உலகின் மிக நீளமான நிலக்கீழ் / கடலடி மின்கடத்தி!

உலகின் மிக நீளமான நிலக்கீழ் / கடலடி மின்கடத்தி!

உலகின் மிக நீளமான மின்கடத்தி (Electric Cable) நோர்வேக்கும், ஜெர்மனிக்கும் இடையில் கடலுக்கடியில் போடப்பட்டுள்ளது.

சுமார் 623 கிலோமீட்டர் நீளமான கடலுக்கடியில் போடப்பட்டுள்ள இம்மின்கடத்தி தொடர்பான வேலைகள் 2017 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, இப்போது நிறைவுற்ற நிலையில், இதன் பரீட்ச்சார்த்த இயக்கம் இம்மாதமளவில் ஆரம்பிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

623 கிலோமீட்டர்கள் நீளமான, அதியுயர் மின்னழுத்தத்தை கடத்தக்கூடிய இம்மின்கடத்தி, சுமார் 515 கிலோமீட்டர்கள் வரை கடலடியில் போடப்பட்டுள்ளதாகவும், கடலடியில் இம்மின்கடத்தி பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக கடலடியில் அகழ்வுப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டதாக, இத்திட்டத்துக்கு பொறுப்பவகித்த, நோர்வேயின் அரச மின்சக்தி நிறுவனமான “Statnett” நிறுவனத்தின் இயக்குனரான “Håkon Borgen” தெரிவித்துள்ளார்.

மேற்படி மின்கடத்தி மூலம் காவிச்செல்லப்படும் மின்சாரம், நோர்வேயின் தலைநகரமான ஒஸ்லோவின் மின்பாவனையை ஒத்த அளவுக்கான மின் தேவையை நிவர்த்தி செய்யக்கூடியதென்றும், இதன்மூலம் நோர்வே – ஜெர்மனி மின்வர்த்தகத்தை ஒழுங்குமுறைக்கு கொண்டுவருவதோடு, “மீள்சுழற்சி” முறையிலான மின் தேவைகள் தொடர்பான விடயங்களை இலகுவாக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பாவின் 50 சதவீதமான நீர்மின் உற்பத்திக்கான நீர்நிலைகளை கொண்டுள்ள நோர்வே, தேவை ஏற்படும்போது தனது அயல்நாடுகளுக்கு மின் விநியோகத்தை வழங்கக்கூடிய ஆற்றலுடையதாக இருந்தாலும், காற்றாலைகள் மற்றும் சூரிய ஒளிமூலம் மின்தேவைகளை பெற்றுக்கொள்ளும் ஜெர்மனி போன்ற நாடுகளின் மின் உற்பத்தி அதிகரிக்கும்போது, அந்நாடுகளிடமிருந்து மின்சக்தியை கொள்வனவு செய்யும் காலங்களில், நோர்வேயின் மின் உற்பத்திக்கான நீர்நிலைகளின் நீரை சேமித்து வைக்கவும் முடியுமென மேலும் தெரிவிக்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டில், முழுமையான வர்த்தக நோக்கத்தோடு இயங்கவிருக்கும் மேற்படி நிலத்தடி / கடலடி மின்கடத்தி, சுமார் 40 வருடங்களுக்கு பயன்பாட்டில் இருக்குமென கணக்கிடப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள