செம்மணிப்புதை குழிக்கு நீதி கோரி இன்று நடைபெற்றபோராட்டம்
தமிழின அழிப்பினைச் சான்று பகரவல்ல வெளிப்படையான சாட்சியமான செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள 8 ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் பார்வையிட்டுள்ளனர்!
செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டு நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜேர்மனி தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியுமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட், இத்தாலித் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக், நெதர்லாந்து தூதுவர் விபே டி போயர், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளான பிரதித் தூதுக்குழுத் தலைவர் கலியா அகிஷேவா, ஒத்துழைப்புப் பிரிவுத் தலைவர் கலாநிதி ஜோஹன் ஹெஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பார்வையிட்டனர்.
அதேவேளை பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பினரை குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள், இன அழிப்பின் சாட்சியங்கள், மக்களிற்காகப் போராடும் தமிழர்களை இவர்கள் சந்தித்துப் பேசவிடாமல் காவல்துறையினர் தடுத்து நிற்க வலி சுமந்த எம் மக்கள் நீதி கேட்டு வீதியில் போராடினர்.
மக்களின் போராட்டங்களை மதித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பை சந்தித்து உண்மைகளை அறிந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.





