கொழும்பின் புறநகர் பகுதியான மஹரகமவில் இரண்டு மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த வீட்டின் மேல் மாடிக்கு, வீட்டின் உரிமையாளர் கடந்த 18ஆம் திகதி இரவு தீ வைத்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும், தீ வைத்த வீட்டின் உரிமையாளரும் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த 55 வயதான ரத்னகாந்தி விக்ரமாராச்சி மற்றும் அவரது 16 வயது மகள் தஸரணி ரத்நாயக்க ஆகியோரும், வீட்டின் உரிமையாளரான 76 வயதான ஒலிவர் பற்றிக் விஜேசிங்க என்பவருமே உயிரிழந்துள்ளனர்.
குறித்த வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு வசித்து வந்தவர்களுக்கும், வீட்டின் உரிமையாளருக்கும் இடையில் அடிக்கடி தகராறுகள் இடம்பெற்று வந்துள்ளன.
வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு வசித்து வந்தவர்கள் ஒரு குடும்பத்தினர் என்றும், கீழ் மாடியில் மற்றுமொரு குடும்பத்தினர் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேல் மாடியின் வாடகையை வீட்டின் உரிமையாளரின் மகன் பெற்று வந்ததாகவும், கீழ் மாடியின் வாடகையை உரிமையாளர் பெற்று வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை நுகேகொட நீதவான்மேற்கொண்டார். மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






