ஒன்றரை இலட்சம் மக்கள் எங்கே?பாராளுமன்ற உறுப்பினர் செ.கேஜந்திரன்

ஒன்றரை இலட்சம் மக்கள் எங்கே?பாராளுமன்ற உறுப்பினர் செ.கேஜந்திரன்

இறுதிக்கட்டப் போரில் ஒரு இலட்சத்து 47 ஆயிரம் தமிழர்கள் இராணுவத்தினரிடம் அகப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றையதினம் வரவு – செலவுத் திட்டத்தின் நிதி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு வினா எழுப்பினார்.

“இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். இந்தத் தினத்தில் பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர், சிறைகளில் வாடும் பிள்ளைகளை நினைத்துக் கதறும் பெற்றோர் என வடக்கு, கிழக்கு எங்கும் அவலக்குரலே கேட்டுக்கொண்டிருக்கின்றது.

இந்த நாளில் வடக்கு, கிழக்கு எங்கும் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடி அலைந்து திரிந்து கொண்டிருக்கும் அந்த மக்களின் போராட்டத்தோடு நாங்கள் கைகோர்க்கும் அதே நேரத்தில் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறைகளிலே அடைத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காகவே காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் இலங்கை அரசால் உருவாக்கப்பட்டது. அந்த அலுவலகத்தின் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏமாற்றப்பட்டு தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர்.

காணாமல்போனவர்கள் இறந்து விட்டார்கள் என்று உறவினர்களை ஒப்புக்கொள்ள வைத்து அவர்களுக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கும் முயற்சிதான் நடைபெறுகின்றது.

வடக்கு, கிழக்கில் முழுமையான இனவாதக் கோணத்திலேயே நிதி அமைச்சின் திட்டங்கள் அமைந்துள்ளன. தொல்பொருள் திணைக்களம் என்பது உலக நாடுகளிலே கலாசார அமைச்சுக்களின் கீழ் உள்ளன.

ஆனால், இலங்கையில் அது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கோடிக் கணக்கான நிதியை நிதி அமைச்சு மூலம் ஒதுக்கிக் கொடுத்து, தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தை சிங்கள மயமாக்குகின்ற, பௌத்த மயமாக்குகின்ற செயற்பாடுகள் தான் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

பகிர்ந்துகொள்ள