ஆபிரிக்க நாடுகளில் மதுபான உற்பத்தியில் நோர்வேயின் முதலீடுகள்! இரட்டை நிலைப்பாடென கண்டனம்!!

ஆபிரிக்க நாடுகளில் மதுபான உற்பத்தியில் நோர்வேயின் முதலீடுகள்! இரட்டை நிலைப்பாடென கண்டனம்!!

எண்ணெய் வர்த்தகத்தின் மூலம் கிடைக்கப்பெறும் அதீத வருமானத்தை, ஆபிரிக்க நாடுகளில் இயங்கும் மதுபான உற்பத்திச்சாலைகளில் நோர்வே முதலீடு செய்துள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.

நோர்வேயில் இறுக்கமான மதுபாவனை சட்டதிட்டங்களை வைத்திருக்கும் நோர்வே, பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணத்தை ஆபிரிக்க நாடுகளில் இயங்கும் மதுபான உற்பத்திச்சாலைகளில் முதலீடு செய்துள்ளமையானது, நோர்வேயின் இரட்டைக்கொள்கையை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள ஆபிரிக்க நாடுகளான, மலாவி, போட்ஸ்வானா, உகண்டா மற்றும் லெசோத்தோ போன்ற நாடுகளில் மதுபான உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக, மதுபானச்சாலைகளில் நோர்வே பெருந்தொகைப்பணத்தை முதலீடு செய்திருப்பதானது, குறித்த நாடுகளில் மக்களிடையே மதுபாவனையை ஊக்கப்படுத்துவதனால், ஆண்கள் பெண்கள் மாத்திரமல்லாது, இளவயதினரும் மதுபாவனைக்கு அடிமையாகும் நிலை தோன்றியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதயநோய்கள், சுவாசநோய்கள், புற்றுநோய், நீரிழிவு, மனநோய் போன்றவற்றால் உலகெங்கும் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், குறிப்பிட்ட இந்நோய்களை எதிர்த்து போராடுவதற்கான பொருளாதார உதவிகளை வழங்கும் கடப்பாடை கொண்டிருக்க வேண்டிய நோர்வே, அதற்கு  மாறாக, மனிதர்களை சிறுகச்சிறுக கொல்லக்கூடிய மதுபானவகைகளை உற்பத்தி செய்வதில் முதலீடுகளை செய்துள்ளமையானது தார்மீகமாகாது எனவும் விசனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நோர்வேயின் இவ்வகையான முதலீடுகள், ஐக்கியநாடுகள் சபையின் உலக சுகாதார மேம்பாடுகள் தொடர்பிலான வேலைத்திட்டங்களின் வினைத்திறனை குறைப்பதாகவும், குறித்த ஆபிரிக்க நாடுகளின் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளையும் உண்டாக்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருளான “கனாபிஸ்” பாவனையை தற்போது பல நாடுகள் சட்டபூர்வமாக்கிவரும் நிலையில், கடந்தகாலங்களில் வட அமெரிக்காவில் “கனாபிஸ்” உற்பத்தியிலும் நோர்வே பல மில்லியன் டொலர்களை முதலீடு செய்திருந்தமையும், பின்னர் பலத்த அழுத்தங்களுக்கு அடிபணிந்து அந்த முதலீடுகளை நோர்வே விலக்கிக்கொண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய இந்த மதுபான உற்பத்தியில் முதலீட்டிருக்கும் நோர்வே, அந்த முதலீடுகளை விலக்கிக்கொண்டு, மக்களின் சுகாதார மேம்பாடுகளுக்கான உதவிகளை வழங்க முன்வரவேண்டுமென நோர்வேயின் “நெறிமுறைகள் குழு” வேண்டுகோள் விடுத்துள்ளது.

மதுபான பாவனையை பொறுத்தவரை உள்நாட்டில் மிக இறுக்கமான கொள்கைகளை பின்பற்றிவரும் நோர்வே, தனது நாட்டுக்கு வெளியே  முற்றிலும் நேரெதிரான கொள்கையோடு, மதுபான உற்பத்தியை ஊக்குவிப்பதோடு, மதுபான உற்பத்திச்சாலைகளின் முதலாளிகள் அந்தந்த நாடுகளின் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்த வழிவகைகளையும் ஏற்படுத்திக்கொடுக்கிறது எனவும் விசனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த