ஒஸ்லோவில் குபென் மேல்நிலைப் பள்ளி அருகே கத்திக்குத்து – சிறுவன் படுகாயம்!

You are currently viewing ஒஸ்லோவில் குபென் மேல்நிலைப் பள்ளி அருகே கத்திக்குத்து – சிறுவன் படுகாயம்!

செவ்வாய்க்கிழமை முற்பகல், ஒஸ்லோவின் Økern பகுதியில் உள்ள Kuben videregående skole அருகே கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பல நோர்வே காவல்த்துறை பிரிவுகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. சிறிது நேரத்திலேயே ஒரு சிறுவன் மிகவும் ஆபத்தான நிலையில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.

தற்போது, ஒரு சிறுவர் கொலை முயற்சி செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை நோர்வே காவல்த்துறை வழக்கறிஞர் Anders Mørland  தெரிவித்துள்ளார்.

“கைது செய்யப்பட்ட சிறுவரிடம் இதுவரை  விசாரணை நடத்தப்படவில்லை. ஆனால் இன்று பின்னர் விசாரணை நடைபெற வாய்ப்புள்ளது” என Mørland தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருவதாக நோர்வே காவல்த்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவற்றை பகிர்வோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என Mørland எச்சரித்துள்ளார்.

“இந்த சம்பவத்தை பலர் நேரில் பார்த்திருக்கலாம் என எங்களுக்குத் தெரிகிறது. பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதாகவும் அறிந்துள்ளோம். பொதுமக்கள் இத்தகைய காணொளிகளை சிந்திக்காமல் பகிர வேண்டாம். அவ்வாறு செய்வது சட்டவிரோதமாக இருக்கலாம். அதற்குப் பதிலாக அந்த காணொளிகளை நோர்வே காவல்த்துறையினரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.”

கைது செய்யப்பட்ட சிறுவனை புதன்கிழமை காவலில் வைக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நோர்வே காவல்த்துறையினர் விரும்புகின்றனர்.

காயமடைந்த சிறுவன் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக நோர்வே காவல்த்துறை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் அதிகரிக்கும் அச்சம்

ஒஸ்லோ கல்வியாளர் சங்கத்தின் (Utdanningsforbundet i Oslo) தலைவரும் ஆசிரியருமான Marianne Lange Krogh, ஒஸ்லோவின் பல மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அதிகரித்து வரும் பாதுகாப்பின்மை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதத்திலும் Kuben மேல்நிலைப் பள்ளியில் ஆயுதம் தொடர்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

“Kuben மட்டுமல்லாமல், ஒஸ்லோவின் பல மேல்நிலைப் பள்ளிகளிலும் பள்ளிகளுக்குள் ஆயுதங்கள் அதிகரித்து வருவது குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். மாணவர்கள், எங்கள் உறுப்பினர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களின் முதன்மையான நோக்கம்” என Krogh கூறியுள்ளார்.

“ஆசிரியர்கள் வேலைக்குச் செல்வது குறித்து அச்சப்படுவதாக உங்களிடம் தெரிவிக்கிறார்களா?” என கேட்கப்பட்டபோது:

“ஆம். சில ஊழியர்கள் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். மாணவர்கள் குறித்து போதுமான தகவல்கள் தங்களிடம் இல்லை என்பதும் அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. ஒஸ்லோவில் தற்போது மிகப்பெரிய மேல்நிலைப் பள்ளிகள் உருவாகியுள்ளன. இதனால் பள்ளி சூழல்கள் மிகவும் சிக்கலானதாகவும் கண்காணிக்க கடினமானதாகவும் மாறியுள்ளன” என அவர் பதிலளித்தார்.

Kuben vgs. ஒஸ்லோவின் மிகப்பெரிய பள்ளியாகும். அங்கு சுமார் 1,800 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

பள்ளியில் உள்ள அனைவரையும் ஆசிரியர்களாலும் மற்ற மாணவர்களாலும் அடையாளம் காண முடியாத நிலை இருப்பதாக Krogh சுட்டிக்காட்டுகிறார். பள்ளியில் இவ்வளவு அதிகமான மாணவர்கள் இருப்பதால், தங்களைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அந்தப் பள்ளியின் மாணவர்களா என்பதை அறிந்து கொள்வது கடினம் என அவர் கூறுகிறார்.

அதே நேரத்தில், கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்பு தொடர்பாக சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக சம்பவங்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளைப் பதிவு செய்யும் அறிக்கை முறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என அவர் கூறுகிறார்.

மேலும், ஒஸ்லோ பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் PLIVO பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பள்ளிகளில் ஆயுத சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இது மட்டும் போதுமானதாக இல்லை என Krogh கருதுகிறார்.

பொலிஸாரிடம் இருந்து, குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பின்னணி கொண்ட இளைஞர்கள் ஒருவர் ஒரு பள்ளியில் மாணவராக சேரவிருப்பது தொடர்பான தகவல்களை பள்ளிகள் தற்போது பெற முடியும் என்பதையும் அவர் வரவேற்றுள்ளார்.

பள்ளிக்கு கூடுதல் வளங்கள் தேவை

Krogh கூறுகையில், ஒரு மாணவர் பள்ளியை மாற்றும்போது, முந்தைய பள்ளியால் அந்த மாணவர் தொடர்பான தகவல்களை புதிய பள்ளிக்கு வழங்க முடியாத நிலை இருப்பதாகக் குறிப்பிட்டார்.

பாதுகாப்பான வகுப்புகளை அமைப்பதற்காக பள்ளிகளுக்கு மாணவர்கள் குறித்து முடிந்தவரை அதிகமான தகவல்கள் தேவை என அவர் தெரிவித்துள்ளார்.

“எங்களைப் பொறுத்தவரை இது பாதுகாப்பு மட்டுமல்ல; பள்ளிகளுக்கு தேவையான வளங்களை வழங்குவது பற்றியதுமாகும். பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பள்ளிகளுக்கு கூடுதல் வளங்கள் மிகவும் அவசியம்” என Marianne Lange Krogh தெரிவித்துள்ளார்.

சவாலான சூழ்நிலை”

Kuben மேல்நிலைப் பள்ளியின் அதிபர் Kjell Ove Hauge, இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில், பல மாணவர்கள் சம்பவத்தை நேரில் பார்த்ததாகவும், அவர்களுக்கு தற்போது தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

“ஒரு மாணவர் தீவிரமாக காயமடைந்துள்ளார். அவர் மருத்துவப் பணியாளர்களால் நன்றாக கவனிக்கப்பட்டு வருகிறார். பல மாணவர்கள் இந்த சம்பவத்தைப் பார்த்துள்ளனர். உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு எங்கள் சுகாதாரக் குழுக்கள் மற்றும் நெருக்கடி மேலாண்மைக் குழுவினரிடமிருந்து ஆதரவு வழங்கப்படுகிறது.”

மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.

“இது எங்கள் பள்ளிக்கு மிகவும் சவாலான சூழ்நிலை. மாணவர்களையும் ஊழியர்களையும் தொடர்ந்து கவனிப்பதிலும், வரும் நாட்களில் அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்” என அதிபர் Kjell Ove Hauge தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply