அமைதிப் பேச்சுவார்த்தையை முழுமையாக நிறுத்துவோம் என அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எண்ணெய் கப்பல் மீது ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்க இராணுவ விமானங்கள் ஹோர்மூஸ் நீரிணையில் தாக்குதல் நடத்தியது. அமைதி ஒப்பந்தத்தை மீறியதாக ஈரானை 2ஆவது நாளாக அமெரிக்கா தாக்கியதால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியதாவது: அமெரிக்காவின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்ந்தால், அமைதிப் பேச்சுவார்த்தையை முழுமையாக நிறுத்துவோம்.
கொடுத்த வாக்குறுதிகளுக்கு துளியும் மதிப்பளிக்காது என்பதை இந்த புதிய தாக்குதல்கள் உணர்த்துகின்றது. இதுவே அமெரிக்காவின் இயல்பு. மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணை மீதான ஈரானின் கட்டுப்பாட்டிற்குச் சவால் விடும் எந்தவொரு முயற்சியும் பதற்றத்தை அதிகரிக்கும்.
ஈரான் தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு மாறாக,எந்தவொரு முயற்சியும் சிக்கலான சூழல்களுக்கே வழிவகுக்கும். இது ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதில் தாமதத்தை ஏற்படுத்துவதுடன், கடந்த இரண்டு இரவுகளில் நாம் கண்டது போன்ற பதற்றத்தையும் அதிகரிக்கும். இவ்வாறு அப்பாஸ் அராக்சி கூறினார்.
ஈரானே இருக்காது – ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க விமானப்படை, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு கிடங்குகள், கடலோர ரேடார் தளங்கள் உள்ளிட்ட பல இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியதன் காரணமாகவே இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் தொடர்ந்து பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டால், “ஈரானே இருக்காது” என டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த தாக்குதலையடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளதுடன், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நாடுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.






