ஓர் இழப்பின் போது இன்னொரு இழப்பை ஒப்பிட்டு நினைவு கூருவது நியாயமா?

You are currently viewing ஓர் இழப்பின் போது இன்னொரு இழப்பை ஒப்பிட்டு நினைவு கூருவது நியாயமா?
ஓர் இழப்பின் போது இன்னொரு இழப்பை ஒப்பிட்டு நினைவு கூருவது நியாயமற்றதாக மனிதாபிமானம் மிக்க உங்களுக்கு தோன்றலாம்,
தோன்றினாலும் பரவாயில்லை.
சுனாமி வந்த போது தமிழர் பகுதிகளில் பல்லாயிரக் கணக்கில் உயிர்கள் பறி போனது, யாராலும் எண்ணிப் பார்த்திருக்க முடியா அனர்த்தம் அது, ஆயிரக் கணக்கில் எங்கும் பிணக்குவியல்கள், அதிர்ச்சியில் இருந்து எவரும் மீளவில்லை, எப்படி ஆனது, இனி என்ன ஆகும் எதுவும் புரியவில்லை,
வெளிநாடுகளில், தொண்டு நிறுவனங்களில், தனி நபர்களிடம் இருந்து உதவிகள் வருகிறது, ஆனால் அவற்றை எல்லாம் தமிழர்களிடம் கொண்டு போய் சேர்க்கக் கூடாது என்று அத்தனை உதவிகளையும் தடுத்து நிறுத்தியது இதே ஜே.வி.பி தான் இதே அனுர தான்,
அந்த நேரத்தில் நான் சுற்றாடல் வனவளங்கள் அமைச்சில் இருந்தேன், அமைச்சில் இருந்து செய்ய வேண்டிய சாதாரண அடிப்படை உதவிகளைக் கூட தமிழர்களுக்கு கிடைக்கக் கூடாது என இவர்கள் கூட்டத்தில் வந்து கத்திய போது சிங்கள அதிகாரிகள் கூட திகைத்துப் போனார்கள். அந்தளவு கோரவெறியை பல நாட்கள் பசி கிடந்த இரை கிடைத்த ஓநாயிடம் கூடப் பார்க்க முடியாது.
தமிழ் பேசும் இடதுசாரிகள் உண்மையில் அப்பாவிகளா என்று கூட நினைப்பதுண்டு.
* எமது கடின உழைப்பில் வாங்கிய காணிகளை, வீடுகளை ஆயுத முனையில் வன்கவர்ந்து நாற்பது ஆண்டுகள் வைத்திருந்த சிங்களம் நீண்ட இழுபறிகளுக்கு பிறகு அதற்கு உரியவர் வயோதிபம் அடைந்து அல்லது இறந்து அடுத்த சந்ததி வந்தபோது திருப்பி தந்தால் உடனே சிங்களவன் நல்லவன் ஏன் நீங்கள் இனவாதம் கதைக்கிறியள் என்று சொல்லும் போது – டேய் முட்டாளே அது என் நிலமடா , நாற்பது வருடம் அவன் என் நிலத்தை வைத்திருந்ததே முதலில் தவறு என சொல்ல அவர்களுக்கு தோன்றுவதில்லை,
* இத்தனை வருடமாக இத்தனை இலெட்சம் மக்களைக் கொல்வதற்கும் தமிழர்களின் பூர்வீக நிலப்பகுதியை துண்டாடியதற்கும் இன்றுவரை காரணமான இந்த ஜே.வி.பி நக்கத் தரும் சிறு ஊறுகாய் உங்கள் மனதை திருப்பி அடைய வைக்கிறதா?
அறிவாளிகளே ! உலகில் எங்கணுமே யுத்தம் இல்லாத போதில் மக்களுக்கு இன்னல் ஏற்பட்டால் அதனை எதிர் கொள்ளவும் தான் முப்படைகளும் இருக்கின்றன, அவர்கள் எங்கள் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கப்படும் சம்பளத்திற்கான தொழிலைச் செய்கிறார்கள், இதில் என்ன பெரிய தியாகம் இருக்கிறது? வாங்கும் சம்பளத்திற்கு அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வேலையைச் செய்கிறார்கள், இதனையும் இனப்பிரச்சனையும் எந்தப் பக்க மூளையையும் வைத்து உங்களால் சிந்திக்க முடிகிறது?
தவிரவும் எமக்கு வாய்த்த அரசியல்வாதிகள் மீதுள்ள செயற் திறனற்ற தன்மை ஆளாளுக்குள் அடிபாடு என்பவற்றால் நொந்து போய்த்தான் மக்கள் சிங்கள இனவாதக் கட்சிக்கு வாக்களித்தார்களே தவிர அவர்கள் மீதுள்ள விருப்பத்தால் அல்ல, ஆனால் ஜே.வி.பி ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் தமிழ் அரசியல்வாதிகள் தகுதி அற்றவர்கள், தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் போலிகள் என்ற கதையை திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள், அதற்கு எங்கள் கிறுக்குகளும் பலியாகிறார்கள்,
ஒரு இயற்கை அனர்த்தம் வந்து பேரழிவு நிகழ்ந்தால் அரசியற் பலமும் உடற்பலமும் அற்ற உடல் நலிந்த அரசியல்வாதிகளால் அதற்கு என்ன செய்ய முடியும்? முப்படைகளை உத்தரவிட அவர்களிடம் அதிகாரம் இருக்கிறதா? அல்லது அவர்களே வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வெள்ளத்துள் பாய்ந்து நீச்சலடித்து மக்களைக் காப்பாற்றத்தான் முடியுமா?
சிங்கள முப்படைகள் மக்களுக்கு உதவுகிறார்கள், தமிழ் அரசியல்வாதிகள் எங்கே போனீர்கள் என்று கேட்பதைப் போல அபத்தம் வேறென்ன இருக்க முடியும்?
பலமற்ற, இன்றுவரை பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற சிறுபான்மை இனத்தைச் சார்ந்த அரசியல்வாதிகளை ஆமிக்காரனே நிக்கிறான் நீங்கள் எங்கடா போனீர்கள் என ஜே.வி.பி உங்களை வைத்து கேட்க வைக்கிறது.
தமிழ் அரசியல்வாதிகள் எல்லோரையுமே போலிகள் ஆக்கி ஒட்டுமொத்த இலங்கையையும் சிங்கள மயப்படுத்தப் பார்க்கிறார்கள் என்பது கூடவா உங்களுக்கு புரியவில்லை.
இதனை விட பன்மடங்கு உக்கிரமான ஒரு பேரிடர் சுனாமி நேரம் வந்த போது இருந்த மிகக் குறைந்த வளங்களை வைத்து புலிகள் அத்தனை எதிர்ப்புகளையும் மீறி மிக விரைவிலேயே எம்மை அதிலிருந்து மீட்டெடுக்கவில்லையா? தமிழ் மக்கள் பசியாலும் நோயாலும், துடித்து இறந்தாலும் பருவாயில்லை, புலிகள் அவர்களைக் காப்பாற்றுவதை அனுமதிக்கக் கூடாது என அந்தப் பிணக்குவியலுக்கு மேல் நின்று இனவாத ஊழையிட்ட கட்சி தான் இந்த ஜே.வி.பி என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள், ஆதலால் வார்த்தைகளில் தேன் கலந்த விடத்தை நாமறியாமல் எம்முள் ஏற்ற நன்கு பயிற்றப்பட்ட ஜே.வி.பின் வார்த்தைகளை ஒரு போதும் நம்பாதீர்கள்.
இனப்படுகொலை செய்தவன் – இனப்படுகொலை செய்யப்பட்டவனை நோக்கி இனவாதி என்று சொல்வதை விட குரூரமான கோர நகைச்சுவை வேறென்ன இருக்க முடியும்.. ?
– திரு
பகிர்ந்துகொள்ள

Leave a Reply