ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இன்னும் இரு வாரங்களில் நாட்டுக்கு வருகைதரவுள்ள நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்நாட்டில் இயங்கிவரும் 104 சிவில் சமூகப்பிரதிநிதிகளின் கூட்டு, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் கூட்டு, தமிழ் சிவில் சமூக அமையம் மற்றும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஆகிய நான்கு தரப்புக்கள் தனித்தனியாக 4 கடிதங்களை உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்துள்ளன.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட மூன்று தசாப்தகால யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல்கள் தொடர்பில் இன்னமும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் காலநீடிப்பு செய்யப்பட்ட தீர்மானத்தின் ஊடாக நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறுப்புக்கூறல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் எதிர்வரும் 23 – 26 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இவ்விஜயத்தின்போது அவர் நாட்டின் சமகால மனித உரிமைகள் நிலைவரம், கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட தரப்பினரின் நிலைப்பாடுகள் என்பவற்றைக் கண்காணிக்கும் அதேவேளை, அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர், சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சிறுபான்மையின அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இருப்பினும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடருடன் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முடிவுக்குவரவுள்ள நிலையில், அதற்கு முன்பதாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகைதருவது செப்டெம்பரில் அவர் வெளியிடவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையின் காத்திரமான தன்மையை மலினப்படுத்தும் எனும் கரிசனையின் அடிப்படையிலேயே சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும், பாதிக்கப்பட்ட தரப்பினரும் அவரது வருகைக்குஎதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
அதன்படி உள்நாட்டு சிவில் சமூகப்பிரதிநிதிகளால் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் அறிந்த இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், இதுபற்றி சிவில் சமூகப்பிரதிநிதிகள் சிலருடன் கலந்துரையாடியதாகவும், அவர்களது கருத்தைக் கேட்டறிந்ததன் பின்னர் அக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டதன் நியாயத்துவத்தை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் அறியமுடிகின்றது.
இது இவ்வாறிருக்க, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வருகை தொடர்பில் எழுந்திருக்கும் எதிர்ப்புக் குறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்ஞ்சே, உயர்தானிகரின் இலங்கை விஜயமானது எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரில் அவர் வெளியிடவிருக்கும் அறிக்கையை எவ்விதத்திலும் மலினப்படுத்தாது எனவும், உயர்ஸ்தானிகர் அலுவலகம் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கரிசனைகளுக்கு விரோதமாக செயற்படாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய பின்னணியில், ஏற்கனவே திட்டமிடப்பட்டதன் பிரகாரம் எதிர்வரும் 23 ஆம் திகதி உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வருகைதருவார் என்பதை உறுதிப்படுத்தி ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இன்னமும் அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பிவைக்கப்படவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.