நவீன வரலாற்றில் நிகழ்ந்த ஆகப்பெரிய காலநிலை சார் இயற்கை அனர்த்தம் இதுவே. இது இலங்கையில் அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்திய இரண்டாவது இயற்கை அனர்த்தமாக மாறியுள்ளது.
முதலாவது 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி. ஆனால் பொருளாதாரப் பாதிப்பினை ஏற்படுத்திய இயற்கை அனர்த்தங்களில் இதுவே முதலாவது.
ஏனெனில் சுனாமியினுடைய பொருளாதாரப் பாதிப்புக்கள் கரையோரம் சார்ந்து மட்டுமே இருந்தது. ஆனால் டிட்வா புயல் நாடு முழுவதும் பாதித்துள்ளது. இனனும் சில நாட்களில் தாக்க மதிப்பீட்டு அறிக்கை வரும்போது அதனை உணரலாம். உயிரிழப்புக்கள் கூட நாம் நினைப்பதை விட மிக அதிகமாக இருக்கவே வாயப்புண்டு.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதனால் 13 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. ஆனால் பில்லியன் கணக்கான பொருளாதார இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இலட்சக்கணக்கான வயல் நிலங்கள், தோட்ங்கள் அழிந்துள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்துள்ளன. இலட்சக்கணக்கான கால்நடைகளின் நிலை என்னவென்று தெரியவில்லை.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 200க்கு மேற்பட்ட குளங்கள் முழுமையாக புனரமைக்க வேண்டும். வீதிகள், பாலங்கள், புகையிரதப்பாதைகள், பொது நிறுவனங்கள் சேதமடைந்துள்ளன.
அனர்த்தத்துக்கு பின்னான நிலைமையிலும் நாம் மிக அவதானமாகவும் பொறுப்போடும் நடந்து கொள்ளவேண்டும். திட்டமிட்ட வினைத்திறனான அனர்த்த மீட்பு செயற்பாடுகள் அவசியம்.
குறுங்கால அனர்த்த மீட்பு செயற்பாடுகளும் நீண்ட கால அனர்த்த மீட்பு செயற்பாடுகளும் ஒன்றுடனொன்று இணைந்த வகையில் அமைய வேண்டும். இந்த மிகப்பெரிய அனர்த்தத்திலிருந்து அனைவரும் மீண்டெழ வேண்டும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.






