இனப்படுகொலையை விசாரிக்க விசேட தீர்ப்பாயம் ஒன்றை நிறுவ முன்வர வேண்டும்!

இனப்படுகொலையை விசாரிக்க விசேட தீர்ப்பாயம் ஒன்றை நிறுவ முன்வர வேண்டும்!

எவ்வித காலதாமதமுமின்றி சர்வதேசம் சிங்கள பேரினவாத அரசாங்கம் செய்த இனப்படுகொலையை விசாரிக்க விசேட தீர்ப்பாயம் ஒன்றை நிறுவ முன்வர வேண்டும். சிறீலங்கா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிலே நிறுத்தி எமக்கான நீதியை பெற்றுத்தரவேண்டும். இதுவே எமது கடைசி ஆசை என வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பிவைத்துள்ள மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது

முல்லைத்தீவில் வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று (20) முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்  ஒன்று முன்னெடுக்கப்பட்டது இதன் இறுதியில் உறவுகளால் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது

சர்வதேசமே எமது கடைசி நம்பிக்கை என தலைப்பிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
 
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது இன அழிப்பின் ஒரு படிமுறையாகவே சிங்கள அரசால் தமிழர் மீது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வன்னியில் நடந்து முடிந்த இறுதி யுத்தத்தின் போது பலர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். யுத்தம் நடைபெறாத பிரதேசங்களில் வெள்ளை வான் மூலமும் ஆயுததாரிகள் மூலமும் பலர் கடத்தப்பட்டுக் காணாமல் போகச் செய்யப்பட்டனர்.
 
வன்னியில்  யுத்தம் மெளனிக்கப்பட்டதினை தொடர்ந்து அரசின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி பலர் மனைவி, குழந்தைகளுடன் சரணடைந்தனர். பலர் மனைவி,பெற்றோரால் ஒப்படைக்கப்பட்டனர். பலர் விசாரணைக்கென சோதனைச்சாவடியில் வைத்தும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலும், கூட்டிச்செல்லப்பட்டுக் காணாமலாக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் நலன்புரி நிலையங்கள், புனர்வாழ்வு நிலையங்கள் என அழைக்கப்படும் தடுப்பு முகாம்களிலிருந்து கூட்டிச்செல்லப்பட்டுக் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

இப்படி பல வகைகளிலும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தனியாகவும், குழுக்களாகவும், பல அமைப்புகளின் பின்னால் நின்று எமது உறவுகளை தேடியலைந்த போதும் பலன் ஏதும் கிடைக்காததால் 2017 பெப்ரவரி 20ம் திகதி முதல் தொடர் போராட்டமொன்றை கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்தோம். அதனைத் தொடர்ந்து இப்போராட்டம் படிப்படியாக மற்றய மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டது. விரிவுபடுத்தப்பட்ட போராட்டம் இன்று முல்லைத்தீவில் 1200வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது.  
 
காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுகொள்ளாத சிங்களத் தலைவர்களைப் போலவே கடந்த தேர்தலின் போது தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களும் இதுவரை காலமும் பாராமுகமாகவே இருந்தமை யாவரும் அறிந்ததே. எனினும் தற்போது தேர்தலை நோக்காக கொண்டு எல்லோரினது வாய்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம் பேசுபொருளாக இருக்கின்றது. எம்மீதான இத்திடீர் அக்கறை எங்களை திகைப்படைய செய்கின்றது. எம்மவர்களால், எங்களை நம்பச்  சொல்லி கொண்டுவரப்பட்ட நல்லாட்சி (என்று சொல்லப்பட்ட) அரசாங்கத்தை கொண்டு எமக்கு ஓர் தீர்வினை பெற்றுத் தந்திருக்கலாம். முன்னாள் ஜனாதிபதி மைத்திரி எமக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இழுத்தடித்தபோது அழுத்தங்களை பிரயோகிக்க கூடிய நிலையிலேயே இவர்கள் இருந்தனர். ஆயினும் எவ்வித நடவடிக்கையிலும் இறங்காது “நல்லாட்சிக்கு” முண்டு கொடுத்தனர். “சர்வதேச விசாரணை முடிந்து விட்டது”, இலங்கை அரசிற்கு காலநீடிப்பு தேவை”, “போர் குற்றம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் விசாரணை தேவை”, “எங்களால் நிராகரிக்கபட்ட காணாமல் போனோர் அலுவலகத்தை இயங்கச் செய்ய அரசுக்கு துணைபோனமை” போன்றவற்றில் அரசுடன் சேர்ந்து கொண்டு எமக்கெதிராக செயற்பட்டனர்.  தற்போது முதலைக் கண்ணீர் வடித்துக்கொண்டு வீரவசனங்கள் பேசுகின்றனர். இதை பாதிக்கப்பட்ட நாம் நன்குணர்வோம்.                                            
 
சர்வதேசம் கூட உரிமைக்காகப் போராடிய ஓர் இனத்தின் எழுச்சியை, சிறீலங்கா அரசாங்கத்தின் பொய் பரப்புரைகளையும், கட்டுக்கதைகளையும் நம்பி பயங்கரவாதம் என்று கூறி தமிழர்களது உரிமை போராட்டத்தினை அழிக்க துணைபோனது. அதன் விளைவே முள்ளிவாய்க்கால் பேரவலம். ஆகவே சர்வதேசத்திற்கு எமக்கான நீதியை பெற்றுத்தரவேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது.  
 
எமது உறவுகளைத் தேடும் போராட்டம் 1200 நாட்களைக் கடந்தும் தீர்வு எதுவுமின்றி தொடர்கின்றது. சிங்கள அரசாங்கம் சர்வதேசத்தையும் ஐ.நா வையும் எவ்வித அதிகாரங்களும் இல்லாத OMPஐ அமைத்து திட்டமிட்டு ஏமாற்றியது. நாம் பல தடவை பன்னாட்டு தூதுவர்களுக்கும் ஐ.நா விற்கும் எமது பட்டறிவினுடாக தெளிவாக எடுத்துக்கூறியும் எமது வாதத்தினை ஏற்றுக்கொள்ளாமல் OMPஐ ஏற்கும் படி வற்புறுத்தினர். ஆனால் கடந்த மார்ச் மாதம் 2020 இல் சிங்கள பேரினவாத அரசாங்கம் 30/1 தீர்மானத்திலிருந்து தன்னிச்சையாக வெளியேறிய போதுதான் சகலருக்கும் சிங்கள அரசின் நோக்கம் புரிந்தது.  
 
எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டு 11 வருடங்கள் கடந்து விட்டன. தமது உறவுகளை தேடிய நூற்றுக்கணக்கான பெற்றோர், வாழ்கை துணைகள், உறவினர்கள் அவர்களை காணாத ஏக்கத்துடனேயே இறந்து விட்டனர். தந்தையின் முகத்தை காணாமல்  வளர்ந்த பிள்ளைகள், விடலைப் பருவத்தை அடைந்தும் தந்தையினை தேடும் அவல நிலையிலேயே உள்ளோம். 2017இல் எமது தொடர் போராட்டத்தினை தொடங்கியபின் எம்முடன் இணைந்து தமது உறவுகளை தேடிய 70 பேர் இறந்து விட்டனர்.  ஏனையோர் வயோதிபம், கவலை, ஏக்கம் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டு நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் சிறீலங்கா அரசானது தீர்வினை வழங்கும் என நம்பி சர்வதேசம் தொடர்ச்சியாக கால நீடிப்பினை வழங்கியமையேயாகும். கோவிட் -19 தொற்றுநோய் நெருக்கடியின் போது எம்மால் மேற்க்கொள்ளப்பட்ட தன்னெழிச்சியான நிவாரண நடவடிக்கைக்கு கூட சிறிலங்கா புலனாய்வு துறையினரால் பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. இவ்வாறான ஒரு அடக்குமுறை அரசிடம் எவ்வாறு நாம் தீர்வை எதிர்பார்க்க முடியும்?  சிங்கள பேரினவாத அரசிடம் தீர்வினை  வழங்க கோருவது குற்றவாளியிடமேயே நீதி வழங்கும்படி கூறுவது ஆகும். இனியாவது சர்வதேசம் ஸ்ரீலங்கா அரசினை நம்பாது துரித நடவடிக்கையில் இறங்கி நாம் இறப்பதிற்கு முன் நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும். காலம் தாழ்த்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானது.
 
நாம் தொடர்ச்சியாக முன்வைத்துவரும்  எமது 5 அம்ச கோரிக்கையினை மீண்டும் சர்வதேசத்திடம் சமர்ப்பிக்கின்றோம்.
 
(1) யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும், இறுதி யுத்தம் முடிவிற்கு வந்த (2008-2009) தருணத்தில் சரணடைந்தவர்கள் உள்ளடங்கலாக கைது செய்யப்பட்டவர்கள், சகலரினதும் பெயர்ப் பட்டியலை உடனடியாக வெளியிட ஸ்ரீலங்கா அரசிக்கு சர்வதேசம் மிகவலுவான இராஜதந்திர அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும்.


(2) தற்போது சிறைகளில் வாடும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை உடனடியாக வெளியிடுவதுடன்,அவர்களை உடனடியாக விடுதலை செய்ய சர்வதேசம் அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும்.


(3) யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னரும் சிறீலங்கா இராணுவத்தினராலும், காவற் துறையினராலும் கடத்தப்பட்டு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை உடனடியாக வெளியிட சர்வதேசம் அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும்.


(4) புனர்வாழ்வு அளிக்கப்பட்டு இன்றுவரை விடுதலை செய்யப்படாத போராளிகளை எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்து சமூகத்துடன் இணைக்க சர்வதேசம் ஆவன செய்யவேண்டும்.
 
 
(5) தமிழர் பிரதேசத்தில் தொடர்ந்து நடைபெறும் இராணுவமயமாக்கல், நிலஅபகரிப்பு, சிங்கள குடியேற்றங்கள்  உடனடியாக நிறுத்தப்படுவதுடன் தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் எவ்வித அடக்கு முறைகளும் இன்றி, சுதந்திரமாகவும்,சுய கெளரவத்துடனும் வாழ்வதற்கான அரசியல் தீர்வினை சர்வதேச பொறிமுறைகளினுடாக முன்னெடுக்க வேண்டும்.  
 
அத்துடன் எவ்வித காலதாமதமுமின்றி சர்வதேசம் சிங்கள பேரினவாத அரசாங்கம் செய்த இனப்படுகொலையை விசாரிக்க விசேட தீர்ப்பாயம் ஒன்றை நிறுவ முன்வர வேண்டும். சிறீலங்கா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிலே நிறுத்தி எமக்கான நீதியை பெற்றுத்தரவேண்டும். இதுவே எமது கடைசி ஆசை

3 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments