ஈழத்தமிழ்ப் பெண்ணினத்தின் அடையாளம் – இரண்டாம் லெப்டினன்ட் மாலதி!

You are currently viewing ஈழத்தமிழ்ப் பெண்ணினத்தின் அடையாளம் – இரண்டாம் லெப்டினன்ட் மாலதி!

இன்று இரண்டாம் லெப்டினன்ட் மாலதியின் 35ஆவது ஆண்டு நினைவுநாள்.

மாலதி வீரயுகத்தின் முதற்பெண் மாவீரர். தாயகத்தின் மன்னார்மாவட்ட ஆட்காட்டிவெளியில் மட்டுமே அறியப்பட்டிருந்த அந்தப்பெண், கருவிஏந்திக் களமாடி, தன்னுயிர்விதைத்து, தாயகம்தாண்டி உலகம்முழுவதும் தன்னைப் பதியவைத்துக்கொண்டாள் என்பதுதான் அவளின் சிறப்பு. பெண்ணற் பெருந்தக்க யாவுள? என்போர்க்கான விடையாக தன் வாழ்வை முன்னிறுத்தியவள் மாலதி.

சிறுபருவம்விட்டு வளரவளர அந்தப்பெண்மனதுக்குள் இருந்த முரட்டுக்குணமும் பிடிவாதமும் காலப்போக்கில் இரக்கமும் பிறருக்கு உதவும் பண்புமாக மாற்றம்கண்டன. முன்னர் சகாயசீலியாக இருந்தவள் அப்போது மாலதியாகிவிட்டிருந்தாள்.

ஈழத்தமிழ்ப் பெண்ணினத்தின் அடையாளம் - இரண்டாம் லெப்டினன்ட் மாலதி! 1

அவளுக்குள் அச்சம் இல்லை. எதற்கும் அடிமைப்பட்டுப்போகும் இயல்பும் இல்லை. தற்துணிவு மட்டுமே பெரிதாகவிருந்தது. அந்த துணிவும் தன்நம்பிக்கையும்தான் அவளை ஈழப்பெண்ணினத்தின் அடையாளமாக்கியது.

போராட்டம் விரிவடையத்தொடங்குவதற்கு முற்பட்ட காலத் தில் தமிழ்ச்சமுகத்தில் பெண்கள் பேதைகளாகவும், பெறுமதியற்றவர்களாகவும் கணிக்கப்பட்டார்கள். பெண்ணின் சுயசிந்தனைகளோ அவளது தனித்துவமான ஆளுமைகளோ சமுகத்தால் அங்கீகரிக்கப்படாதிருந்தது. எடுத்துக்காட்டாக ஒருவர் கயிற்றை தவறாகக் கட்டினால்,? ‘ என்ன… பெட்டைக்கட்டுக் கட்டுகிறாய்?… ‘ என பழித்த காலம் அது. கண்களையும் காதுகளையும் இறுக மூடி, பெண்கள் கற்களாய் சமைந்திருந்த காலம் அது.

ஓரிருவர் தம்மீதான கட்டுக்களை உடைத்த கணப்பொழுதுகளில், அது அவர்களின் நடத்தைப்பிழையாகப் பார்க்கப்பட்ட காலம். அந்தக்காலத்தை மெதுமெதுவாய்க் கரைத்து பெண்களின் பேரெழுச்சிக்கு வித்திட்டவர் எங்கள் தேசியத்தலைவர் அவர்கள். தேசியத்தலைவர் அவர்களின் பெரும்படையில் இணைந்து தன்னைப் புதுப்பித்து, புதுமைப்பெண்ணாய் நிமிர்ந்தவர்களில் மாலதி முதற்பெண் மாவீரர்.

குடும்பத்தின் செல்லப்பெண்ணாய் எப்போதும் கலகலப்பாய் வாழ்ந்த மாலதி, பெண்ணடிமைச் சமுகத்தின் ஆழப்புரையோடிய அழுக்குகளை அகற்றும் புரட்சிப்பெண்ணாகினாள். போர் அவளுக்குள் பல்வேறு எண்ணங்களைக் கிளர்;த்திவிட்டிருந்தது.

எங்கள் தாய்த்தேசம் விடியவேண்டுமென்றால் வெறுமனே மண்மீட்புப்போர் மட்டும் போதாது, பெண்ணினமும் விடுதலையடையவேண்டும் என்ற எங்களின் தேசியத்தலைவரின் எண்ணத்தைப் புரிந்தவளாய் மாலதி தோற்றம்பெற்றாள்.

வீட்டைவிட்டு பெண்கள் வெளியேறுதல் சாத்தியமற்ற காலத்தில், யாழ்ப்பாணத்தில் கோட்டைப்பகுதியில் அவள்தன் தோழியருடன் காவற்கடமையில் நின்றாள். காத்து, கறுப்பு எனப் பெண்களை சமுகம் அச்சுறுத்தி வைத்திருந்த அக்காலத்தில் நள்ளிரவுகளில் காவற்பெண்ணாய் அவள் விழித்திருந்தாள்.

களமுனைகளிலும் மாலதியின் பங்களிப்பு இருந்தது. அரசியலிலும் அவளின் பங்களிப்பு இருந்தது. 1987இல் ஈழத்தமிழர்களின் இருண்டகாலம். இந்திய அமைதிப்படை ஈழத்தில் காலடிகள் பதித்திருந்த காலம். மாலதி யாழ்ப்பாணத்தில் தோழியருடனிருந்தாள்.

1987 இல்… தியாகதீபம் லெப்.கேணல்.திலீபனின் ஈகச்சாவுடன், தமிழ்மக்கள் இந்திய அமைதிப்படையை முற்றாக வெறுக்கத் தொடங்கியிருந்தனர். நாளாகநாளாக இந்திய அமைதிப்படையினருடனான முறுகல்நிலை இறுக்கமடையத் தொடங்கியது.

லெப்.கேணல்.குமரப்பா, லெப்.கேணல்.புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு போராளிகளின் மரணம் போரை உறுதிப்படுத்திற்று. மாலதியும் இன்னுஞ்சில தோழியரும் கோப்பாயில் கிறேசர்சந்தியில் ஊர்திகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போதுதான் முகாமைவிட்டு வெளியேவந்த இந்திய அமைதிப்படையினருக்கும் கண்காணிப்புக் கடமையில் நின்றவர்களுக்குமிடையில் போர்வெடித்தது. மாலதி விழுப்புண்ணுற்றாள். அங்கே அவளது வீரமரணம் உறுதியாயிற்று. இது நடந்து இன்று 32 ஆண்டுகள் உருண்டுவிட்டன. பெண்ணினத்தினதும் தமிழினத்தினதும் விடிவுக்காக ஓர் இலட்சியப்பாதையில் பயணித்து, மாலதி உயிரீந்த 32 ஆண்டுகளில் பெண்ணினத்தின் நிலை எப்படி இருக்கின்றது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டியவர்களாக இன்று இருக்கின்றோம்.

அந்நியப்படையினருடன் நேர்நின்றெதிர்த்து, தன்னினவிடுதலைக்காய் முதற்பெண் மாவீரராகிய மாலதியின் பெயர்தாங்கிய ‘ மாலதி படையணி ‘ தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டது.

விடுதலைப்போராட்டத்தில் எமது தமழ்ப்பெண்களை இணைத்துக்கொள்வதன் மூலம், சமுகத்தில் ஆளுமைகள், ஆற்றல்களிருந்தும் வெளிவரமுடியாப் பெண்ணினத்தை விழிக்கச் செய்து, எமது இனத்தின் விடுதலைக்கு வலிமைசேர்க்க முடியும் என்பதே தேசியத் தலைவர் அவர்களின் எண்ணமாக இருந்தது. பெண்மனங்களில் ஏற்படக்கூடிய விழிப்புநிலைதான் பெண்களின்மீதான அனைத்து அடக்குமுறைகளையும் தகர்த்தெறியும் என்பதை மாலதி உணர்த்தினாள்.

மனித ஆளுமை என்பது ஆண், பெண் என்கின்ற பாலியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்கின்ற தேசியத்தலைவரின் எண்ணக் கருத்திற்கமைய, பெண்போராளிகள் அளப்பரிய சாதனைகளையும் வீர வரலாறுகளையும் படைத்து, தங்களை அர்ப்பணித்திருக்கின்றார்கள். பெண்போராளிகள் வெறுமனே வீரத்தில் மட்டும் சிறந்தோங்கவில்லை. அரசியல், இராணுவம், மருத்துவம், ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரிணமித்தார்கள். நெருக்கடியான பல்வேறு சூழல்களில் துணிச்சலான முடிவுகளை வகுத்து வெற்றிகளைக் குவித்தார்கள். போர்க்களம் என்பது எத்தனை ஆபத்துகள் நிறைந்தது என்பதைத் தெரிந்துகொண்டே பெண்கள் களமுனைகளில் நின்று, அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்தார்கள்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சமடைந்திருந்த எங்கள் மண்மீட்புப் போராட்டம், பல்வேறு அரசியற் சூழ்ச்சிகளின் பின்னணியில் நந்திக்கடலில் மௌனித்தது. இது ஒரு போராட்ட வடிவமாற்றம் என்பதைப்புரிந்து கொள்ளாதவர்கள் ஒருபுறமிருக்க, தமிழ்ப்பெண்களின் நிலைகுறித்து நாம் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம். தாயகத்தில் உயிராபத்துகள் நிறைந்த சூழலில் எமது பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். போரின் அமைதி பெண்களின் வாழ்வையே புரட்டிப்போட்டிருக்கின்றது. உயிர் அச்சுறுத்தல்கள் மட்டுமன்றி, பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாகியே காணப்படுகிறது. என்றுமில்லாதளவுக்கு துயரமான மனதோடு பெண்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

எவ்வளவுதான் தற்துணிபு கொண்டிருந்தாலும் தமது ஆற்றல்களையும் ஆளுமைகளையும் முழுமையாக வெளிப்படுத்தமுடியாத சூழல் பெண்களைச் சிக்கவைத்துள்ளது. போரினால் ஏற்பட்ட உள, உடல் வடுக்களேர்டு வாழும் பெண்களின் உணர்வுகள் சொல்லிமாளாது. பெண்களின் வாழ்வாதாரம் எவராலும் உறுதிசெய்யப்படவில்லை. பாலியற் சுரண்டல்கள் மலிந்துகிடக்கின்றன. பெண்குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்றன.

உறவுகளை இழந்தும், காணாமலாக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைத்தேடியும் அலைந்துலையும் பெண்களின் வாழ்வு கருத்திற் கொள்ளப்பட வேண்டியதாகின்றது.

ஈழத்தமிழ்ப் பெண்ணினத்தின் அடையாளம் - இரண்டாம் லெப்டினன்ட் மாலதி! 2

தாய்நிலத்தில் மட்டுமன்றி, மறுவளமாகப் புலத்திலுள்ள பெண்கள் குறித்த சிந்தனைகளும் முன்வைக்கப்படவேண்டும். புலத்துப் பெண்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியவர்களாகவே உள்ளனர். மணிக்கூட்டுடன் சேர்ந்து ஓடும் புலத்தின் வாழ்க்கையிலும், வசதிகள், சுதந்திரமான போக்கு என்பதற்கு அப்பால் தம்மைச்சுற்றியுள்ள போலிமாயைகளைப் பெண்கள் பகுத்துணர்ந்து, அதனூடாக தம்மை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டியவர்களாக பெண்கள் உள்ளனர். மூத்த தலைமுறையினரால் கைவிடப்படமுடியாத சடங்குகளும் சம்பிரதாயங்களும் இளையதலைமுறையினர் பலருக்கு மனநெருக்கடி தருவனவாக தெரிகின்றன. அத்தோடு இரட்டைக் கலாசார கடைப்பிடிப்பு முரண்நிலைகளையும் தோற்றுவித்திருக்கின்றது. பண்பாட்டுக்கும் பகட்டுக்குமான இடைவெளி இன்னமும் புரிந்துகொள்ளப்படவேண்டியிருக்கின்றது.

கருணையுள்ளமும், கொடைமனப்பாங்கும் காணப்பட்டாலும் பழைமைவாத எண்ணங்களில் நம்பிக்கைகொண்டு அவற்றில் ஆழ்ந்து தன்நிலை மறந்துவிடுபவர்களையும் தரிசிக்க முடிகிறது. மிகவும் கடினமான காலநிலைகளிலும் சலிப்பற்று, வலிமையுடன் உழைக்கும் பெண்கள் தம்வாழ்வுடன் சேர்த்து தம்நுண்ணறிவையும் பெருக்கிக்கொள்வது அவசியமாகிறது. நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையும், கல்விச் செருக்கும் கொண்ட ஆளுமைமிக்கதொரு புதியதலைமுறைப் பெண்கள் பலர் புலத்தில் இருந்தாலும் அவர்கள் சரியான வழியில் வழிநடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்தே காணப்படுகின்றன. புதிய விளைநிலமான இவர்களின் மனதில் வீரியமுள்ள விதைகளை ஊன்றவேண்டிய பொறுப்பு புலம்பெயர் தாய்மாருக்குரியது. பேரிருளாக மூடிக்கிடக்கும் அறியாமையை உடைத்தெறிந்து, எமது தேசமீட்புக்கான புதியஎண்ணக்கருத்துகளை எண்ணிச் செயற்படுவதுதான் புலத்துப்பெண்களின் இன்றைய தேவையாக உள்ளது.

ஈழத்தமிழ்ப் பெண்ணினத்தின் அடையாளம் - இரண்டாம் லெப்டினன்ட் மாலதி! 3

பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்ற காலத்தை மாற்றி, பெண்ணென்றால் படையும் நடுங்கும் என்ற காலத்தைப் படைத்தவர்கள் எங்கள் மானத்தமிழ் மறப்பெண்கள். அவர்கள் படைத்துள்ள வரலாற்றை நாங்கள் பேணிக்காத்து, அடுத்த தலைமுறையினரின் கைகளில் ஒப்படைக்கவேண்டும். எழுச்சியும் புரட்சியும் மிக்க பெண்களால் மட்டுமே தம் தேசத்தையும் தமது அடுத்த தலைமுறையினரையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

 – சிவசக்தி-

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments