இன்னும் பசியோடுதான் பார்த்தீபம்
காத்திருக்கு!

இன்னும் பசியோடுதான் பார்த்தீபம்<br>காத்திருக்கு!

பன்னிரு நாள்
பகலிரவாய்ப் பார்த்திருக்க
அன்ன ஆகாரம் ஏதுமின்றி
அண்ணன் திலீபன்!

தியாகத்தின் வடிவமாய்
திரியாய் எரிந்து
ஒளிர்ந்து நின்ற பார்த்தீபம்
விழி கழையிழந்து போனது!

ஐந்தம்சக் கோரிக்கை
எந்தச் செவியிலும்
வீழாது வலுவிழந்து
வலியோடு போனது!

நா வறண்டு விழி
குழிவிழுந்து ஓ
அந்த நாட்கள் வலி
தந்து போகுது!

தமிழீழக் கனவோடு
நாடி நாளம் ஒடுங்கி
அடங்கிப் போக
அலையென மக்கள்
புரட்சி வெடித்த அந்த நாள்!

மறப்பினுக்கு அகப்
படாத ஈகையின் திங்கள்
உயிர்க்கொடையின்
உன்னதம் எங்கள்
திலீபம்!

காந்தீய தேசத்துக்கும்
கற்றுக் கொடுத்தான் அகிம்சை
எனும் அரிய வித்தையை
அண்ணல் திலீபன்!

வாழுங்காலம் நா வரண்டு
வாடிய பயிராக வதங்கிக்
கிடந்த பார்த்தனே உன்
தியாகத்துக்கு ஈடிணை உண்டோ!

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்த்திர தமிழீழம் மலரட்டும்
என்றே கோரிக்கைகள்
ஐந்தை வைத்தே உணவை விடித்தே!

உலக அரங்கில் அறவழிப் போரை
நம் ஈழம் உய்யவே ஆக்கிய
பெருமலை மறத்தில் உயர்ந்தவர்
அறத்தையும் செப்பிய தியாகச் சுடரே
இன்னும் உன் பசி தீரவில்லையே!

மக்கள் வெள்ளம் அணி திரள
அந்த நல்லூரான் வீதியில் உருகும்
மெழுகெனக் கிடந்த உனை
எப்படி மறப்போம்!

பேச்சின் வன்மை கண்டோம்
செயலின் தீரம் கண்டோம்
உன் உயிர்க்கொடையின்
ஆழம் கண்டு விக்கித்து நிற்கிறோம்!

ஈழத்தாயின் இதய வலியுணர்ந்து
இடர் கழைய சுடரென தன்
வாழ்வைச் சுந்தரத் தமிழுக்காய்
உருக்கிய திலீபா உன் கனவு
பலிக்கும் அந்த நாளுக்காய்
நாமும் காத்திருக்கிறோம்!

மலரும் மலரும் சுதந்திர தமிழீழம்
மகிழும் அந்த அகிம்சா தர்மமும்
அகந்தை அழிந்து அரக்கத்தனன்
ஒழிந்து ஆதிக்க சக்தியும்
வழி விட்டு ஓடும் அந்த நாளுக்காய்
பார்த்தீபா உன்னோடு நாமும்
பசித்தே இருக்கிறோம்!

சிவதர்சினி ராகவன்
19.9.2020

பகிர்ந்துகொள்ள