இன்றைய விடுதலை தீபங்கள்!!

இன்றைய விடுதலை தீபங்கள்!!

சிங்களக் கடற்படையின் படகுகளைக் கண்டால் எங்களது சாதாரண படகுகள் கடலில் நிற்காது, நிற்கமுடியாது.

சண்டைகளுகென்றே தயாரிக்கப்பட்ட நேவிப்படகுகளின் வேகத்திற்கு, அவற்றில் பொருத்தப்படிருக்கின்ற சக்தி வாய்ந்த ஆயுதங்களின் தாக்குதலுக்கும் ஈடுகொடுக்க எங்களது சாதாரண படகுகளால் முடியாது என்பதால் துரத்தில் கண்டவுடனேயே ஓடி மறைந்துவிட வேண்டும், வேறு வழியில்லை.

எங்களது படகுகளை அழிப்பது அவர்களின் இலக்கு என்பதுடன், கலைப்பது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காகவும் இருந்தது.

ஆனால் இன்று அந்நிலை நேர்மாறாக மெல்ல மெல்ல மாறி வந்துவிட்டது.

தரையைப்போல கடலிலும் சிங்களப்படையை துரத்தித் தாக்கி அழிக்கலாம் எனச் சொல்லித் தந்தவனும், முதன் முதலாக மட்டுமல்ல தொடராகவும் அதனைச் செய்து காட்டியவனும் தான் எங்கள் சாள்ஸ்.

1991 இன் இறுதியில் அது ஆரம்பித்தது.
நயினாதீவிலிருந்து ஊர்காவற்துறைக்கு கடல்ரோந்து புரிகின்ற நேவிப்படகுகளை வழிமறித்து தாக்க சாள்ஸ் முடிவெடுத்தான்.
தளபதி கங்கையமரனின் துணையோடு வேவு பார்த்து, தாக்குதல் திட்டம் வகுத்து, தாக்குதல் குழுக்களை ஒழுங்கு படுத்தி, ஆயுதங்களோடு படகுகளைத் தயார் செய்து தானே கட்டளையதிகாரியாகி வியூகம் அமைத்துச் சென்று கடற்சண்டையை வழி நடத்தினான் சாள்ஸ்.

கனோன் பீரங்கிகள்,50 கலிபர்கள் மிகையான கனரகத் துப்பாக்கிகளுடன்,அதிவேக ஓட்டம் கொண்ட நேவியின் சண்டைப்படகுகளை 50 கலிபர்,ஜி.பி.எம்.ஜியுடன் சாதாரண துப்பாக்கிகளை மட்டுமே கொண்ட எங்களது மீன்பிடிப் படகுகள் துரத்தித் தாக்கின.

சிங்களக் கடற்படையை புலிகளின் படகுகள் கலைத்து விரட்டிய முதல் வரலாறு அது. எதிரியின் படகொன்று மூழ்கடிக்கப்பட்டதுடன், எல்.எம்.ஜி ஒன்றும் கைப்பற்றப்பட்ட போதும் இழப்பேதுமில்லை எங்களுக்கு.

இதற்க்கு முன்னர் நெடுந்தீவிற்கும் குறிகட்டுவானிற்கும் இடையிலுள்ள கடலில் சாள்ஸ் நடத்திய ஒரு கண்ணிவெடித்தாக்குதல் குறிப்பிடத்தக்கது.

இரவு முழுவதும் ஆழ்கடலுக்குள் இறங்கி நின்று , அலைகளின் நடுவில் அவன் கண்ணிவெடியை விதைத்துவிட்டு வர,மறுநாள் காலை அதில் சிக்கிய எதிரியின் படகொன்றை அலைகள் விழுங்கிகொண்டன என்பதுடன் சிங்களக் கடற்படையின் வடபிராந்தியத் தளபதி கொமாண்டர் சமரவீர படுகாயமடைந்தார் என்பதும்,7 படையினர் கொல்லப்பட்டதும் முக்கியமானது.

உடைந்த படகையும் ஆயுதங்களையும் கடலுக்கடியிலிருந்து மீட்ட பின்னர்தான் சாள்ஸ் அடுத்த வேலைக்குப் போனான்.
1992 இன் துவக்கத்தில், தாளையடிக் கடலில் எதிரியின்”சவட்டன் ” விசைப்படகு மீது தானே கொமாண்டராகி நின்று ஒரு பகற்பொழுது தாக்குதலை நடத்தினான் சாள்ஸ்.

எங்களது நான்கு வீரர்களை நாம் இழந்ததுடன் அவனுக்கும் காலில் காயம் ஏற்ப்பட்டது அந்தச் சண்டையில். ஆனையிறவுக் கடல் நீரேரியில் எதிரியின் நீருந்து விசைப்படகொன்றை மூழ்கடித்து, பிப்ரி உட்பட பல ஆயுதங்களை கைப்பற்றிய கடற் கண்ணித் தாக்குதல்….

அதே நீரேரியில் எதிரியின் ரோந்துப்படகுத் தொடரைத் தாக்கி பல ஆயுதங்களைக் கைப்பற்றிய இன்னொரு சண்டை…..

மாதகல் கடற் பிரதேசத்தில், விசைப்படகொன்றை மூழ்கடித்த மற்றொரு கண்ணிவெடித் தாக்குதல்….

பூநகரி கல்முனைக்கருகே உள்ள மாந்தீவில் , சிங்களப்படையின் கரையோரக் காவலரணைத் தகர்த்து,துப்பாக்கிகளோடு எதிரியின் சடலங்களையும் எடுத்து வந்த அதிரடித் தாக்குதல்….

இவ்வாறாக கடற்புலிகளின் கடற் சண்டைத் திறன் வளர்த்த ஒவ்வொரு தாக்குதலுக்கு பின்னாலும் இருந்த உந்துவிசை அவன்.

அவனிடம் ஒப்படைக்கப்படுவது என்ன வேலையாக இருந்தாலும் அந்த வேலையோடு தன்னையே கலந்து செய்துமுடிக்கும் தன்மை அவனுடையது.

வெற்றிகரமான கடற்சண்டைகளின் முன்னோடித் தளபதி மட்டுமல்ல , அவனொரு சிறந்த தொழிநுட்பவியலாளனுமாவான்.

வேலையில்லாத வேளையில்லாதவன் அவன். ஓய்வுக்கு ஒய்வு கொடுத்திருந்த உழைப்பாளி. ஒய்வு நேரங்களில் மூளைக்கு வேலை கொடுத்து எதையாவது ஆய்வு செய்துகொண்டிருப்பான்.

கைவசம் உள்ள வளங்களைக் கொண்டு புதிது புதிதாக எதயாவது கண்டுபிடிக்க வேண்டுமென்றோ அல்லது கஷ்டப்பட்டுச் சிரமத்துடன் நாம் செய்கின்ற வேலைகளை இலகுவாகவும் வேகமாகவும் செய்து முடிக்கக்கூடிய வழிகளைப் பற்றியோ அல்லது இப்படியான ஏதோ ஒரு விடயத்தைப் பற்றியே தான் அவனது “ரெக்னிக்கல் மூளை” எப்போதும் சிந்தித்துக்கொண்டிருக்கும்.

“முயற்சி செய்து பார்த்துவிட்டோ அல்லது முயற்சி செய்து பாராமலேயோ ஏதோ ஏதோ ஒரு சாட்டுச் சொல்லிக்கொண்டு இது சாத்தியப்படாது என்று நாங்கள் ஒதுக்கி வைத்து விடுகின்ற வேலைகளை தானாகவே பொறுப்பெடுத்து வெற்றிகரமாகச் செய்து முடித்துவிடுவான் அந்தப் பொறியியலாளன்” என்றான் ஒரு கடற்புலித் தோழன்.

கடற்புலிகளின் தொழில்நுட்ப வளர்ச்சியும் சாள்ஸின் அறிவாற்றலும் ஒன்றோடொன்று இறுகப் பிணைக்கப்பட்டிருந்தது.
வோக்கி கதைக்க ” குறொஸ் “செய்ய வேண்டும் என்றாலும் சரி” கொம்யூனிக்கேசன் செற் ” ருக்கு தேவையான உதிரிப்பாகம் என்றாலும் சரி என்னவாகத்தான் இருந்தாலும் அது வேண்டும் இது வேண்டும் என்று எதிர்பார்க்காமல் உள்ளூரில் கிடைக்கக் கூடியவற்றைக் கொண்டே செய்து முடித்து விடுவது தான் மற்றைய தொழில்நுட்பவியலாளருக்கும் இவனுக்கும் இடையிலுள்ள வேறுபாடு.

கடற்புலி வீரர்களுக்கான படகுப் பயிற்சிக் கல்லூரி ஒன்றை ஆரம்பித்தான் அந்த சிறந்த படகோட்டுனன். புயலுக்கும் சூறாவளிக்குமிடையில் ஆர்பரித்தெழும் கடல் அலைகளுக்கும் நடுவில் படகை நீண்ட தூரத்திற்கு செலுத்தக் கூடியதான பயிற்சியை அளித்து பெண்புலிகள் உட்பட திறமையான ஓட்டிகளை சாள்ஸ் உருவாக்கித் தந்தான்.

இப்போது அவனில்லை , ஆனால் அந்தப் பட்டரை இனி எப்போதும் புதியவர்களை தயார் செய்து கொண்டே இருக்கும் , அவனது நினைவுகளோடு….

சண்டை முனைகளில் நிலவும் போர்ச் சூழ்நிலைகளால் தடங்கங்கள் ஏற்ப்பட்டு, எமக்கு உணவு வராமல் விட்டு விடுவது அடிக்கடி நடக்கும் ஒரு விடயம். ஆனால் சாள்சுடன் நின்று களங்களில் போரிட்ட தோழர்கள் சாப்பாட்டிற்காக காவலிருந்த நாட்கள் குறைவு.

உடனடியாக அடுப்பில் சட்டியையோ வாலியையோ வைத்து, எட்டியவற்றைக் கொண்டு சுவையாகக் கரி சமைத்துத் தன் தோழர்களுக்குக் கொடுத்து விடுவான் அந்த அட்டகாசமான சமையல்காரன். அவன் தயாரிக்கும் கோழி சூப் இயக்கத்தில் மிகவும் பிரபல்யமானது. தலைவரிடமே பாராட்டுப் பெற்றது.

சாள்சின் சூப் பருகவென்று நண்பர்கள் தேடி வந்த நாட்கள் கூட உண்டு. எம்மை பிரிவதற்கு சில நாட்களிற்கு முன்பு கூட மூர்த்தி மாஸ்டர் வீட்டில் “கோழி சூப்” விருந்து படைத்து விட்டுத் தான் அவன் போனான். அவன் ஆக்கித் தந்த சுவைகள் அவனது நினைவைத் தந்துகொண்டே இருக்கின்றன.

தோழர்களில் அவன் கொண்டிருந்த அன்பும் பாசமும் அலாதியானது. மற்றெல்லோரையும் விட வித்தியாசமான விதத்தில் பழகுகின்ற இவன், எல்லாப் போராளிகளினாலும் கவரப்பட்டு அவர்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிலைத்து விட்ட ஓர் உற்ற நண்பன்.

கிளாலியிலிருந்து வேலையாக வந்து எங்காவது நிற்கும் போது கோவில் திருவிழா பார்க்க நண்பன் அழைத்தால் “பொடியளை விட்டிட்டு வந்திட்டன், நான் வரேல்லை” என்று போக மறுக்கும் சாள்ஸ் என்ன நிகழ்ச்சி பார்பதற்கென்றாலும் அது சரியோ தவறோ, தன்னோடு நிற்கும் போராளிகள் எல்லோரையும் அழைத்துச் செல்லாமல் ஒருநாள் கூட போயிருக்காத உயிர்த்தோழன்.

“எந்த மாவட்டத்துக்குப் போனாலும் அங்கு நிற்கும் யாராவது ஒரு போராளி வந்து சாள்ஸ் அண்ணையிட்ட சுகம் கேட்டதென்று சொல்லுங்கோ என்பான்” என்று சொன்னார் பிருந்தன். அந்தளவுக்கு வியாபித்திருந்தது அவனது நட்பு.

தவறிழைக்கும் போராளிகளைத் தண்டிக்கும் போது, அரவணைத்து, அன்பாகப் பேசி பிழைகளைத் தெளிவுபடுத்தும் விதம், அவனில் வேறுபட்ட ஒன்றாகவே கண்டோம்.

வகுப்பு எடுக்கும் பொழுது பகிடியாகவும் சொள்ளமாகவும் கதைத்து, தான் சொல்வதை அவர்கள், மன விருப்போடு கேட்டுப் படிக்கக் கூடியதாக விளங்கப்படுத்திக் கற்பிப்பது அவனுடைய பாணி.

தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிடும் தன்மை அவனுடையது. கடலிலும், தரையிலும் தான் பெற்ற அனுபவங்கள், பட்ட துயரங்கள், திறமையான செயற்பாடுகள் என எல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்பான்.

“புத்தகத்தில் படித்த அறிவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அனுபவம் மூலம் படிக்க நிறைய இருக்கு. அனுபவம் பலதரப்பட்ட பாடங்களையும் எங்களுக்குக் கற்பிக்கின்ற ஒரு வழிகாட்டி” என்று சொல்லித்தான் வளர்த்ததைப் போலவே பட்டறிவு மூலம் போராளிகளை வளர்க்கும் வழிமுறை அவனுடையது.

ஒவ்வொரு கடற் சண்டையின் முடிவிலும், அந்தக் கள நிகழ்ச்சிகளின் போக்குகளை ஆழமாக நோக்கி, சரி பிழைகளை ஆராய்ந்து, அந்தப் பட்டறிவின் அடிப்படையில் அடுத்த சண்டையை நெறிப்படுத்துகின்ற அவன், ஓர் அனுபவசாலியான படைத்தளபதி. எப்போதும் தானே நேரில் கடலில் இறங்கி, சண்டைகளை வழிநடத்தி, வீரர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதும் அவனுடைய பாணி. சிரிப்பூட்டும் பகிடிகளாலும், பம்பல்களாலும் எங்களை இன்பத்திலாழ்த்தும் அவனுடைய கதைகள், ஒரு தனித்துவமான கலாரசனை.

எப்போதும் கலகலப்பாக மகிழ்ச்சியாக பொழுதுகள் அவனோடு கழியும்.

போராட்டத்தைப் பற்றியும், இயக்கத்தைப் பற்றியும், தலைவரைப் பற்றியும் சொல்லிச் சொல்லி எப்போதும் எங்களை உற்சாகத்தில் வைத்திருப்பான் சாள்ஸ்.

என்றுமே மறக்கமுடியாத பசுமையான நினைவுகள் அவனுடையவை. இன்று எங்களோடு அவன் இல்லை. ஆனால், எல்லோருக்குள்ளும் அவன் நிறைந்திருக்கிறான்.

சமர் முனைகளில் சண்டைகளை வழி நடாத்திக் கொண்டிருக்கும் அந்தத் தளபதி, மக்களை எங்களோடு இணைப்பதற்கு ஆற்ற வேண்டிய பணிகளைப் பற்றியும் சிந்திப்பான்.

ஒவ்வொரு தாக்குதலையும் தனியே இராணுவ வெற்றிகளாக மட்டும் வைத்துக்கொண்டிராமல், மக்களைத் தாயகப்பனிக்கு உள்வாங்கும் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றவும் அவ் வெற்றிகளைப் பயன்படுத்தினான்.

ஆனையிறவு கடல் நீரேரியில் கண்ணிவெடியில் உடைந்து பயனற்ற விதத்தில் கடலுக்குள் மூழ்கிய விசைப்படகைக் கூட,விரைவாகச் சுழியோடி கட்டியிழுத்து வந்து, வடமராட்சியில் மக்கள் பார்வைக்கு வைத்தான்.

ஊர்காவற்துறைக் கடலில் சேதப்பட்ட நேவிப்படகையும், எடுத்த எல்.எம்.ஜி யையும் யாழ்ப்பாணக் கரையில் சனத்துக்குக் காட்டியதும், அவனது அரசியல் சிந்தனைக்குச் சான்றுகள்.

புலிகளின் வெற்றிக் களிப்புகளை மக்களோடு பகிர்ந்து கொண்டான் அந்தக் கடற்தளபதி. ஆனையிறவுக் கடல் நீரேரியில் சாள்ஸ் நடத்திய ஒரு தாக்குதல் மேனி சிலிர்க்க வைக்கும் கதை.

மதியத்திற்குப் பிந்திய பகற்பொழுது அது. எட்டு விசைப்படகுகளில் கடல்ரோந்து வந்து கொண்டிருந்த சிங்கள கடற்படையின் நீருந்து விசைப்படகு ஒன்று ஏற்கனவே சாள்ஸ் வைத்துவிட்டுக் காத்துக்கொண்டிருந்த கண்ணிவெடியில் சிதறி மூழ்கியது.
திகைத்துப் போன நேவியின் ஏழு படகுகளும் அவ்விடத்தைச் சூழ்ந்துவிட, படகையும் ஆயுதங்களையும் தங்கள் ஆட்களையும் மீட்க அவர்கள் முயன்றுகொண்டிருன்தனர்.

பூநகரிப் பக்கமிருந்து அவசரமாக வந்த ஹெலி வட்டமிட்டபடி பாதுகாப்ப்பு வழங்கிக் கொண்டிருந்தது.

சாள்சுக்கு ஏமாற்றம். படகையும், ஆயுதங்களையும் மீட்க முன்னர் அவர்களைத் தாக்கி விரட்டத் தயாரானான் அவன். கைவசமிருந்ததோ ஒரே ஒரு படகு, அதிலிருந்தும் ஒரேயொரு கனரகத் துப்பாக்கி தான்.

அவர்களோ ஏழு சண்டைப் படகுகளில், ஹெலி வேறு மேலே, சமாளிக்க முடியுமா என கூடி நின்றவர்கள் சிந்திக்க, இன்னும் சில புலிகளுடன் படகைக் கடலில் இறக்கினான் அந்த வீரன்.தொடர்புடைய பதிவு..

கரையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பிருந்தன் சொன்னார்.
“ஜி.பி.எம்.ஜி. ரவைகளைப் பொழிய மின்னலெனத் தங்களை நெருங்கிய தனித்த ஒரு படகைக் கண்ட நேவி அதிர்ந்து போனான். அவிழ்த்து விட்ட பட்டிமாடுகள் வரிசையாக ஓடுவது போல், நேவிப் படகுகள் அனைத்தும் ஓட்டமெடுக்க, மேலே நின்று சுட்டுக் கொண்டிருந்த நேவியாலும் சாள்சை தடுத்து நிறுத்த முடியவில்லை.”
அன்று கடலுக்குள்ளிருந்து படகையும், ஆயுதங்களையும் மீட்டுத் தான் சாள்ஸ் வடமராட்சியில் மக்கள் பார்வைக்கு வைத்தான்.

