ஒஸ்திரியா தலைநகர் “வியன்னா” வில் பயங்கரவாத தாக்குதல்! இராணுவம் களத்தில்!!

You are currently viewing ஒஸ்திரியா தலைநகர் “வியன்னா” வில் பயங்கரவாத தாக்குதல்! இராணுவம் களத்தில்!!

ஒஸ்திரியா தலைநகர் “வியன்னா” வில் பயங்கரவாதியென அடையாளம் காணப்பட்டவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்களில் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் வியன்னாவின் 6 வேறுவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கும் அந்நாட்டு காவல்துறை, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாமென அறிவுறுத்தியுள்ளது. அதேவேளை, பாதுகாப்பு நிலைமைகளை இறுக்கமாக்கும் பொருட்டு, இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்களில் காயமடைந்த 15 பேர் வைத்தியசாலைகளுக்கு எடுத்து செல்லப்பட்டிருப்பதாகவும், இவர்களில் 7 பேர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் முதற்கட்ட செய்திகள் வெளிவந்துள்ளன.

வியன்னாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களை நோர்வே பிரதமர் “Erna Solberg” அம்மையார் கண்டித்திருப்பதோடு, வன்முறைக்கெதிராக அனைவரும் ஒன்றுதிரள வேண்டுமென அறைகூவல் விடுத்துள்ளார். இதேவேளை, ஒஸ்திரியாவின் அயல்நாடான செக்கியா தனது எல்லைகளில் காவலை பலப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

செய்தி மேம்பாடு (03.11.2020):

பிந்திக்கிடைத்த செய்திகளின்படி, மேற்படி தாக்குதல்களில் இதுவரை 5 பேர் மரணமானதாகவும், 14 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், நன்கு அறியப்பட்ட இஸ்லாமியவாதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டை நடத்தியவரென்ற சந்தேகத்தில் நேற்றிரவு (02.11.2020) காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர், “IS” பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளித்தாரென சிறையிலடைக்கப்பட்டு, பின் விடுதலை செய்யப்பட்டவரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள