இன்னும் காணவில்லை!

இன்னும் காணவில்லை!

பள்ளிக்கு போன பிள்ளை
துள்ளி விளையாடி வந்த வழியில்
வெள்ளை வானில் கொள்ளை
அடிக்கப் பட்டதாய்
காற்று வந்து முனகி
அழுதது

இன்னும் அவனைக் காணவில்லை
கண் வலியில் தாய்மடி
வாடிக்கிடக்கிறது

தேடிய விழிகள்
அதிக வெப்பத்தால்
வறண்ட தெருவைக்
கண்ணீரால்
நனைக்கிறது

திறந்த வீட்டுக்குள்
நான்கு கால்
நாய்கள் புகுந்தால் போல்
இரண்டு கால்
பேய்களின் வலையில்
சிக்குண்ட
தங்கையின் தடயமே
இல்லாமல் போன போதும்
இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றது
பத்து திங்கள் சுமந்த
வயிறு

பாழாய் போன வயிற்றின் பசி போக்க
படகேறி பத்து பாகம் கடக்க முன்னர்
கடலிலே காணாமல் போன
அப்பாவின் அன்பிற்காய்
ஏங்கித்தவிக்கின்றது
ஏழை குழந்தையொன்று

வாழ வழியின்றி
வல்லூறுகளின் சுற்றிவளைப்பில்
நாள் தோறும்
தேள் கொட்டும் வேதனையில்
திளைக்காது
கட்டாருக்கு என்றாலும்
நாட்டைவிட்டு வெளியேற
பசவில்லா லொச்சில்
பதுங்கி நின்றபோது
காவல் துறையின்
சோதனை நடவடிக்கையில்
காணாமல்போன அக்கா
இன்னும் வீடு வந்து சேரவில்லை

ஒப்பாரி வைத்தபடியே
உறக்கம் தொலைத்து
தவிக்கிறாள் அம்மா

இறுதியாக
கரங்களை உயர்த்தியபடி
உங்கள் நரகத்திற்கு
வந்தோம்
விசாரணை என்ற பெயரில்
குலைகுலையாய் கொண்டுபோனீர்
இன்னும் யாரும் திரும்பவில்லை
அலையாத நாளும் இல்லை
நிலையான தீர்வும் இல்லை
கலையாத கனவோடு
விடியாத இரவுகளில்
மட்டும் நாங்கள்

தூயவன்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது!!