திருகோணமலையின் கடற்கரையோரம் உள்ளது திருக்கடலூர், அந்த வீரனைப் பெற்றுத் தந்த பெருமை அதற்குத்தான் சேரும். 1960 இன் கடைசி மாதத்தின் 15ம் நாள், ஒரு அழுகுரலுடன் அது நடந்தது.

அப்பா ஆனந்தராசாவிற்கும், அம்மா விஜயதேவிக்கும் மகனாக, 2 அக்காமாருக்கும் 4 தம்பிமாருக்குமிடையில் பிறந்தவனுக்கு, அவர்கள் ஆசையோடு வைத்த பெயர் தவராஜன்.

கடற்தொழில் அந்த குடும்பத்திற்கு மட்டுமல்ல, அந்தக் கிராமத்திற்கும் சொந்தமானது.

புனித ஜோசப் கல்லூரியில் 10ம் வகுப்புவரை படித்துவிட்டு அப்பாவோடு தொழிலுக்குப் போனவன், சின்ன வயதிலேயே திறமை மிக்க படகோட்டியாகத் தேர்ச்சிபெற்றான்.

மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் அவன் பாடத்திட்டம் ஒன்றை பூர்த்தி செய்வதற்கு, இயற்கையாகவே அவனிடமிருந்த ரெக்னிக்கல் மூளை துணையாக இருந்தது. தடங்கலின்றி சிங்களத்தில் உரையாடுவதொடு, ஆங்கிலத்தில் பேசும் ஆற்றலையும் சாள்ஸ் கொண்டிருந்தான்.

சிங்கள இனவாதப் புயல் எங்கள் தாய்நிலத்தில் கோரமாக வீசிய போது, எல்லோரையும் போலவே இந்தக் குடும்பத்தின் அமைதியான வாழ்வும் குலைந்தது.

பச்சைப் பேய்களின் பவனி, இராணுவ வண்டிகளில் வலம், சிங்களக் காடையர்களின் அட்டூழியம், திருகோணமலை எரிந்தது. தமிழர்கள் பிணங்களாய்க் குவிந்தார்கள் எங்கள் கடலில் அவர்கள்.

விடியக்காலையில் கரையொதுங்கும் பிணங்கள், அந்த எரிமலை தனக்குள் குமுறும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அன்புத் தம்பி ஜெயராஜனை சிங்களத் துப்பாக்கிகள் கொடூரமாகக் கொன்றபோது அவனால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.

தாயகத்திற்க்குச் செய்யவேண்டிய பனி, சொந்த வாழ்வையும் தாக்கிய பேரினவாதம், அவன் இயக்கத்திற்குப் போக முடிவெடுத்தான்.
புலிகள் இயக்கத்தின் தொடர்பு தேடி சந்து பொந்தெல்லாம் அலைந்து திரிந்தான். நீண்ட காலத்தின் பின், 1985 இன் நடுப்பகுதியில், அது கிடைத்தது.

சந்தோஷம் மாஸ்ரரைத் தேடிப்பிடித்து இயக்கத்தில் சேர்ந்தவன், திருமலையில் இரண்டாவது பயிற்சி முகாமில் பயிற்சி எடுக்கும் போதே, புலேந்தி அம்மானின் கவனத்தை ஈர்க்குமளவுக்கு ஆற்றலை வெளிப்படுத்தி, திறம்படச் செயற்பட்டான்.

திருமலைக்கான கடல்மார்க்க விநியோகங்களைச் செய்வதே அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த வேலை. ஆனால், மிகச் சிரமமான அந்தப்paniyil வண்டியோடிவிட்டுக் களைப்போடு வந்தாலும், ஆமிக்கு சக்கை அடிக்க சுரேந்திரன் வெளிக்கிட்டால் தானும் சேர்ந்து போவான்.

இப்படி தொடங்கியவன் தான், பின்பு கண்ணி வேடிவைக்கப்போகிரவர்கள் ஆலோசனை பெற்றுச்செல்லும் அளவுக்குச் “சக்கையில் எக்ஸ்பேட்” ஆகினான்.

திருகோணமையில் சிங்களப்படை தனது முற்றுகையை இருக்கியா ஒரு காலகட்டத்தை நினைவு கூர்ந்தான் பதுமன்.

அது இக்கட்டான சூழ்நிலை, உணவுக்கே பஞ்சமான நெருக்கடி, விநியோக வழிகள் எல்லாமே தடைப்பட்டுவிட்ட அந்த நாட்களில் புலிகளின் உணவுக் கால்வாயாக இருந்தவன் சால்ச்தான். நிலமெல்லாம் ஆமி, கடலெல்லாம் நேவி. சாள்ஸ் படகெடுத்துப் போவான்.

அடிக்கடி கடலில் நேவி கலைப்பான். ஆனாலும் உணவோடு வந்து சாள்சின் வண்டி கரையைத் தொடும். “இன்று வண்டி ஓட முடியாது, கடலில் நேவி கூடுதலாக நிற்கிறான்” என்று வோக்கி அறிவிக்கும். அப்போதும் தோழர்களுக்கு உணவுதர வண்டியோடு கடலில் இறங்குவான் இந்த உயிர்த்தோழன்.

ஒரு நாள் சிங்களப் படையின் முற்றுகையின் போது காயப்பட்ட புலிவீரர்களைக் காவிக்கொண்டு அவனது படகு புறப்பட்டபோது, அமைதியாக இருந்த கும்புறுப்பிட்டிக் கடல் திடீரென வழமைக்கு மாறாய் மாறியது.

கொந்தளித்த கடல் வண்டியைக் கவிழ்க்க, அலைக்குள் தவித்து, புண்ணுக்குள் பட்ட உப்புத் தண்ணீரால் துடித்த தோழர்களைப் பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவந்து சேர்த்தது கண்ணுக்குள் நிற்கிறது.

86 இன் இறுதி. சுற்றிவளைப்போன்ரில் காயமடைந்து யாழ்ப்பாணம் வந்தபின், தமிழகத்திற்கு வண்டியோட்டுவது அவனுக்கு ஒப்படைக்கப்பட்ட வேலை. அந்தப் பணியின் போது அவன் நேவியிடம் கலைபடுவதும் மூன்றுநேர உணவைப் போல நிகழும் சம்பவம்.

அப்படியான ஒரு நாளில், முன்னிரவு நேரம், பொருட்களோடும், போராளிகளோடும் வந்துகொண்டிருந்த சாள்சின் படகை, திடிரென எதிர்ப்பட்ட நேவிப்படகு கலைத்துத் தாக்க, இயலுமானவரை வேகத்தைக் கூட்டிச் சாள்ஸ் ஓட முயல, பீரங்கிக் குண்டு பட்டு வெடித்துச் சிதறிய படகிலிருந்து அவன் தூக்கி வீசப்பட்டான். முகம்மது மாத்திரம் கண்ணுக்குத் தெரிந்தான்.

கரையை நோக்கி நீந்தத் தொடங்கினார்கள். மைல்க்கணக்கான தூரம். நேரம் செல்லச் செல்ல களைத்துப்போய் பின் தங்கிய முகம்மது கண்ணுக்கு முன்னாலேயே அலைகளுக்குள் காணாமல் போய்விட்டான்.

எல்லாம் போய்விட்டது. தோழர்களை இழந்த துயர், நடுச்சமுத்திரம், உள்ளிழுக்கும் கடல், தனித்த ஒருவன், தளராத உறுதி. 17 மணிநேரம் நீந்தி மறுநாள் மாலை வடமராட்சி கரையில் ஒதுங்கும் வரை, மயக்கம் தன்னை ஆட்கொள்ள அனுமதிக்காதிருந்தான் அந்த வேங்கை என்பதை, மற்றவர்கள் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது.

அது அவனது மன வைராக்கியத்திற்க்குச் சான்று.

அந்த நினைவெல்லாம் நாங்களும் ஒருநாளைக்கு நேவிப்படகுகளைக் கலைத்து அடிக்க வேண்டுமென்ற வேட்கையை, அந்த வீரனுக்குள் வளர்ந்துக் கொண்டிருந்திருக்கும்.

இந்தியப்படையின் ஆக்கிரமிப்புக் காலம். இப்போது அவனது பணி மணலாற்றில் தலைவரின் நிழலில், போர்மையம் கொண்டிருந்த முனையில். மிகமிக இன்றியமையாத கடல்வழி நினியோகம்தான், இங்கும் அவனது வேலை, வண்டி ஓட்டிவிட்டு வந்து நிற்கும்போது களைப்போடு எங்காவது படுத்திருப்பான் என்று தேடினால், போராளிகளுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருப்பான்.

அல்லது கொம்யூனிக்கேசன் சேற்றில் ஏதாவது செய்துகொண்டிருப்பான். எதுவுமே இல்லாவிட்டால், சமையற்கட்டில் கறிக்கு உபுப்புளி சரிபார்த்துக் கொண்டாவது இருப்பான்.

இந்தியர்கள் வெளியேற்றப்பட்ட பின், சசிக்குமாரோடும் – பிருந்தனோடும் யாழ்ப்பானத்திலிருந்த பயிற்சி முகாம்களில் புதிய போராளிகளுக்கு துறை சார்ந்த வகுப்புக்கள் எடுத்துக்கொண்டு இருந்த சாள்ஸ், சிங்களப்படையுடன் மீண்டும் போர் தொடங்கிய பின், கடற்புலிகள் பிரிவோடு இணைக்கப்பட்டான்.

சாள்சின் எல்லாத் திறமைகளும், அனைத்து அம்சங்களும் முழுமையாக வெளியிட்ட காலம் அது.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் புதிய பரிமாணம் பெற்றபோது, தளபது சூசையின் உற்ற தோழனாக நின்று, கடற்புலிகளின் வளர்ச்சிக்காக ஓய்வில்லாமல் அவன் உழைத்தான்.

சாள்ஸ் ஒரு கடற்காவியம்.!
“விடுதலைப் புலிகளின் வரலாற்றில் கடற்புலிகள் முக்கியமான ஒரு அத்தியாயம்” என்று தலைவர் அவர்கள் சொல்லுகின்றார்.”கடற்புலிகளின் வளர்ச்சியில் சாள்ஸ் ஒரு பிரதானமான உந்துவிசை” என்கிறார் தளபதி சூசை.
சாள்ஸ்!

ஒரு சிறந்த மனிதனாக, தேசப்பற்றும் உறுதியும் மிக்க போராளியாக, நட்புக்கொள்கிறவர்களுக்கு இனிய நண்பனாக, எதிரி அதிர சண்டைகளை வழிநடத்தும் தளபதியாக, புதியனவற்றை படைக்க முயலும் ஒரு தொழில்நுட்ப நிபுணனாக, போராளிகளுக்கு அறிவூட்ட விளையும் ஆசானாக அலைகளை தோற்கடிக்கும் படகோட்டியாக, அட்டகாசமான சமையல்காரனாக, மக்களுக்கு பணிசெய்து நிற்கும் சமூகப்பர்ராலனாக….. இன்னும்… இன்னும்…. எல்லாவற்றுக்கும் பொருத்தமானவன் அந்த விடுதலைப்புலி.

சின்ன குழந்தையாக தவழும் கடற்புலிகளை, பெரும்படை அமைப்பாகக் கட்டி எழுப்பும் கனவுகளோடு வாழ்ந்தானே அந்த வீரன்! தன்னையே உருக்கி அதன் அடிவேரில் பாய்ச்சியல்லவா தனை நெடிதுயரச் செய்து கொண்டிருந்தான். ஏன் திடீரென எங்களை விட்டுப் போனான்?.

கண்ணுக்குள் சுழல்கிறது அந்த நிலவு முகம். இறுதி நாட்களில் கிளாலிக் கடலில், எதிரிக்கு முன்னால் அது செஞ்சூரியனாய்ச் சுட்டெரித்தது.

11.06.1993 அன்றிரவு.
20 மெயில் நீலப் பெருங்கடல், படகோட்டம் தொடங்கிவிட்டது. ஏக்க விழிகளோடு படகுகளில் மக்கள். தமிழரின் பிணந்தின்னக் காத்திருக்கும் சிங்களச் சுறாக்கள். மக்களைக் காக்கும் பணியில் அவர்கள் குழந்தைகள். அவர்களை வழினடத்தியபடி களத்தில் சாள்ஸ்.

ரவைகளைப் பொழிந்தபடி விரைந்து வருகின்றன எதிரியின் படகுகள். நேருக்கு நேர் எதிர் கொள்கின்றன புலிகளின் படகுகள். பிப்ரியும், எல்.எம்.ஜியும் தணல் கக்கிய ஒரு படகில் சாள்ஸ். இருள் வானைக் கிழித்தன ஒலிக்கொடுகள், அதிர்ந்து போன எதிரி!

எதிர்பாராத கணம்! திடீரென எல்.எம்.ஜி இயங்க மறுத்தது. அது கிவிட்டுவிட்டது. சாள்சின் கையிலிருந்து முழங்கிய பிப்ரியை மட்டும் நம்பி எதிரியை நெத்தி முட்ட நெருங்கியது படகு! இடைவெளி நன்றாகக் குறுகிவிட்ட நிலையில் இன்னொரு எதிர்பாராத கணம் பிப்ரியும் இயங்க மறுத்துவிட்டது.

சாள்ஸ் திரும்பத் திரும்ப கோக் பண்ணி கோக் பண்ணி அடிக்கவும், அது பிசகிக் கொண்டேயிருந்தது. எதுவுமே செய்யமுடியாத சூழ்நிலையில், படகைப் பக்கவாட்டாக திருப்பி எடுக்க முயல, நேவியோடு போராடப் பிப்ரியோடு போராடிக்கொண்டிருந்த சாள்சின் உடலைத் துளைத்துச் சென்றன ரவைகள்!

உடனடியாக கரையை நோக்கித் திருப்பப்பட்டது படகு. இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது நீளக்கடல். ஓட ஓட கடலும் நீண்டுகொண்டேயிருக்க, இரத்தப் பேருக்கு அதிகமாக்கிக் கொண்டே போனது. சண்டையின் துவக்கத்திலேயே நாங்கள் மகானை இழந்துவிட்டோம். படகு கரையைத் தொடும் போது எங்கள் சாள்சும் எங்களை விட்டுப் போய்விட்டான்.

மக்களின் படகுகள் பாதுகாப்பாக மறுகரையை அடைந்து கொண்டிருந்தன.

ஒ…… சாள்ஸ்! எங்களின் கடற்போர்த் தளபதியே! உனது நினைவுகளையும், கனவுகளையும் எங்களோடு விட்டுச் சென்று விட்டாய். நீ சுமந்த இலட்சியத்தை நாங்களும் சுமக்கின்றோம். அதை அடையும்வரை நாங்கள் ஓயமாட்டோம், உன்னைப் போலவும் கடலில் அலையைப்போலவும்!


லெப்.கேணல் றெஜித்தன் 2008 ஜூன் மாதம் 11ஆம் திகதி வன்னிச் சமரில் வீரச்சாவடைந்தார். 

எல்லோரும் பரபரப்பாக தொலைத்தொடர்புக் கருவிக்கு அருகில் காத்திருந்தோம். ‘எல்லாம்சரி, படுங்கோ’ என்றொரு செய்தி றெஜித்தன் அண்ணனிடம் இருந்து வரவேண்டும். நேரம் நள்ளிரவையும் தாண்டி நீண்டுகொண்டிருந்தது. எதிர்பார்த்த நேரத்துள் அந்தச் செய்தி வரவில்லையாதலால் ஏதாவது சிக்கலாகியிருக்க வேண்டுமென்று உள்மனம் சொல்லிக்கொண்டாலும், அப்படியேதும் இருக்கக்கூடாது என்று விரும்பினோம். 

சிலவேளை றெஜித்தன் அண்ணா எங்களை மறந்திருக்கலாமென்று ஒருவன் சொன்னான். ஆனால் அவர் அப்படிப்பட்டவரில்லை. செய்திக்காக நாம் காத்திருப்போமென்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஏற்கனவே இப்படியொரு செய்தியைச் சொல்வேன் எனச் சொல்லிவிட்டுத்தான் முன்னுக்குச் சென்றிருந்தார்.  அன்றிரவு முழுவதும் கடும்மழை பொழிந்துகொண்டிருந்தது. உள்ளேபோனவர்கள் படக்கூடியபாடுகளை நினைத்துக் கொண்டோம். மழைகாரணமாகவும் திட்டத்தில் ஏதும் பிசகு நடந்திருக்குமோ, எல்லாம் சரியாக நடந்தாலும் நாளைக் காலையில் நாம் எதிர்பார்த்தபடி எதிரி நடந்துகொள்வானோ, நாளைக் காலையும் மழைபெய்தால் என்ன நடக்கும்? என்று பலவாறு யோசித்துக்கொண்டிருந்தபோது றெஜித்தன் அண்ணாவிடமிருந்து தகவல் வந்தது. ‘படுங்கோ. விடிய வந்து கதைக்கிறன்’ என்பதாக அத்தகவல் இருந்தது. ஏதோ பிசகு நடந்துவிட்டதென்று விளங்கியது. நாங்கள் இப்போது நிற்பது வடமராட்சியின் செம்பியன்பற்றுப் பகுதியில். எமது தளத்திலிருந்து ஒரு தாக்குதல் நடவடிக்கைக்காகச் சென்ற அணியினர் சரியாகப் போய்ச்சேர்ந்தனரா என்ற தகவலைத்தான் எதிர்பார்த்திருந்தோம். அதிகாலையில்தான் தெரிந்தது, போனவர்கள் அனைவரும் திரும்பவும் வந்துவிட்டார்களென்பது. அதுவொரு பதுங்கித் தாக்குதல் திட்டம். நாகர்கோவில் முன்னணிக் காப்பரண் வரிசையிலிருக்கும் இராணுவத்தினர் காலைநேரத்தில் காப்பரண் வரிசைக்குப் பின்புறமாகவுள்ள பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது வழமை. காலை ஆறுமணிக்கு ரோந்து அணி காப்பரண் வரிசையிலிருந்து புறப்பட்டு நகரத் தொடங்கும். அந்த அணி மீது எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வைத்துத் தாக்குதல் நடத்துவதுதான் எமது திட்டம். தாக்குதல் திட்டம் மிகச்சிறியளவில்தான் தொடங்கப்பட்டது. பின்னர் பெரிதாகிப் பெரிதாகி இறுதியில் தலைவரே நேரடியாகக் கவனமெடுத்து நடத்தும் ஒரு தாக்குதலாக வந்துவிட்டது. இந்த ரோந்து அணி மீதான தாக்குதல் தனியே கண்ணிவெடித் தாக்குதலாகவும், அதன்பின்னர் தேவைக்கேற்ப எறிகணைவீச்சுத் தாக்குதலாகவும் தீர்மானிக்கப்பட்டது. நேரடியான ஆயுதச்சண்டையில் எமது அணியினர் ஈடுபடுவதில்லை என்று திட்டமிடப்பட்டது. எதிரியின் பகுதிக்குள் ஊடுருவதும் வெளியேறுவதும் நீரேரி – கண்டல்காடு வழியாகவே. 

உண்மையில் இந்த நீரேரி-கண்டல்காடு என்பது இரு தரப்புக்கும் பெரிய சாதக பாதகங்களைக் கொண்டிருந்தது. இருதரப்புமே மற்றப் பகுதிக்குள் இலகுவாக ஊடுருவ இந்தக் கண்டல்காடு உதவியாகவிருந்தது. இப்போது எமது அணியினரும் இக்கண்டல்காடு வழியாக ஊடுருவி கண்ணிவெடியை நிலைப்படுத்திவிட்டு உடனடியாகவே தளம் திரும்பிவிடுவர். இருவர் மட்டுமே அங்கே தங்கியிருந்து தாக்குதலைச் செய்யவேண்டும். எறிகணைகளுக்கான திருத்தங்களையும் களநிலைமையையும் அவர்களே கட்டளைப்பீடத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இருட்டியபின்னர் வெளியேறித் தளம் திரும்ப வேண்டும்.   இந்தப் பதுங்கித் தாக்குதலுக்குப் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்ட கண்ணிவெடி ‘இராகவன் கண்ணிவெடி’. என் அறிவுக்கெட்டியவரையில் முதன்முதலில் பதுங்கித் தாக்குதலுக்கு இக்கண்ணிவெடியைப் பயன்படுத்தியது இத்தாக்குதலுக்கே ஆகும். ‘இராகவன்’ என்ற இக்கண்ணிவெடி இயக்கத் தயாரிப்பு. சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத்தளபதியாகவிருந்து ஓயாத அலைகள்-3 இல் வீரச்சாவடைந்த லெப்.கேணல் இராகவனின் நினைவாக இக்கண்ணிவெடிக்குப் பெயர் சூட்டப்பட்டது. உண்மையில் இது பதுங்கித்தாக்குதலுக்கான கண்ணிவெடியன்று. எதிரியின் பகுதிக்குள் ஊடுருவி இக்கண்ணிவெடியைக் கொண்டு தாக்குதல் நடத்துவதென்பது இலகுவான காரியமன்று. சுமார் 50 கிலோகிராம் நிறையுடைய இக்கண்ணிவெடி ஐம்பதாயிரம் சிதறுதுண்டுகளைக் கொண்டது. வழமையான கிளைமோர்கள் போலன்றி 360 பாகையுமே சிதறுதுண்டுகளைப் பாய்ச்சக்கூடியவாறு தயாரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஓர் உரல் போன்ற வடிவிலும் அளவிலும் இருக்கும் இதைக் காவிக்கொண்டு எதிரியின் பகுதிக்குள் ஊடுருவதும், நகர்வதும் இயலுமான காரியமன்று. ஆனால் நாகர்கோவில் பதுங்கித் தாக்குதலுக்கு இராகவன் கண்ணிவெடியைப் பயன்படுத்துவதென்று தீர்மானிக்கப்பட்டபோது முதலில் ‘இதென்ன விசர்வேலை?’ என்றுதான் தோன்றியது. ஆனால் அகிலன் வெட்டையில் நடந்த இராகவன் பரிசோதனை வெடிப்புக்குப் போன எல்லோருக்குமே அக்கண்ணிவெடி மீது ஒரு விருப்பு இருந்தது. அதுஏற்படுத்தும் தாக்கம், சேதம், சத்தம் என்பவற்றை அறிந்தவர்கள், அதைக் கொண்டு எப்படியாவது எதிரிமீது ஒரு தாக்குதலைச் செய்ய வேண்டுமென்ற அவாவைக் கொண்டிருந்தார்கள். இங்கும் தாக்குதலைச் செய்யவென ஒழுங்கமைக்கப்பட்ட அணியினர் ஏற்கனவே இராகவன் கண்ணிவெடிப் பரிசோதனைக்கு வந்திருந்தவர்கள். இதுவொரு மிகக்கடினமான பணியென்பதைத் தெரிந்தும் அவர்கள் இராகவனைக் கொண்டு தாக்குதல் நடத்துவதென முடிவெடுத்தார்கள்.   இப்போது தாக்குதலை நடத்துவதற்கென ஒழுங்கமைப்பட்ட அணியானது கரும்புலிகளுக்கான வேவு அணியே. ஐவரைக் கொண்ட இவ்வணி இரவோடிரவாக நகர்ந்து கண்ணிவெடியை உரியவிடத்தில் நிலைப்படுத்திவிட்டு மூவர் உடனேயே திரும்பிவந்துவிட இருவர் மட்டும் தம்மை நிலைப்படுத்திக் கொண்டுவிட வேண்டும். திட்டத்திலே நேரம் மிகமிக முக்கியமானதாக இருந்தது. இருளத் தொடங்கியதும் எமது தளத்திலிருந்து புறப்பட்டால், அதிகாலை நான்குமணிக்கும் மீளவும் எமது தளத்துக்கு அந்த மூவரும் திரும்பிவிடவேண்டும். இடையிலே நீருக்குள்ளால், பற்றைகளுக்குள்ளால் நகர்வது, அதுவும் அந்த உருப்படியைக் கொண்டு நகர்வதென்பது இலகுவான செயலன்று. இவையெல்லாம் கவனத்திலெடுக்கப்பட்டு பயிற்சிகள் தொடங்கின. அந்நேரத்தில் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்பு அணிகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த மேலாளர் றெஜித்தன் அண்ணாவின் மேற்பார்வையிலேயே இத்தாக்குதலும், அதற்கான பயிற்சிகள் உட்பட ஏனைய நிர்வாக வேலைகளும் விடப்பட்டிருந்தன. ஏற்கனவே வெடிபொருள், கண்ணிவெடிப் பயிற்சிகளைப் பெற்றிருந்தாலும் இது தாக்குதலணிக்குப் புதியது. மின்கம்பி வழியில்லாமல் தொலைக் கட்டுப்பாட்டு முறைமூலமாக தாக்குதலை நடத்தப்போவதால் அக்கருவிகள் தொடர்பிலும் மேலதிகப் பயிற்சிகள் பெறவேண்டியிருந்தது. இராகவன் கண்ணிவெடி, தொலைக்கட்டுப்பாட்டு வெடித்தற் பொறிமுறை என்பவற்றைக் கற்பிக்கவும் பயிற்றுவிக்கவும் கேணல் ராயு அண்ணையிடமிருந்து ஒருவர் வந்திருந்தார். தாக்குதலுக்கான நாள் குறிக்கப்படவில்லை; ஆனால் பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன.   

