ஒரு கோடியே15 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த சந்தேகநபர்கள் கைது!

You are currently viewing ஒரு கோடியே15 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த சந்தேகநபர்கள்  கைது!

யாழ். வல்வெட்டித்துறை, கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றொருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் சந்தேகநபரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 27 ஆம் திகதி பகல் வேளையில் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் வீட்டின் புகைக்கூட்டை உடைத்து உள்ளிறங்கிய இருவரும் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணையை துரிதப்படுத்தி கண்காணிப்பு கமராக்களை ஆராய்ந்ததில் மேற்படி சந்தேகநபர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர்.

கெருடாவிலைச் சேர்ந்த 16 வயது சிறுவன், 19 வயது இளைஞன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவர் வல்லைச் சந்தியிலும், மற்றொருவர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் மேற்படி சந்தேநபர்கள் வீட்டினுள் இறங்கிப் பணத்தைப் பார்த்துவிட்டு அதில் அதிக பணம் இருப்பதை நெடுங்கேணியில் உள்ளவரிடம் காணொளி அழைப்பு மூலம் தெரிவித்துள்ளனர். அவர் முழுப்பணத்தையும் எடுத்து வரும்படி கூறியுள்ளார்.

அவர்கள் அந்தப் பணத்தை நெடுங்கேணிக்கு எடுத்துச் சென்று அங்கு காணியொன்றில் புதைத்து வைத்துவிட்டு இருவரும் யாழ்ப்பாணம் வந்தபோதே சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.

அதனையடுத்து பொலிஸார் நெடுங்கேணியைச் சேர்ந்த நபரை கைது செய்யச் சென்றபோது அவர் தலைமறைவாகியுள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்கமைய சந்தேகநபர்களிடமிருந்து 74 இலட்சம் ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சந்தேகநபர்களைத் தடுப்புக்காவலில் வைத்து விசாரரணை செய்ய வல்வெட்டித்துறை சிறீலங்கா காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply