ஒரு விடுதலை இயக்கத்தை அழிப்பதற்கு பெரும்படைகள் தேவையில்லை!!

You are currently viewing ஒரு விடுதலை இயக்கத்தை அழிப்பதற்கு பெரும்படைகள் தேவையில்லை!!

தமிழீழம்-சிறிலங்கா,தகவல் புலனாய்வுப் போர் சோவியத் ஒன்றியத்தின் “ஒப்பரேசன் டிரஸ்ட்” முதல் தகவல் போரின் இன்றைய புதிய காலம் வரை

ஒரு விடுதலை இயக்கத்தை அழிப்பதற்கு பெரும்படைகள் தேவையில்லை. சில நேரங்களில் ஒரு தகவல் போதும். சில நேரங்களில் ஒரு போலி அறிக்கை போதும். சில நேரங்களில் ஒரு இனத்தின் நம்பிக்கையை உடைப்பதே முழு இராணுவ நடவடிக்கையை விடப் பெரிய வெற்றியாக மாறிவிடும்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவில் நடைபெற்ற ஒரு புலனாய்வு நடவடிக்கை இன்றும் உலகின் பல புலனாய்வுப் பயிற்சிக் கல்லூரிகளில் கற்பிக்கப்படுகிறது. அதன் பெயர் “ஒப்பரேசன் டிரஸ்ட்”.
அந்த நடவடிக்கையின் நோக்கம் எதிரிகளை கைது செய்வது மட்டுமல்ல. அவர்களுடைய மனதில் நம்பிக்கையை உருவாக்கி, பின்னர் அந்த நம்பிக்கையையே ஆயுதமாக மாற்றுவதே அதன் மையக் கருத்தாக இருந்தது. சோவியத்
புரட்சிக்குப் பின்னர் சோவியத் ஆட்சியை எதிர்த்து வெளிநாடுகளில் இயங்கிய பல அரசியல் மற்றும் இரகசிய புலனாய்வு வலையமைப்புகள் ரஷ்யாவுக்குள் இன்னும் வலுவான எதிர்ப்பு அமைப்புகள் இருப்பதாக நம்பின. தகவலை உறுதிப்படுத்திய சோவியத் புலனாய்வுக்கட்டமைப்பான KGB, உண்மையில் தாங்களே ஒரு போலி எதிர்ப்பு வலையமைப்பை உருவாக்கியதாக வரலாற்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
ஒரு இயக்கத்தை சிதைத்தழிக்க விரும்பினால், அதன் தலைமைத்துவத்தை நேரடியாகத் தாக்க வேண்டிய அவசியமில்லை. அதன் உறுப்பினர்கள், போராளிகள் ஒருவரை ஒருவர் சந்தேகிக்கத் தொடங்கினால் போதும். இயக்கம் மெல்லச் சிதையும்,இதுதான் அந்த நடவடிக்கையின் பின்னணியில் இருந்த உளவியல் புலனாய்வுக் கோட்பாடு.
இன்று நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் உலக அரசியல் முற்றிலும் மாறிவிட்டதாக நாம் கருதினாலும், தகவல் போரின் அடிப்படைக் கோட்பாடுகள் இன்னும் மாறவில்லை. மாறியது கருவிகள், உபகரணங்கள் மட்டுமே.
ஒருகாலத்தில் இரகசிய புலனாய்வு முகவர்கள் பயன்படுத்தப்பட்ட இடத்தில் இன்று சமூக ஊடகக் கணக்குகள், வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கையெழுத்துக் கடிதங்கள் பயன்படுத்தப்பட்ட இடத்தில் இன்று குறியாக்கப்பட்ட தகவல் தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இலக்கு மாறவில்லை — தகவலைக் கட்டுப்படுத்துவது, நம்பிக்கையை உருவாக்குவது, பின்னர் அதையே பயன்படுத்துவது.
இருபத்தோராம் நூற்றாண்டில் தகவல் போர் (Information Warfare), உளவியல் போர் (Psychological Operations), செல்வாக்கு மிக்க நடவடிக்கைகள் (Influence Operations) ஆகியவை உலக அரசியலின் முக்கிய காட்சி மாற்ற ஆயுதங்களாக மாறியுள்ளன.
2016 அமெரிக்கத் தேர்தல் முதல் கிழக்கு ஐரோப்பிய மோதல்கள் வரை, மத்திய கிழக்கின் அரசியல் குழப்பங்கள் முதல் ஆசியாவின் தேசிய இன அரசியல் வரை, தகவல் போரின் தாக்கம் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கின்றன.
இந்தச் சூழலில் புலம்பெயர் தேசிய இன மக்கள் தனித்துவமான இடத்தைப் பெறுகின்றனர்.
ஒரு நாட்டின் எல்லைகளுக்கு வெளியே வாழ்ந்தாலும், தமது போராட்ட வரலாற்றையும், விடுதலைக்கோட்பாட்டையும், தேசிய அடையாளத்தையும் பாதுகாக்கும் சமூகங்கள் உலகின் பல பகுதிகளில் உள்ளன. அத்தகைய சமூகங்கள் அரசியல் செல்வாக்கு செலுத்தக்கூடிய வலுவான சக்தியாக மாறும்போது, பல தரப்பினரின் கவனத்தையும் ஈர்க்கின்றன.
வரலாற்று அனுபவங்கள் ஒரு முக்கியமான உண்மையைச் சுட்டிக்காட்டுகின்றன.
ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தை, அதன் வீச்சை நேரடியாகத் தடுக்க முடியாதபோது, அதன் உள்ளே குழப்பத்தை உருவாக்குவது பலரும் பயன்படுத்தும் உத்தியாக மாறுகிறது.
அமைப்புகளுக்குள் பிரிவினைகள் தோற்றுவிக்கப்படுகின்றன.
இயங்குநிலை குறித்துச் சந்தேகங்கள் பரப்பப்படுகின்றன.
சமூக ஊடகங்களில் அடையாளம் தெரியாத கணக்குகள் திடீரெனத் தோன்றுகின்றன.
போலி ஆவணங்கள் பகிரப்படுகின்றன.
உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் “இரகசிய தகவல்” என்ற பெயரில் பரப்பப்படுகின்றன.
இதன் விளைவாக உண்மையான பிரச்சினைகள், விடயங்கள் பின்னணிக்குத் தள்ளப்படுகின்றன. முழு விவாதமும் சந்தேகங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளைச் சுற்றியே சுழலத் தொடங்குகிறது.
இதுவே நவீன தகவல் போரின் மிகப் பெரிய வெற்றி.
எதிரி வென்றதால் அல்ல.
நாம் ஒருவரை ஒருவர் நம்பாமல் போனதால்.
வரலாற்றை ஆராயும் பல ஆய்வாளர்கள் கூறும் கருத்து ஒன்றுதான்: எந்த இயக்கமும் வெளிப்புறத் தாக்குதலால் மட்டும் தோற்பதில்லை. உள்ளக நம்பிக்கையின்மை உருவான பின்னரே அதன் வீழ்ச்சி வேகமடைந்தது.
இந்தப் பின்னணியில் உலகம் முழுவதும் உள்ள அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் புதிய அணுகுமுறைகளைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன.
தகவல் உறுதிப்படுத்தல்,
ஆவணப்படுத்தப்பட்ட, நிதானமான முடிவுகள்.
பொறுப்புக்கூறல். உறுதியான துணிவு
இவை அனைத்தும் வெறும் நிர்வாகக் கோட்பாடுகள் அல்ல; தகவல் போருக்கு எதிரான பாதுகாப்பு அமைப்புகளாகவே இன்று பார்க்கப்படுகின்றன.
உலக அரசியல் வரலாறு மீண்டும் மீண்டும் ஒரே பாடத்தையே கற்பிக்கிறது.
துப்பாக்கிகள் அமைதியாகலாம்.
படைகள் கலைந்து போகலாம்.
ஆட்சிகள் மாறலாம்.
ஆனால் தகவலின் மீதான போராட்டம் முடிவடைவதில்லை.
அது வடிவம் மாறுகிறது.
அது புதிய முகங்களைப் பெறுகிறது.
அது புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.
ஆனால் அதன் அடிப்படை நோக்கம் மாறுவதில்லை — மனிதர்களின் சிந்தனையைப் பாதிப்பது.
அதனால் தான் எந்த சமூகத்திற்கும் மிகப் பெரிய பாதுகாப்பு அரண் ஆயுதங்கள் மட்டும் அல்ல; விழிப்புணர்வுதான்.
வரலாற்றைத் தெளிவாக அறிந்த மக்களை ஏமாற்றுவது கடினம்.
இயக்கக் கட்டமைப்பின் தலைமைத்துவக் கோட்டுருவாக்கத்தை புரிந்துகொண்ட தேசிய செயற்பாட்டாளர்களை, வழிதவறச் செய்வது இன்னும் கடினம்.
உண்மையைத் தேடும் மக்களை உடைப்பது மிகவும் கடினம்.
நிழல்களில் நடைபெறும் யுத்தங்கள் தொடரலாம்.
ஆனால் வரலாற்றின் அனுபவங்களும், புலனாய்வுப் பார்வையும், விழிப்புணர்வும் இருக்கும் வரை, அந்த நிழல்களை அடையாளம் காணும் திறனும் மக்களிடம் இருக்கும். அவர்களை யாராலும் எந்தப் புலனாய்வுக்கட்டமைப்பாலும் வெல்லவே முடியாது. அதையும் தாண்டி இந்த மக்கள் விதைத்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் விதையாகி, முளையாகி,மரமாகி, விருட்சமாகி அவர்களைக் காத்து நின்று வழிகாட்டி முன்னே செல்வார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து இந்த மக்கள் இலக்கை அடையும்வரை போராடுவார்கள். அனைத்துலகச் சிந்தனைப்பள்ளி

பகிர்ந்துகொள்ள

Leave a Reply