ஒஸ்லோ :
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக, ஈரான் இன்று சனிக்கிழமை, 20.06.2026 அன்று அறிவித்துள்ளது.
போர் நிறுத்த மற்றும் சமாதான ஒப்பந்தத்தில் ஒத்துக்கொள்ளப்பட்டிருந்தமைக்கு முரணாக, தெற்கு லெபனானில் இஸ்ரேல் புதிதாக வலிந்து தாக்குதல்களை நடத்தியிருப்பதன் மூலம், ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியதாகக் கூறி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவது “முதல் கட்ட நடவடிக்கை” மட்டுமே என்றும், தாக்குதல்கள் தொடர்ந்தால் மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஈரான் மேலும் எச்சரித்துள்ளது.
தெற்கு லெபனானின் Nabatieh பகுதியில் இஸ்ரேல் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த, நோர்வேயின் கப்பல் போக்குவரத்து ஒன்றியத்தின் இயக்குனரான “Knut Arild Hareide”, தற்போது பாரசீக வளைகுடாவில் சுமார் 20 நோர்வே கப்பல்கள் சிக்கியுள்ளதாகவும். நிலைமை கணிக்க முடியாததாக இருப்பதால், கப்பல்களை வெளியேற்றுவதற்கான வாய்ப்புகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
” நோர்வீஜிய ஆய்வாளரான, “Thina Margrethe Saltvedt”, தெரிவித்தபோது, ஹோர்முஸ் நீரிணையை மூடுவது ஈரானின் எதிர்பார்க்கப்பட்ட நடவடிக்கை எனக் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஈரான் பிரதிநிதிகள் சுவிஸ் செல்ல உள்ளதாக அறிவித்துள்ள நிலையிலும், மேலும், அமெரிக்க துணைத் தலைவர் “JD Vance” விரைவில் சுவிஸில் ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், ஈரானும், அமெரிக்காவும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறுகின்ற விதத்தில் இஸ்ரேல் இத்தாக்குதல்களை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டால், சர்வதேச எண்ணெய் விலைகள் உயர்வு, கப்பல் போக்குவரத்து பாதிப்பு மற்றும் உலக பொருளாதாரத்தில் புதிய அலைச்சல்கள் ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
20.06.2026