அப்போதைய யுத்தச் சூழ்நிலையைப் பற்றி அறிந்துகொள்வதும் முக்கியம். எல்லாவிடத்திலும் போர் மந்தமடைந்திருந்தது. அவ்வாண்டின் ஏப்ரலில் நடைபெற்ற தீச்சுவாலை இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் எந்தப் பெரிய சண்டையும் நடைபெறவில்லை. ஆங்காங்கே பதுங்கித் தாக்குதல்கள் மட்டும் எப்போதாவது நடந்துகொண்டிருக்கும். முன்னணிக் காப்பரணில் பதுங்கிச் சுடுவதும், இடையிடையே எறிகணை வீசிக்கொள்வதுமென்றுதான் களமுனை மந்தமாக நகர்ந்து கொண்டிருந்தது. வன்னியின் மறுமுனையில் மணலாறு, வவுனியா, மன்னார் முனைகளிலும் எல்லாமே அமைதியாக இருந்தது. ஆனால் ஆள ஊடுருவும் அணிகள் இருதரப்பிலும் மாறிமாறி ஊடுருவித் தாக்குதல்களை அவ்வப்போது நிகழ்த்திக் கொண்டிருந்தன.

இந்நிலையில்தான் நாகர்கோவில் பகுதியில் இப்படியொரு பதுங்கித் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டது. ஜூலை மாசத்தின் நடுப்பகுதியிலிருந்து எமது பயிற்சிகள் தொடங்கியிருந்தன. தாக்குதல் நடத்துவதற்கான நாள் குறிக்கப்படாமல் பயிற்சி மட்டும் நகர்ந்துகொண்டிருந்தது. ‘எப்ப அடிக்கப் போறியள்? ஏதாவது பிரச்சினையெண்டா சொல்லுங்கோ’ என்று தலைவரும் இரண்டு மூன்றுதரம் கேட்டாலும் தாக்குதல் நடக்கவில்லை. ஏன் இழுபட்டுக்கொண்டிருந்தது என்று சரியாக நினைவில்லை. நாளை மறுநாள் தாக்குதல் நடத்துவது என்று நாம் தீர்மானித்து, நாளைக்கு இரவு அணி நகர்வதற்குரிய இறுதித் தயார்ப்படுத்தல்களை முடித்து நித்திரைகொண்டு எழும்பினால் யாரோ வேறொரு முனையில் தாக்குதலைத் தொடங்கியிருந்தார்கள்.   

ஆம்! அது 24/07/2001 அதிகாலை. சிறிலங்காவின் தலைநகரில் தாக்குதல் தொடங்கிவிட்டிருந்தது. கட்டுநாயக்கா விமானத்தளம் எரிந்துகொண்டிருந்தது. உண்மையில் அதேநாளில் எமது தாக்குதலும் நடந்திருக்க வேண்டுமென்பது தலைவரின் எதிர்பார்ப்பாக இருந்திருக்கலாம். ஆனால் சரியான ஆயத்தமற்ற நிலையில் எம்மை அவசரப்படுத்தக்கூடாதென்பதற்காக விட்டிருக்கலாம். இப்போது எமது நிலை சற்றுச் சங்கடமாகப் போய்விட்டது. இன்றிரவு நகர்வதா இல்லையா என்பது முடிவில்லை. சிறப்புத் தளபதியிடமிருந்து மதியமளவில் செய்தி வந்தது இன்றிரவு நகரவேண்டாமென்று. அன்று முழுவதும் கட்டுநாயாக்காத் தாக்குதல் செய்திகளோடு எமது பொழுது போனது. எமது தரைக்கரும்புலிகள் அணியிலிருந்தும் கரும்புலிகள் சிலர் கட்டுநாயக்காத் தாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 27 ஆம் திகதி இரவு நகர்வதென்றும் 28 ஆம் திகதி காலை தாக்குதல் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டதற்கிணங்க எமது அணி அன்றிரவு ஊடுருவியது. தாக்குதலணியை வழிநடத்தவும், மறுநாள் கண்ணிவெடித்தாக்குதல், எறிகணைத் தாக்குதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கவுமென றெஜித்தன் அண்ணா நாகர்கோவில் பகுதிக்கு நகர்ந்திருந்தார்.

உள்நுழைந்த அணி கண்ணிவெடியை நிலைப்படுத்திவிட்டு இருவரை விட்டுவிட்டு மிகுதி மூவரும் திரும்பிவந்துவிட்டால் எமக்குத் தகவல் தருவதாகச் சொல்லிவிட்டுத்தான் றெஜித்தன் அண்ணா போயிருந்தார்.   அவரிடமிருந்து வந்த தகவல், எமது திட்டம் சரிவரவில்லை என்பதை உணர்த்தியது. காலை ஆறுமணிக்கெல்லாம் றெஜித்தன் அண்ணா எமது இடத்துக்கு வந்துவிட்டார். என்ன சிக்கல் நடந்ததென்று கேட்டறிந்து கொண்டோம். சிக்கலை இன்றே நிவர்த்திசெய்து இன்றிரவே மீள ஊடுருவ வேண்டுமென்பது அவரின் திட்டமாக இருந்தது. அன்றையநாள் எனக்கு அலைச்சலாக அமைந்தது. 

-இளந்தீரன்-


யாழ். மாவட்டம் காரைநகர் சிறிலங்கா கடற்படைத் தளத்தில் 11.06.1996 அன்று ஊடுருவி தரித்து நின்ற இரு ‘சவட்டன்’ ரோந்துப் படகினையும், ஒரு ‘பேபி டோறா’ படகினையும் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட சிலோஜன் நீரடி நீச்சல் பிரிவு கடற்கரும்புலி மேஜர் இளங்கோ / ஜீவரஞ்சன் ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 24 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments