ஆனைறவுப் பெருந்தளத்தின் வெற்றிக்கான தொடக்கப்புள்ளி!!

ஆனைறவுப் பெருந்தளத்தின் வெற்றிக்கான தொடக்கப்புள்ளி!!

இன்று யாழ் வடமாராட்சி கிழக்கின் மணல் மண்ணுக்குள் புதைந்து போயிருக்கும் இந்த நினைவுச் சின்னம் எங்களின் ஒரு மாபெரும் பொக்கிஷம் ஆகும். 

இந்த கருங்கல் என்ன நோக்கம் கொண்டு செதுக்கப்பட்டது? யாரால் நாட்டப்பட்டது? எதற்காய்  நாட்டப்பட்டதென்பதை ஒளிப்படம் சொல்வதால் யான் சொல்லத் தேவையில்லை.

ஆனைறவுப் பெருந்தளத்தின் வெற்றிக்கான தொடக்கப்புள்ளி இங்கேதான்  மாவீரர் இரத்தத்தினால் எழுதப்பட்டது.   இந்த நினைவுச் சின்னம் எந்தனது நினைவுப் பெட்டகம்தனை மெல்லத் திறக்கின்றது. 

யானும் ஒரு காலத்தில்  இந்த குடாரப்பு தரையிறக்கப் பங்காளி என மார்தட்டி சொன்னவன்தான். இன்று அந்த நிலை இல்லையாதலால் என் நினைவில் உள்ளதை ஒரு பித்தன் போல உளறப்போகின்றேன். கொஞ்சம் கேளுங்களேன். 

குடாரப்பு தரையிறக்கத்தில் போர்ப்படகிலிருந்து நாங்கள் தரையிறங்க முன்னரே பல முனைகளில் இருந்தும் தொடர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

போர்ப்படகில் அணியத்தில் நாங்கள் மருந்துப் பொருட்கள்,
மருத்துவ உபகரணங்களுடன் இருந்தோம். 

சுருங்கக்கூறின் ஒரு சிறு சத்திர சிகிச்சைக் கூடத்தையும் கடல்வேங்கைகள் எமக்காய் எம்முடன் சுமந்து வந்தனர்.

கடலில் கடற்படை டோறாக்கள் தாக்கத் தொடங்கின. கரும்புலிப்படகுகள் எமைப்பாதுகாத்த வண்ணம் எங்கள் அருகே வந்து கொண்டிருந்தபடியால் டோறாக்கள் எங்கள் அருகில் வந்து தாக்கத் தயங்கின.

எங்களுக்கு பின்னால் இயந்திர அறையில் எங்கள் படகையும் ராடார் கருவியையும் இயக்கிய கடற்புலி போராளிக்கு துப்பாக்கிச் சூட்டுக்காயம் ஏற்பட்டது.

சுண்டிக்குளம் கரை மணலில் எம் வீரத்தளபதி சூசை அவர்கள் மற்றும் மருத்துவப் பொறுப்பாளர் திரு.இரேகா ஆகியோரின் ஆசியுடன் கடலில் தொடங்கிய எங்கள் கடல்பயணமானது 05 பாகம் ஆழமான கரையினை அண்டியபடியே தொடர்ந்தது.

அந்த நாள் கடல்சீற்றம் அதிகமாய் இருந்த நாள் அதைவிட இலங்கை கடற்படையின் தாக்குதல் காரணமாக படகுகள் கடலில் மூழ்க நேரிட்டால் நீச்சலடித்து கரையை நோக்கிச் செல்வதற்கு ஏற்பாடகவே ஆழ்கடலை அண்டாமல் கரையை அண்டிச் செல்லுங்கள் என கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கடலோடிகளுக்கு
அறிவுறுத்தி இருந்தார்.

பொதுவாக விமானப்பயணத்தில் நாடுகளின் பெயர்கள், முக்கிய இடங்களின் பெயர்கள் சொல்வதைப் போல ஒவ்வொரு ஊரின் கடற்கரைகளை அண்டிச் செல்லும் போதும் அவ்வூர்களின் பெயர்கள் எங்களுக்கு தொடர்ச்சியாக படகுக் கொமாண்டரால் அறிவிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தது.

வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, ஆழியான்,மருதங்கேணி,தாளையடி, செம்பியன்பற்று கடற்கரைகளை வெற்றிகரமாகத் தாண்டி மாமுனையை அடைந்தது.

மாமுனைக் கிராமத்தை அடைந்தவுடன் மாமுனைச் சந்தியில் ஏலவே தாக்கியழிக்கப்பட்ட மாமுனை மினிமுகாமிலிருந்து தப்பிய இராணுவத்தைச் சேர்ந்த ஒருவன் தரையிலிருந்து தாக்கியதால் இந்த கடல்வேங்கை விழுப்புண் அடைந்தான்.

மின்னலென விரைந்து முதலாவது சிகிச்சையை களமருத்துவர் வண்ணன் செய்தார்.

படகிலிருந்தபடியே எமைச் சுதாகரித்துக் கொண்டு மேலும் சிறிது தூரம் பயணப்பட்டு குடாரப்பில் தரையிறங்கினோம்.

ஆம், எமது மகத்தான மருத்துவ பணி படகிலேயே ஆரம்பித்தது. பொதுவாகவே சமர்களின் பின்னே நின்று சேவை செய்யும் நாங்கள் சமர்க்களத்தின் நடுவே நின்று உயிர்காத்தமை மறக்க முடியாத ஓர் அனுபவம். அதை அடுத்த பதில் சொல்கின்றேன்.

அதற்கு முன்பாக குடாரப்பு தரையிறக்கத் தாக்குதலிலும் அதைத் தொடர்ந்த வந்த நாட்களில் வீரச்சாவு அடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் சமர்பல வென்ற சமர்களநாயகனுக்கும்
வீரவணக்கம்.

வயவையூர் அறத்தலைவன்

4 3 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
1 கருத்து
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments
Olimaran
2 மாதங்களுக்கு முன்பு

An excellent document of Tamil speaking people.