உக்ரைனுக்கு தலைவலியாகும், ரஷ்யாவின் புதிய ஏவுகணை…!

You are currently viewing உக்ரைனுக்கு தலைவலியாகும், ரஷ்யாவின் புதிய ஏவுகணை…!
ஒஸ்லோ:
“பாண்டெரோல் (Banderol” எனப்படும் புதிய வகை மலிவு விலை ஏவுகணையை ரஷ்யா, உக்ரைனுக்கு எதிராகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த ஏவுகணை, உக்ரைனின் வான்வழி பாதுகாப்புக்கு புதிய சவாலாக உருவெடுத்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் இராணுவ உளவுத்துறையின் தகவலின்படி, இந்த ஏவுகணை சுமார் 350 முதல் 400 கிலோமீட்டர் தூரம் வரை பறந்து தாக்கக்கூடியது. மேலும், 150 கிலோ எடையுள்ள வெடிகுண்டை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஏவுகணையின் முக்கிய சிறப்பம்சம், மிகத் தாழ்வான உயரத்தில் பறப்பதுதான். இதனால் ரேடார் அமைப்புகளால் அதை விரைவாகக் கண்டறிவது கடினமாகிறது. அதேவேளை, இதனைத் தடுக்க உக்ரைன் பயன்படுத்தி வரும் சில தடுப்பு ட்ரோன்களும் போதுமான பலன் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இந்த ஏவுகணைகள் Orion ட்ரோன்கள் மற்றும் Mi-28 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மூலம் ஏவப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் தற்போது, ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில் அமைக்கப்பட்ட தரை ஏவுதளங்களிலிருந்தும் இவை ஏவப்படுகின்றன. இதனால், ரஷ்யாவின் தாக்குதல் திறன் மேலும் விரிவடைந்துள்ளது.
இராணுவ ஆய்வாளர்கள் கூறுவதாவது, குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கக்கூடிய இந்த ஏவுகணைகள், நீண்டகாலப் போரில் ரஷ்யாவுக்கு ஒரு முக்கிய முன்னிலை வழங்கக்கூடும் எனவும், அதேவேளை, உக்ரைன் தனது வான்வழி பாதுகாப்பு அமைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்ந்து புதிய தொழில்நுட்ப ஆயுதங்களின் சோதனைக் களமாக மாறி வரும் நிலையில், இந்த புதிய ஏவுகணையின் அறிமுகம், போரின் அடுத்த கட்டத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
06.08.2026
பகிர்ந்துகொள்ள

Leave a Reply