ஐநாவின் புதுப்பிக்கப்பட்ட தீர்மானம் தமிழ்மக்களுக்கு ஏமாற்றம்!

ஐநாவின் புதுப்பிக்கப்பட்ட தீர்மானம் தமிழ்மக்களுக்கு ஏமாற்றம்!

ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை குறித்த தீர்மானத்தின் புதுப்பிக்கப்பட்ட முதல் வரைவு வெளியாகியுள்ளது.

முதல் நகல் வரைபில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள போதிலும் புதுப்பிக்கப்பட்ட வரைபில் சர்வதேச பொறுப்புக் கூறும் பொறிமுறை குறித்த தமிழ் மக்களின் வேண்டுகோள் ஓரளவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இலங்கை குறித்த தீர்மானத்தின் புதுப்பிக்கப்பட்ட வரைவு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினை எதிர்கால விசாரணைகளில் பயன்படுத்துவதற்காக மனித உரிமைகள் மற்றும் அது தொடர்பான குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரித்தல் ஒருங்கிணைத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழர் தரப்பால் மிகவும் எதிர் பார்க்கப் பட்ட போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என நம்பகத்தன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்ட இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பயணதடைகள், போன்றவற்றை விதிக்குமாறும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் மனித உரிமை ஆணையாளர் முன்வைத்த பரிந்துரைகள் குறித்து புதுப்பிக்கப்பட்ட வரைவில் இடம்பெறவில்லை.

இலங்கையில் தமிழர்கள் முஸ்லீம்கள் அதிகளவிற்கு ஓரங்கட்டப்படுவது சிவில் சமூகத்தினர் கண்காணிக்கப்படுவது அச்சுறுத்தப்படுவது ஊடக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் யுத்தத்தினால் உயிரிழந்தவர்களை பொதுமக்கள் நினைவுகூறுவது மீதான கட்டுப்பாடுகள் – நினைவுத்தூபிகள் அழிக்கப்படுதல் குறித்த கரிசனைகளும் புதிய வரைவில் இடம்பெற்றுள்ளன.

பகிர்ந்துகொள்ள