சில நாடுகள் நடுநிலை வகிப்பது குறித்து எங்களிடம் பேசுகின்றன. ஆனால், அவர்கள் போரை துவக்கிய அமெரிக்கா, இஸ்ரேலிடம் தான் பேச வேண்டும் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதல் 7வது நாளை கடந்துள்ளது. ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சில நாடுகள் நடுநிலை வகிக்கும் முயற்சிகளை துவக்கியுள்ளன. இந்த பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எங்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் கண்ணியத்தை பாதுகாக்க தயங்க மாட்டோம். ஈரான் மக்களை குறைத்து மதிப்பிட்டவர்களையும், இந்த போரை துவக்கியவர்கள் மீதும் தான் நடுநிலை வகிப்பவர்கள் கவனம் செலுத்த வேண்டும். என ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை
அமெரிக்காவிற்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் மீது குவைத் கடற்பரப்பில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன.
தாக்குதலுக்குள்ளான அந்தக் கப்பல் தற்போது தீப்பற்றி எரிந்து வருவதாகவும் இந்தத் தாக்குதல் குறித்த தகவல்களை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்தக் கப்பல் தாக்குதல் மற்றும் சேத விபரங்கள் குறித்து அமெரிக்கத் தரப்பிலிருந்து அல்லது சுயாதீன ஊடகங்களிடமிருந்து இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.






