ஒலிம்பிக் போட்டிகளுக்கு மத்தியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று நோயால் திணறும் ஜப்பான்!

You are currently viewing ஒலிம்பிக் போட்டிகளுக்கு மத்தியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று நோயால் திணறும் ஜப்பான்!

கொவிட் 19 தொற்று நோய் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாதவாறு தொற்று நோயின் மோசமான கட்டத்தை ஜப்பான் தற்போது எதிர்கொண்டு வருவதாக அந்நாட்டின் சிரேஷ்ட மருத்துவ ஆலோசகர் எச்சரித்துள்ளார்.

அதிகரித்துவரும் தொற்று நோயின் தீவிரத்தைத் தணிக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் ஜப்பானிய அரசை வலியுறுத்தியுள்ளார்.

தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவரும் டோக்கியோ நகரத்தில் மட்டும் நேற்று புதிதாக 3,177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாடு முழுவதும் நேற்று இதுவரை இல்லாதவாறு மிக அதிகளவாக 9,500 தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஜப்பானில் மிகப் பெரிய தொற்று நோய் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. டோக்கியோ சிவப்பு எச்சரிக்கை மட்டத்தில் உள்ளது என சிரேஷ்ட மருத்துவ ஆலோசகர் ஷிகெரு ஓமி பாராளுமன்ற குழுவிடம் சுட்டிக்காட்டி எச்சரித்தார்.

ஜப்பானில் தொற்று நோய் தீவிரமாகி வருவதால் டோக்கியோவில் இடம்பெற்றுவரும் ஒலிம்பிக் போட்கள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. அங்கு பார்வையாளர்கள் இன்றியே பெரும்பாலும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதேவேளை, இந்த ஆண்டு பொதுத் தோ்தலை ஜப்பான் எதிர்கொள்ளவுள்ள நிலையில் தொற்று நோய் தீவிரமடைந்து வருவதால் அந்நாட்டுப் பிரதமர் யோஷிஹைட் சுகா சிக்கல்களை எதிர்கொள்ளக் கூடும் எனவும் கருதப்படுகிறது. கடந்த செப்டம்பரில் அவர் பதவியேற்றதில் இருந்து குறைந்தளவான மக்கள் ஆதரவையே கொண்டிருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

தடுப்பூசிகள் மூலம் தொற்று நோயைக் கட்டுப்பாட்டக்குள் கொண்டு வர முடியும் என பிரதமர் யோஷிஹைட் சுகா நம்பிக்கை வெளியிட்டார். தடுப்பூசிப் பணிகள் இடம்பெற்று வருகின்றபோதும் தொற்று நோய் அங்கு வேகமாக அதிகரித்து வருகிறது. டெல்டா திரிவு பரவல் மற்றும் ஒலிப்பிக் போட்டிகள் இதற்குப் பிரதான காரணிகளாகக் கருதப்படுகின்றன. ஜப்பானியர்களில் 26.5% பேருக்கு மட்டுமே இதுவரை இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி விநியோகத்தில் அண்மையில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக தடுப்பூசிப் பணிகளும் திட்டமிடடவாறு வேகமாக இடம்பெறவில்லை.

இவ்வாறான நிலையில் ஒலிம்பிக் போட்டி மற்றும் அதற்காக உலகெங்கும் இருந்து வரும் விளையாட்டு வீரர்களால் தொற்று நோய் மேலும் அதிகரிக்கலாம் என பெரும்பாலான ஜப்பானியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகளுடன் தொடர்புடைய 3 வீரர்கள் உட்பட 24 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஜூலை 1 முதல் ஒலிம்பிக் போட்டிகளுடன் தொடர்புடைய வீரர்கள் மற்றும் பணியாளர்கள் 193 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments