ஒஸ்லோ:
நோர்வேயை பொறுத்தவரை, இளைஞர்கள் வலி நிவாரணி மருந்துகளை அதிக அளவில் உட்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக, நோர்வீஜிய மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டில் மருந்துகளை அதிகமாக உட்கொண்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக உச்சரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் “Innlandet” பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் 95 இளவயதினர்கள், வலி நிவாரணி மருந்துகளை அதிகமாக உட்கொண்டதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலான சம்பவங்களில் “Paracet” என்ற வழமையான வலி நிவாரணி மாத்திரை முக்கிய காரணமாக இருந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் ஒரு முழுப் பொதியளவு Paracet எடுத்திருந்த நிலையில், சில சம்பவங்களில் அதைவிட மிக அதிகமான அளவும் உட்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
“Sjukehuset Innlandet” இன் குழந்தைகள் மற்றும் இளைஞர் பிரிவு மருத்துவர் “Kristian Holm” தெரிவிக்கையில், அதிக அளவு Paracet அல்லது Ibux உட்கொள்வது மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம் என்றும், கடுமையான நிலையில் உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
இளைஞர்கள் சிலர் வலி நிவாரணிகளை உடல் வலிக்காக மட்டும் பயன்படுத்துவதில்லை என்றும், மனஅழுத்தம், பாடசாலைகளில் தேர்வு குறித்த பதற்றம், காதல் தோல்வி, தனிப்பட்ட பிரச்சினைகள் அல்லது மனரீதியான சிரமங்கள் போன்றவற்றை எதிர்கொள்ளும் போதும் அவற்றை எடுத்துக்கொள்வதாக மருத்துவப் பணியாளர்கள் கூறுகின்றனர். இத்தகைய சூழ்நிலைகளில் வலி நிவாரணி மருந்துகள் பிரச்சினைக்கான தீர்வாகாது எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இளைஞர்களிடையே வலி நிவாரணி மருந்துகளின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, மருத்துவமனை மற்றும் பாடசாலை சேவைகளுக்கு இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும், எப்போது வலி நிவாரணி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும், எப்போது வேறு உதவி அல்லது மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும் என்பது குறித்து கூடுதல் தகவல்களை வழங்குவதும் இதன் நோக்கமாகும்.
மருத்துவமனைத் தகவலின்படி, அதிகப்படியான மருந்து உட்கொண்ட பின்னர் சிகிச்சை மற்றும் வழிகாட்டுதல் பெற்ற குழந்தைகளில் 88 சதவீதம் பேர் மீண்டும் இதே காரணத்திற்காக மருத்துவமனைக்கு வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சரியான தகவல் மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக மருத்துவப் பணியாளர்கள் கூறுகின்றனர்.
மருந்து அதிகமாக உட்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டால், அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்காமல் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது முக்கியம். அவசரநிலையில் 113 ஐ தொடர்புகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
02.10.2026






