இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக, நோர்வேயில் போராட்டம்! காவல்துறை தலையீடு!!

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக, நோர்வேயில் போராட்டம்! காவல்துறை தலையீடு!!

இந்தியாவில் எழுச்சியோடு நடைபெற்றுவரும் விவசாயிகளின் அரசுக்கெதிரான போராட்டத்துக்கு தார்மீக ஆதரவு தெரிவித்து, நோர்வே தலைநகர் ஒஸ்லோவில், இந்திய வம்சாவளியினர் தார்மீக ஆதரவு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

இந்திய மத்திய அரசு கொண்டுவர இருப்பதாக சொல்லப்படும் புதிய விவசாய கொள்கை சட்டமூலம், விவசாயிகளின் எதிர்காலத்தை பாதிக்குமெனவும், புதிய உத்தேச சட்டமூலம், விவசாய உற்பத்திகளின் விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறுவிடயங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆளுமையின்கீழ் வந்துவிடுமெனவும், இதனால், விவசாயிகள் தங்கள் உற்பத்திகளுக்கு நியாயமான விலையை பெற்றுக்கொள்ளமுடியாது என்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும், இந்தியா எங்கும் விவசாயிகள் அரசுக்கெதிராக கிளர்ந்தெழுந்துள்ளனர்.

இதேவேளை, இந்தியாவில் போராடிவரும் விவசாயிகளுக்கு தார்மீக ஆதரவை வெளிப்படுத்துமுகமாக, நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இந்திய வம்சாவளியினர் போராட்டமொன்றை ஒழுங்கு படுத்தியிருந்தனர்.

தலைநகரத்தையும், ஒஸ்லோவின் பிரதான பன்னாட்டு விமான நிலையத்தையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலையான E – 6 மற்றும் இன்னுமொரு அதிவேக நெடுஞ்சாலையான E – 16 ஆகிய நெடுஞ்சாலைகளில் மெதுவாக வானங்களை செலுத்துவதன்மூலம், மக்களின் கவனத்தை ஈர்ப்பதோடு, இந்திய விவசாயிகளின் நியாயமான போராட்டத்தை நோர்வே சமூகத்தினரிடையே வெளிப்படுத்துவதே இப்போராட்டத்தின் நோக்கமென இதனை ஒழுங்கமைத்த “Nirmaljit Singh” தெரிவித்துள்ளார்.

காவல்துறையிடம் முன்னனுமதி பெற்றபின்பே இப்போராட்டத்தை ஒழுங்கமைத்ததாகவும், 110 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய இந்நெடுஞ்சாலைகளில் 80 அல்லது 90 கி.மீ. வேகத்தில் வாகனங்களை செலுத்தி செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கும் “Nirmaljit Singh”, எனினும் துரதிர்ஷ்டவசமாக, இப்போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர், அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறியிருப்பதால், காவல்துறை தலையிடவேண்டி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, காவல்துறை தெரிவித்தபோது, 110 கி.மீ. வேகத்தில் வாகனங்கள் செல்லக்கூடிய அதிவேக நெடுஞ்சாலைகளில், 20 – 30 கி.மீ. வேகத்தில் போராட்டத்தில் கலந்துகொண்ட வாகனங்கள் சென்றதாகவும், இது அதியுயர் ஆபத்துக்களை விளைவிக்கக்கூடியது என்பதால், தாம் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டியதாகி விட்டதென தெரிவித்துள்ளது.

தவிரவும், போராட்டத்தில் கலந்துகொண்டு மிகக்குறைந்த வேகத்தில் சென்ற வாகனங்கள், அபாய சமிக்ஞை விளக்குகளை ஒளிரவிட்டதோடு, வாகனங்களில் பதாதைகளையும் தொங்க விட்டிருந்ததாகவும், இவை போக்குவரத்துக்கு மிகுந்த ஆபத்தை உண்டாக்கக்கூடியவை எனவும், விபத்துக்களை உண்டாக்கக்கூடியதெனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அதேவேளை, இப்போராட்டத்துக்கான முன்னனுமதிக்கான வேண்டுதல்கள் எதுவும் காவல்துறைக்கு எழுத்துமூலம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது. இதனை காரணமாக வைத்து, மிகக்குறைவான வேகத்தில் வாகனங்களை செலுத்தி போக்குவரத்து நெரிசல்களை உண்டாக்கியதற்காகவும், அதியுயர் ஆபத்துக்களை விளைவிக்கக்கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியதற்காகவும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு அபாரதங்களை விதிப்பதற்கும், சாரதி அனுமதிப்பத்திரங்களை பறிமுதல் செய்வதற்கும் காவல்துறை ஆலோசித்து வருவதாகவும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

எனினும், இப்போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்த போது, தாங்கள் வாகனங்களை 80 -90 கி.மீ. வேகத்திலேயே செலுத்தியிருந்ததாகவும், காவல்துறை செய்வதுபோல், மிகக்குறைந்த வேகத்தில் செலுத்தியிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இப்போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்த “Nirmaljit Singh” மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு தார்மீக ஆதரவை தெரிவிக்குமுகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இப்போராட்டத்தில் கலந்துகொண்ட சுமார் 100 வாகன உரிமையாளர்களில் சிலர், முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்த விதிமுறைகளை மீறியதால், காவல்துறை தலையீட்டுக்கு தான் முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளதோடு, இதையிட்டு தான் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள