ஐநாவிற்கான மேலும் இரண்டுகடிதங்களுக்கு சம்மந்தர் விக்கி இழுத்தடிப்பு!

ஐநாவிற்கான மேலும் இரண்டுகடிதங்களுக்கு சம்மந்தர் விக்கி இழுத்தடிப்பு!

இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐ.நா மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஏற்கனவே ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், மேலும் இரு கடிதங்கள் அனுப்பப்படவுள்ளதாக  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அதன்படி முதலாவது கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய இரண்டு கடிதங்களை அனுப்புவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் பின்னடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் வைத்திருப்பதனால் எவ்விதமான பயனுமில்லை என்பதை கடந்த பத்து ஆண்டுகளில் கிடைத்த பிரதிபலன்களால் கூட்டமைப்பும் அதனுடன் சார்ந்த ஏனைய தரப்புக்களும் 2012ஆம் ஆண்டிலிருந்து நாம் வலியுறுத்தி வந்ததன் பிரகாரம் அவ்விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு இணக்கம் கண்டுள்ளன.

அதனடிப்படையிலேயே நாம் உள்ளிட்ட மூன்று கூட்டணிக் கட்சிகளினதும் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் கையொப்பமிட்டபோது கோரிக்கை கடிதமானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், அவரின் அலுவலகம் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் செயற்பாடானது, இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை செய்விப்பதற்கான வலுவான கோரிக்கையையும் அதேநேரம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிலிருந்து அவ்விடயத்தினை மீளெடுத்து ஐ.நா.செயலாளர் நாயகத்திற்கு அனுப்புவதை மட்டும் கொண்ட கோரிக்கையை மட்டும் உள்ளடக்கியதாகும்.

இதேநேரம், மேலும் இரண்டு கடிதங்கள் உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பி வைப்பதென்றும் இணக்கம் காணப்பட்டது.

ஆனால் தற்போது அவ்விடயம் குறித்து ஏனைய தரப்புக்கள் கரிசனை கொள்வதாக இல்லை. அவ்விடயம் சம்பந்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலிறுத்தி நான் மின்னஞ்சலை அனுப்பியுள்ளபோதும் இதுவரையில் அதுகுறித்து எந்த பதிலளிப்புக்களும் கிடைக்கவில்லை” என மேலும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள