ஒற்றைத்தீபம் எரிகிறது!

ஒற்றைத்தீபம் எரிகிறது!

அனைத்துலக குற்றவியல்
நீதிமன்றில்
எமை அழித்தவனை நிறுத்தவென
அன்னை ஒருத்தி
தன்னை உருக்கிக்கொண்டிருக்கிறாள்!

ஒற்றையாட்சியுக்குள்
ஒடுங்கி வாழுங்களென
ஒற்றரிடம் உரிமையை
தாரைவார்த்துவிட்டு
இற்றைவரை சுய அரசியலுக்காய்
தமிழரை வைத்து
விற்றுப்பிழைக்கும்
இங்கிலாந்திடம்
நான்கம்சக்கோரிக்கைகளை
முன்நிறுத்தி
அம்பிகைத்தாய்
அன்னம் தவிர்த்து துடித்துக்கொண்டிருக்கிறாள்!


அண்ணன் திலீபன் வழியில்
அன்னை பூபதி மொழியில்
மண்ணின் விடிவிற்காய்
ஒற்றை விளக்காய்
எரிந்துகொண்டிருக்கின்றாள்!
கண்களை மூடிக்கொண்டிருக்கும்
சிறீலங்காவின் பாதம் தடவும்
பிருத்தானியாவின்
பிடரியைப் பிடித்துலுப்ப
நாங்கள் என்ன செய்யப்போகின்றோம்!

தூரநின்று
பார்வையாளராய்
இருக்கப்போகின்றோமா!
அல்லது
ஊண் ஒறுத்து
ஒற்றையாய் போராடும்
அறத்தாயின் கோரிக்கை
நிறைவேற
மறத்தமிழராய்
போராட்டத்திலே
ஏறப்போகின்றோமா!

வா தமிழா
உன் ஒற்றை விரல் போதும்
இணைப்பிலே அழுத்தி
கணக்கிலே சேர்!

ஒவ்வொரு கையெழுத்தும்
அன்னையின்
தலையெழுத்தை
மாற்றும்!

✍தூயவன்

பகிர்ந்துகொள்ள