ஈரானில் பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் மீது திடீர் விசாரணை!

You are currently viewing ஈரானில் பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் மீது திடீர் விசாரணை!

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களை ஈரானியப் பாதுகாப்புப் படையினர் பல மணி நேரம் சட்டவிரோதமாகச் சிறைபிடித்து விசாரணை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்திற்கு ஈரானுக்குக் கடுமையான “விளைவுகள்” ஏற்படும் என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ழான்-நோயல் பரோ எச்சரித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

தூதரக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ராஜதந்திரப் பாதுகாப்பை முற்றிலும் மீறி, ஈரானியப் பாதுகாப்புப் படையினர் “மிகக் கடுமையான அச்சுறுத்தல் நடவடிக்கையில்” ஈடுபட்டதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எவ்விதக் காரணமும் இன்றி இரண்டு ஊழியர்களும் பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. விசாரணையின் போது, அவர்களில் ஒருவர் மீது உடலளவிலான தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.

பின்னர் விடுவிக்கப்பட்ட இருவரும் பாதுகாப்பாகத் தூதரகத்திற்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் அடுத்த சில மணிநேரங்களில் பிரான்ஸ் திரும்பவுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அந்த இரு ஊழியர்களும் ஈரானியக் கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் உள்ளிட்ட சிவில் சமூகத்தினருக்கு ஆதரவளிக்கும் பிரான்ஸின் திட்டங்களைப் பராமரித்து வந்தவர்கள் என்பதால், இந்தத் தாக்குதல் நடவடிக்கை மேலும் அதிர்ச்சியளிப்பதாக அமைச்சர் பரோ சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஈரானிய அதிகாரிகள் இதுவரை எந்தவொரு பகிரங்கக் கருத்தையும் வெளியிடவில்லை.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply