமிரவேண்டும்.
இதர்க்கு
தேசியத்தலைவரே
உதாரணம்.

சதிகளும் சவால்களும்
துரோங்களும் துயரங்களும்
சூழ்தபோதெல்லாம்
நம்பிக்கையை மட்டுமே
மூலதனமாக கொண்டு
விடுதலை தீயை
மூட்டியவர்

இந்த
நம்பிக்கையில் மட்டுமே
முட்கம்பி வேலிகளுக்குள்
முடங்கிக்கிடக்கிறோம்.

வெம்பி வெம்பி
அழுவதெல்லாம்
விடியலுக்காக
மட்டும்தான்

அந்த
நம்பிக்கை ஒளி
ஈற்றினில் இளையவரின்
முகத்தினில்
சுடர்வதை உணர்கிறோம்.

ஊழி ஆடிய கோரத்தாண்டவத்தில்
பூத்துக்குலுங்கிய புன்னகை தேசம்
நாற்று மேடையாய் கிடக்கிறது

இந்த
உயிர் நாற்றுமேடைகள்
நாளை
புது விளைச்சலை
பிரசவிக்கும.

தூயவன்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments