ஆபத்தை சந்திக்கும் நோர்வேயின் உலக தானிய சேமிப்பு மையம்!

ஆபத்தை சந்திக்கும் நோர்வேயின் உலக தானிய சேமிப்பு மையம்!

நோர்வேயில் அமைக்கப்பட்டிருக்கும் உலக தானிய சேமிப்புமையம் ஆபத்தை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வேயின் ஆளுமைக்குட்பட்ட “Svalbard” தீவில், மலையை குடைந்து அமைக்கப்பட்டிருக்கும் மிகவும் விசேடமான கட்டடமொன்றில், உலகெங்கிலும் இருந்து சேமிக்கப்பட்ட தானியவகைகள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. இயற்கை அழிவுகளால் உலகில் பெரும் பஞ்சம் ஏற்பட்டு, உணவுத்தேவைக்கான தானியங்களுக்கு பற்றாக்குறை ஏற்படுமிடத்து, தேவையான இடங்களுக்கு வழங்கும் நோக்கோடு, உலகெங்கிலுமிருந்து அரியவகை தானியங்களை எடுத்து பதப்படுத்தி உறைநிலையில் வைத்திருப்பதற்காக மேற்படி கட்டடம் பெரும் பொருட்செலவில் இத்தீவில் கட்டப்பட்டுள்ளது.

வருடம் முழுவதும் உறைபனியினாலும், கடினமான பனிப்பாறைகளாலும் சூழப்பட்ட “Svalbard” தீவு, இயற்கை அனர்த்தத்தினாலோ, இயற்கை மாறுதலினாலோ அல்லது போரினாலோ பாதிப்புக்களுக்கு உள்ளாக முடியாத இடமாக தேர்வு செய்யப்பட்டு, 2004 ஆம் ஆண்டில் இங்கு தானியங்களை சேமித்து வைப்பதற்கான விசேட கட்டடத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பமாகின.

கடுமையான, உறுதியான மலையை குடைந்து பெரும் சேமிப்பு களஞ்சியமொன்றை அமைத்து, அரிய வகையான தானியங்களை பதப்படுத்தி, அவற்றிலிருந்து மீண்டும் விவசாயம் மூலம் தானியங்களை விளைவிக்கக்கூடிய முறையில் அவற்றை உறைநிலையில் சேமித்து வைப்பதற்காக, மின்சாரத்தில் இயங்கும் பாரிய இயந்திரங்கள் இக்கட்டடத்தில் பொருத்தப்பட்டுள்ளன. தற்செயலாக மின்தடை ஏற்பட்டு, உறைநிலையை ஏற்படுத்தும் இயந்திரங்கள் செயலிழந்தாலும், இயற்கையாகவே இவ்விடத்தில் இருக்கக்கூடிய உறைநிலையான காலநிலையால், தானியங்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் என்பதும் இவ்விடத்தை ஆய்வாளர்கள் தேர்ந்தெடுத்தமைக்கான முக்கிய காரணமென சொல்லப்படுகிறது.

2008 ஆம் ஆண்டில், உலகத்தலைவர்கள் முன்னிலையில் இந்த தானிய சேமிப்பகம் திறந்துவைக்கப்பட்டபோது, இசேமிப்பகத்தின் நோக்கத்திற்காகவும், கட்டட வடிவமைப்பிற்க்காகவும் “Times” இதழின் சிறப்பு விருதும் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், வருடம் முழுவதும் உறைநிலையிலேயே இருக்கும் இடத்தில் இக்கட்டடம் அமைக்கப்பட்டிருந்தாலும், இப்போது, உறைபனி மெதுவாக உருகும் காலப்பகுதியில், நீர் இக்கட்டடத்துக்குள் உட்புகுவதாக கண்டறியப்பட்டுள்ளது. நிலமட்டத்திலிருந்து கீழ்நோக்கியதாக, ஆழத்துக்கு செல்லக்கூடிய முறையில், இக்கட்டடத்தின் நுழைவாயில் அமைக்கப்பட்டபோது, மிகப்பாரிய உருக்கிலானா குழாய் ஒன்று பொருத்தப்பட்டு அதனூடாகவே இக்கட்டடத்தின் நுழைவாயில் அமைக்கப்பட்டதாகவும், நிலமட்டத்திலிருந்து தாழ்வாக நுழைவாயில் ஆழம் நோக்கி அமைந்திருப்பதால், நிலமட்டத்திலிருந்து உருகும் பனிநீர் இலகுவாக உள்நுழைந்து விடுவதால், உருக்கினாலான நுழைவாயிலின் உறுதிப்பாடு பலமிழந்து வருவதாக முன்னதாக கண்டறியப்பட்டிருந்தது.

காலத்துக்குக்காலம் பராமரிப்பு வேலைகள் பெரும் பொருட்செலவில் செய்யப்பட்டதோடு, நுழைவாயில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டு, கட்டடத்துக்குள் நீர் கசியாதவாறு செயற்கையான பாதுகாப்பு ஏற்படுகளும் செய்யப்பட்டிருந்தாலும், இப்போது மீண்டும் கட்டடத்துக்குள் வேகமான நீர்க்கசிவு உள்நுழைவதாக சொல்லப்படுகிறது. மனிதர்களின் கண்காணிப்பு இல்லாமல் முழுக்க முழுக்க இயந்திரங்கள் மூலம் இயக்கப்படக்கூடிய இத்தானிய சேமிப்புக்களஞ்சியம் மேலும் சுமார் 193 மில்லியன் நோர்வே குறோணர்கள் செலவில் திருத்தியமைக்கப்பட இருப்பதாகவும், அவசியமான மேம்பாடுகள் செய்யப்படாவிடின், உலகிலேயே மிக அதிகமான தானியங்கள் சேமிக்கப்பட்டுள்ள இக்கட்டடம் சிதைவடைவதோடு, அங்கு சேமிக்கப்பட்டிருக்கும் தானியங்களும் பாதிக்கப்படுமெனவும் கூறப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள