இனப்படுகொலையை மறைத்து துரோகமிழைத்து விட்டார் சுமந்திரன்!

இனப்படுகொலையை மறைத்து துரோகமிழைத்து விட்டார் சுமந்திரன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது நேற்றைய நாடாளுமன்ற உரையின் போது, எத்தனையோ சவால்கள் எதிர்ப்புகள் நெருக்கடிகள் இடையூறுகள் காணப்பட்ட நிலையிலேய பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி அவர்களுக்கு பெரும் துரோகமிழைத்துள்ளார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“ஐந்து நாட்களாக கிட்டதட்ட ஒரு இலட்சம் மக்களின் பங்களிப்புடன் – இறுதி நிகழ்வில் சுமார் 60000 மக்கள் நேரடியாக கலந்து கொண்ட ஒரு நடைபயணம் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை இடம்பெற்றது.

தமிழ் கட்சிகளும் சிவில் சமூகமும் போன மாதம் ஐநா மனித உரிமை ஆணையாளருக்கும், மனித உரிமை பேரவையின் தலைவருக்கும், உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பிய கடிதத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபயணம் இடம்பெற்றது.

இந்த கடிதம் வெறுமனே ஒரு சில அரசியல்கட்சிகளினதும் அமைப்புகளினதும் கோட்பாடல்ல மாறாக அது ஒட்டுமொத்த தமிழ் மக்களினது ஏகோபித்த கோரிக்கையாக காணப்படுகின்றது என்பதை நிலைநாட்டுவதற்காக நிருபிக்கும் நோக்கத்துடனேயே இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த நிகழ்வு மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது,

ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தினதும் பார்வையை ஈர்க்ககூடிய அளவிற்கு- மியன்மாரில் இடம்பெறும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் போல – இந்தியாவில் இடம்பெறுகின்ற போராட்டங்கள் போன்று மிகவும் காத்திரமான ஒரு செய்தியை சர்வதேச சமூகத்திற்கு கொடுக்ககூடிய அளவிற்கும்,விசேடமாக அந்த கடிதத்திற்கு வலுசேர்க்கும் வகையிலும் அமைந்திருந்தது. அதுதான் அந்த போராட்டத்தின் உண்மையான நோக்கம்.

அந்த போராட்டத்தின் உண்மையான நோக்கம் அதுவாகயிருக்க-நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் வெறுமனே பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து – அந்த கோரிக்கைகள் வெறுமனே அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாக இருக்கின்றது என்பதையும் தெரிவித்து அந்த கோரிக்கைகள் தான் போராட்டத்தின் நோக்கமாக உள்ளது.

-அந்த போராட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளாக இருக்ககூடிய வடக்குகிழக்கு தமிழ் மக்களினது தாயகம் என்ற கோட்பாட்டையோ அல்லது தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசம் என்ற கோட்பாட்டையோ சுயநிர்ணயஉரிமை என்ற கோட்பாட்டையோ அல்லது தமிழின அழிப்பிற்கு ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக இன்னொரு சர்வதேச குற்றவியல் விதிமுறைகள் ஊடாக நீதி கேட்பதையும் வலியுறுத்தாமல் ஒட்டுமொத்த போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

நாங்கள் அந்த முயற்சியை ஒரு சாதாரண தவறாக கருதமுடியாது.

சுமந்திரன் கடிதம் எழுதின பொழுதும் பங்குபற்றியவர். அவருடைய கட்சியும் அவரும் பேச்சுவார்த்தைகளில் தங்களை ஈடுபடுத்தியிருந்தனர்,

போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டவேளை அவருக்கு அதன் சரியான நோக்கம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலும்,நேற்றைய தினம் அந்த போராட்டத்தின் அடிப்படை நான்கு கோட்பாடுகளை வலியுறுத்தாமல் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி என்பதை-விசேடமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக விசாரணை என்பதை வலியுறுத்திதான் அந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்பதை முற்றுமுழுதாக மூடிமறைத்து – வெறுமனே சிறிலங்கா அரசாங்கத்தை நம்பி – சிறிலாங்கா அரசாங்கத்திற்குதான் அந்த கோட்பாடுகளை – வெறுமனே அந்த பத்துக்கோட்பாடுகளையும் முன்வைப்பதாக சொல்லப்பட்டது எம்மை பொறுத்தவரை அந்த போராட்டத்திலே எத்தனையோ சவால்கள் எதிர்ப்புகள் நெருக்கடிகள் இடையூறுகள் காணப்பட்ட நிலையிலேய கலந்துகொண்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி அவர்களுக்கு செய்த மாபெரும் துரோகமாக நாங்கள் அதனை பார்க்கின்றோம். நாங்கள் சுமந்திரனின் கருத்தினை வலுமையாக கண்டிக்கின்றோம்.

பகிர்ந்துகொள்ள