கடனை வாங்கி போரை முன்னெடுத்து இன்று கடன் பொறிக்குள் சிக்கியுள்ள சிறிலங்கா!

You are currently viewing கடனை வாங்கி போரை முன்னெடுத்து இன்று கடன் பொறிக்குள் சிக்கியுள்ள சிறிலங்கா!

தமிழ் மக்களின் ஆணையைப்பெற்று இன்று பொய்யான வேடதாரிகளாக செயற்பட்டு வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விரைவில் வடகிழக்கிலிருந்து அடித்து துரத்தப்படுவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண இணைப்பாளருமான தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த நாட்டில் காலம் காலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளே இன்று தெற்கில் ஆட்சியாளர்கள் விரட்டியடிக்கும் நிலையினை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை இதுவரை காலமும் சிங்கள மக்களுக்கு தெரியப்படுத்தாது அவர்களுக்கு பொய்களை கூறி இதுவரை காலமும் அந்த மக்களை ஏமாற்றி இந்த நாட்டின் தமிழ் மக்களை அழிப்பதற்காக இனப்படுகொலைகளை செய்வதற்காக அந்நிய நாடுகளிடம் கடனை வாங்கி போரை முன்னெடுத்து இன்று கடன்பொறிக்குள் இலங்கை சிக்கியுள்ளது.

இன்று சிங்கள மக்கள் உண்மையினை அறிந்திருக்கின்றார்கள்.இந்த நாட்டில் தமிழ் மக்கள் தங்களது இருப்புக்காகவும்,சுயநிர்ணயத்திற்காகவும் தங்களது உரிமைக்காகவும் தான் போராடினார்கள் என்ற உண்மை சிங்கள மக்களினால் உணரப்பட்டு இன்று ஆட்சியாளர்கள் துரத்தியடிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.

இதேபோன்று தான் தமிழ் மக்களின் விவகாரத்தில் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையினையும் கட்டமைப்புசார் அழிப்பினையும் 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் மூடிமறைத்து தங்களது எஜமானர்களின் நலன்களை பேணுவதற்காகவும், தங்களது பதவிகளை தக்கவைத்துக்கொள்வதற்காகவும் தமிழ் மக்களின் ஆணையைப்பெற்று அதற்கு நேர் எதிர்மாறாக செயற்பட்டு தமிழ் மக்கள் மத்தியில் இரட்டைவேடம் பூண்டு வேடதாரிகளாக செயற்பட்டு வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் மிக விரைவில் வடகிழக்கு தமிழ் மக்களினால் அடித்துவிரப்பட்டப்படும் நிலையேற்படும்.

தமிழ் மக்களுக்கு நடந்தது இன அழிப்பு,இந்த இன அழிப்புக்கான சர்வதேச விசாரணைக்கான சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதேல்லாம் அதனை கோராமல் தங்களது பதவிகளுக்காக தங்களது பைகளை நிரப்புவதற்காக அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை முன்கொண்டு சென்று இன அழிப்பு விவகாரத்தினை சர்வதேச சமூகத்திற்கு கொண்டுசெல்லாமல் கோட்டாபய அரசாங்கத்தினை பாதுகாத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் மிக வேகமாக இந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்படுவார்கள்.

தமிழ் தேசிய உணர்வுடன் உள்ள தமிழ் தேசியவாதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேற வேண்டும்.தொடர்ந்து அங்கு இருப்பீர்களானால் இன்று அரசாங்கம் துரத்தியடிக்கப்படுவது போன்று உண்மையறிந்து தமிழ் மக்களினால் ஒரு நாள் துரத்தியடிக்கப்படுவீர்கள் என்பதை எச்சரிக்கையாக விடுக்கின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை இதுவரை காலமும் பொய்யைத்தான் தமிழ் மக்களுக்கு சொல்லிவந்துள்ளது.இங்கு சந்திக்கும் வெளிநாட்டு தூதுவர்களிடம் இங்கு இனப்படுகொலை நடைபெறவில்லை,தமிழ் மக்களுக்கு அநீதி நடைபெறவில்லையென்று இங்கு தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை மூடிமறைத்து வந்துள்ளார்கள்.

இதுவரை காலமும் பொய்களையே கூறிவந்துள்ளனர்.இதனை தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். சிங்கள மக்களினால் கொண்டுவரப்பட்ட அரசாங்கத்திலேயே அந்த மக்கள் அடித்து துரத்தும் நிலையில் இவர்களை பாதுகாத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான பேரம் பேசலை செய்யவேண்டும்.

தமிழர்கள் சுயநிர்ணயத்துடன் வாழும் சூழ்நிலையினை இந்த நாட்டில் ஏற்படுத்தும் போது தான் இந்த நாட்டில் சிங்கள மக்களும் நிம்மதியாக வாழ முடியும் என்பதை கூறவேண்டும்.

இந்த நாட்டில் தமிழ் மக்கள் தீர்வொன்றினைப்பெற்று சுதந்திரமாக வாழ வேண்டுமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அடித்துகலைக்கப்பட்டு,தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னெடுத்து செல்கின்ற அரசியல் தலைமைத்துவத்தினை கட்டியெழுப்ப வேண்டும்.

இந்த நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிலையினை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமானால் 10 வருடங்களுக்கு மேல் செல்லும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இலங்கையினை கட்டியெழுப்ப வேண்டுமானால் இலங்கை அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த மாற்றத்தினை செய்யாமல் இந்த நாட்டை யார் ஆட்சி செய்தாலும் கட்டியெழுப்ப முடியாது.

இந்த மாற்றமானது தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சமவுரிமையினைக்கொண்டு வாழும் நிலையினை அந்த மாற்றம் கொண்டிருக்க வேண்டும்.அந்த மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு சர்வதேசம் தலையிடவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments