கட்சிகள் பிணக்குறும் இன அழிப்புக்கான விசாரணைக் கோரிக்கைகள் இரண்டும் முரண்பாடானவையா ஒத்திசைவானவையா?

கட்சிகள் பிணக்குறும் இன அழிப்புக்கான விசாரணைக் கோரிக்கைகள் இரண்டும் முரண்பாடானவையா ஒத்திசைவானவையா?

-தமிழ்நெற் நிறுவக ஆசிரியர் ஜெயா

எதிர்வரும் மனித உரிமைச் சபையின் அமர்வை நோக்கித் தமிழ்த் தரப்பின் கோரிக்கைகள் எவ்வாறு முன்வைக்கப்படவேண்டும் என்ற விடயம் குறித்துத் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களின் உந்துதலில் தேர்தல் அரசியலில் தமிழ்த்தேசிய நிலைப்பாடு கொண்டவையாகத் தம்மை வெளிப்படுத்தும் மூன்று அணிகளும் அவற்றில் பங்குபெறும் கட்சிகளும் ஒன்றிணைந்து கோரிக்கைகளைத் தயாரிப்பதற்கான பேச்சுக்களில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன.

முதலாவதாக, இன அழிப்புக்கான விசாரணை என்பது தமிழர் தரப்பால் கோரப்படவேண்டும் அல்லது அதுவே அனைத்துக்குற்றங்களுக்குள்ளும் முக்கியத்துவப்படுத்தப்படவேண்டும் என்பதில் குறித்த மூன்று அணிகளும் கொள்கையளவில் உடன்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இது நல்ல செய்தி.

இரண்டாவது கோரிக்கையாக விவாதிக்கப்படுவது இன அழிப்புக்கான சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறை (International, Impartial and Independent Mechaninsm, IIIM) என்பதாகும். இது தொடர்பாக முரண்பாடுகள் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளன. இது கவலைக்குரியது.

இவை இரண்டுக்கும் அடுத்த படிநிலையில் வேறு கோரிக்கைகள் பலவும் முன்வைக்கப்படலாம். எனினும் அவை குறித்து விபரிப்பது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. அதே போல ஐ.நா.வுக்கு வெளியிலும் இன அழிப்புத் தொடர்பான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படலாம், அவ்வழிகளைப் பற்றியும் இங்கு விபரிக்கவில்லை. இரண்டாது கோரிக்கை தொடர்பான விரைவான தெளிவுபடுத்தல் தமிழ் மொழியில் தேவைப்படுவதாலேயே இக்கட்டுரை எழுதப்படுகிறது.

முதலாவது கோரிக்கையை எடுத்துக்கொண்டால், அது கூடத் தவறான திசையில் பயணிக்காதிருப்பதற்கான தெளிவோடு தமிழர் தரப்பின் கோரிக்கைக்கான வரைபு உருவாக்கப்படவேண்டும். அதை முதலிற் பார்ப்போம்.

வெறுமனே சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துங்கள் என்ற கோரிக்கை முன்வைக்கபபட்டால் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டுள்ள இரண்டுவகைக் குற்றங்களான போர்க்குற்றம் (war crimes), மனிதத்துக்கெதிரான குற்றம் (crimes against humanity) ஆகியவை மட்டுமே கருத்திற்கொள்ளப்படும் பொறிக்குள்ளும் மாட்டிவிடக்கூடிய நிலை இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலான, குற்றங்களிற் பெருங்குற்றமான இன அழிப்பை (genocide) அந்த நீதிமன்று தீர விசாரித்த பின்னரே மேற்குறித்த குற்றங்களுக்கான தண்டனைகளும் வழங்கப்படவேண்டும் என்பது அழுத்தம் திருத்தமாக, எந்தவித நெளிவு சுழிவுகளும் இல்லாத வகையில் தமிழர் தரப்பில் இருந்து சொல்லப்பட்டாகவேண்டும்.

இன அழிப்பு முதலிற் பார்க்கப்பட்டு, அதற்கு உட்பட்டவையாகவோ அல்லது அதற்குக் குறைவான அடுத்த கட்ட நிலையிலோ தான் மற்ற இரு வகைக்குற்றங்கள் பார்க்கப்படவேண்டும். இன அழிப்பு என்ற பார்வையில் அணுகப்படாவிடில் அதற்குரிய குற்றங்களெல்லாம் மற்றைய இரண்டுக்குள் மாத்திரம் உள்வாங்கப்பட்டு இன அழிப்புக்கான நீதி நடைமுறையில் மறுக்கப்பட்டுவிடும் ஆபத்து இருக்கிறது.

இதுவரைகால ஐ.நா.வின் அறிக்கையிடல்கள் (2015 இல் முன்வைக்கப்பட்ட OISL விசாரணை அறிக்கை உள்ளடங்கலாக) போர்க்குற்றங்கள், மனிதத்துக்கெதிரான குற்றங்கள் என்பவை மட்டும் நடந்திருப்பதாகவே உறுதிப்படுத்தியுள்ளன. இந்த அறிக்கையிடல்கள் இன அழிப்பு என்ற பெருங்குற்றத்தைத் தவிர்த்தற்குக் காரணம் அதற்குரிய சுட்டிக்காட்டலுடனான குறிப்பு விதிமுறைகளுடன் (Terms of Reference, ToR) தீர்மானங்கள் இயற்றப்படாமையாகும். இதற்குப் புவிசார் சர்வதேச அரசியல் பெருங்காரணம். ஆனால், இக்கட்டுரை அதைப்பற்றியதல்ல. சர்வதேசச் சட்டரீதியான பரிமாணத்தை மட்டுமே கோரிக்கைகைள வடிவமைக்கும் போது நாம் கருத்திலெடுக்கவேண்டும்.

எந்த வகைக் குற்றம் என்பதற்கு அடுத்தபடியாக, குற்றங்கள் எந்தக் காலத்துக்குரியைவ என்பதும் முக்கியமாகிறது.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்று (International Criminal Court) 2002 இலேயே ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலச் சட்டம் (Rome Statute) 2002 ஜூலை மாதத்திற்குப் பின்னான குற்றங்களை மட்டுமே கையாளும் அதிகாரத்தைக் குறித்த நீதிமன்றுக்கு வழங்கியிருக்கிறது.

ஈழத்தமிழர் மீதான இன அழிப்புக்கான பெரும் உத்தி (grand strategy) 1950 களின் இறுதியிலிருந்து ஆரம்பிக்கிறது. அதேவேளை, 1950 இலேயே இன அழிப்புக்கெதிரான சாசனத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டிருப்பதால் இன அழிப்புக்கான கால வரையறை சிறப்புத் தீர்ப்பாயம் உருவாகும் பட்சத்தில் அகலமாக்கப்படும் வாய்ப்பு உள்ளது. 2009 இற்குப் பின்னரும் இன அழிப்புத் தொடருகிறது என்பதையும் நாம் இங்கு கருத்திற்கொள்ளவேண்டும்.

இலங்கை தொடர்பான இதுவரைகால ஐ.நா. அறிக்கையிடல்களும் இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) கால எல்லையான 2002-2009 பகுதியையே தமது பிரதான கால எல்லையாகத் தழுவியிருந்தன.

ஆகவே, இன அழிப்பு விசாரணைக்குரிய காலம் ஈழத்தமிழர்களின் கோணத்தில் இருந்து அணுகப்படுவது முக்கியமாகிறது.

அதுமட்டுமன்றி, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றிடம் கையளிப்பதை விடவும் ஒரு சிறப்புக் குற்றவியல் தீர்ப்பாயம் (International Criminal Tribunal, ICT) அமைவது மேலானது. கால வரையறை, குற்ற வரையறை, கனதி போன்ற இன்ன பிற காரணிகளால் அது மிகவும் உகந்ததாக அமையும்.

எனவே, சர்வதேச குற்றவியல் விசாரணையைக் கோரும் முதலாவது கோரிக்கையின் வரைபில் சர்வதேசக் குற்றவியற் தீர்ப்பாயமும் சேர்க்கப்படவேண்டும். யூகோஸ்லாவியா (1993) மற்றும் ருவாண்டா (2000) ஆகியவற்றுக்குப்பின், அதுவும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் உருவான 2002 ஆம் ஆண்டுக்குப்பின்னர் இவ்வாறான சிறப்புக் குற்றவியல் தீர்ப்பாயங்கள் அமைப்பது தொடர்பான தயக்கநிலை ஐ.நா. வட்டாரங்களிற் காணப்பட்டாலும் அதற்கான கோட்பாட்டுரீதியான வாய்ப்பு இன்னமும் இருக்கவே செய்கிறது (ஐ.நா. சாசனத்தின் உறுப்புரை 22, UN Charter Article 22).

மேற்குறித்த விடயங்களில் கட்சிகளுக்கிடையே கருத்துவேறுபாடு இருப்பதற்கு வாய்ப்பில்லை. இருப்பினும் வரைபு மேற்கொள்வோர், அதைக் கண்காணிக்கும் செயற்பாட்டாளர்கள் கருத்திற்கொள்ளவேண்டும் என்பதற்காக அவற்றைக் குறிப்பிட்டேன்.

இனி, இரண்டாவது கோரிக்கையாக முன்வைக்கச் சில கட்சிகளும் பல புலம்பெயர் அமைப்புகளும் விரும்பும் சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறை (IIIM) என்பதைப் பார்ப்போம். இது தொடர்பாகவே தேவையற்ற முரண்பாடுகள் தற்போது எழுந்துள்ளன.

சிரியா விவகாரத்தில் 2016 டிசம்பரில் தோற்றுவிக்கப்பட்ட இப் பொறிமுறைக்கு ஒப்பான பொறிமுறையே இலங்கை விடயத்திலும் பொருத்தமானது என்ற கருத்தை ஈழத்தமிழர் மீதான இன அழிப்புத் தொடர்பான விளக்கமுடைய பிரபல அமெரிக்கச் சட்டவல்லுநரான பேராசிரியர் பிரான்ஸிஸ் பொய்ல் (Francis Boyle) வியாழனன்று தமிழ்நெற்றுக்கு வழங்கிய கருத்தில் குறிப்பாகச் சுட்டியுள்ளார்.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திடம் (ICC) பாரப்படுத்துவது சிறந்தது. அதையும் விட இலங்கைக்கான சிறப்பான தீர்ப்பான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICTSL) ருவாண்டாவுக்கு உருவாக்கப்பட்ட பொறிமுறைக்கு ஒப்பாக உருவாக்கப்படுவது மேலும் சிறந்தது என்ற கருத்தை பல வருடங்களாகச் சொல்லிவருபவர் சர்வதேசச் சட்ட நிபுணரான பொய்ல் அவர்கள். 2016 ஜனவரியிலும் இதே கருத்தை எமது ஊடகத்தில் முன்வைத்திருந்தார். அதுமட்டுமல்ல, ஐ.நா. பொறிமுறைக்கு அப்பால் சர்வதேச நீதிமன்றில் (International Court of Justice, ICJ) இலங்கை அரசின் இன அழிப்புக்கான பொறுப்பு விசாரிக்கப்படவேண்டும். அதற்கான வழக்குக்கான குற்றப்பத்திரத்தைத் தானே தயாரிக்கத் தயாராய் இருப்பதாகவும் அதற்கான நாடொன்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என்றும் அவர் பல வருடங்களாகத் தமிழர்களைக் கேட்டும் வருகிறார். அவ்வாறான வழக்குகளை முன்னெடுத்த முன் அனுபவம் உள்ளவர் அவர்.

அதேவேளை, 2016 டிசம்பரில் முதன்முறை உதயமான சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை, மேற்குறித்த குற்றவியற் தீர்ப்பாயத்துக்கு மட்டுமல்ல வேறு பல பன்னாட்டு விசாரணைகளில் இலங்கை தொடர்பான குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்கு உகந்ததாக இருக்கும் என்ற வகையில் அதையும் சிறப்பாகக் கோருங்கள் என்ற கருத்தை அவர் 2021 ஜனவரியில் வலியுறுத்தியிருக்கிறார்.

2016 ஜனவரிக்குப் பின்னரே 2016 டிசம்பர் வருகிறது என்பதைத் தெரிந்தும், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களிலும் வழமைச் சட்டம் (customery international law) என்ற விடயம் இருக்கிறது என்பதைத் தெரிந்தும் தெரியாதவர்கள் போல் சிலர் வியப்பானதும் விதண்டாவாதமானதுமான கருத்தை முன்வைக்கின்றனர். பொய்ல் தான் சொன்னதையே மறுதலிக்கிறார் என்பது தான் அந்த விதண்டாவாதம். செய்திகளின் தலைப்பை மட்டும் பார்த்து நுனிப்புல் ஒப்பீடுசெய்துவிட்டு பொய்ல் தன்னைத் தானே முரண்படுவதாகவோ அல்லது தமிழ்நெற் ஏதோ வேண்டுமென்றே குழப்புவதாகவோ ஒரு தோற்றப்பாட்டை சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தி தாயகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகைள வீணடிக்கும் முயற்சியாக இந்த விதண்டாவாதம் எனக்குப்படுகிறது.

விதண்டாவாதத்துக்கு அப்பால், விசாரணைப் பொறிமுறை (Investigation Mechanism) என்றால் என்ன, குற்றவியல் நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் (Criminal Court or Criminal Tribunal) என்றால் என்ன என்பதைச் சரிவரப் புரிந்துகொண்டால், இவை இரண்டும் ஒன்றுக்கொன்று ஒத்திசைவானவை என்பது புரிந்துவிடும்.

விசாரணைப் பொறிமுறை என்பது, குறிப்பிடப்படும் குற்ற வகைகளுக்கான ஆதாரங்களைத் திரட்டுவது, குற்றப்பத்திரங்கைளத் தயார் செய்து அவற்றுக்கான விசாரணைகளை வேறு வேறு நீதிமன்றங்களில் தொடுப்பதற்கான (தேவையேற்படின் Prosecutor போலவும்) ஆயத்தங்களை மேற்கொள்வது என்பதே அன்றி விசாரணைகளைத் தானே மேற்கொள்வது என்பது அல்ல. குற்றவியல் நீதிமன்றமோ தீர்ப்பாயமோதான் விசாரணைகளை மேற்கொள்ளும்.

அரசுகளின் குற்றத்தை விசாரிக்கவல்ல சர்வதேச நீதிமன்று (ICJ) தொடக்கம் பல பிராந்திய மற்றும் வெவ்வேறு நாடுகளின் நீதிமன்றுகளிலும் குறித்த குற்றங்களுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் வலு கூட இந்தப் பொறிமுறைக்கு இருக்கும். ஆகவே, இந்தப் பொறிமுறையைச் சேர்த்துக் கோருவதில் எந்தவிதத் தவறும் இல்லை. 2016 டிசம்பரில் ஏற்பட்ட இந்த முன்மாதிரியான மாற்றத்தை முன்னுதாரணமாகக் காட்டியே பேராசிரியர் பொய்ல் அவர்கள் தனது கருத்தைத் தமிழ்நெற்றுக்குத் தக்க நேரத்தில் வெளியிட்டார்.

அதை வெளியிடும் அதே தருணத்தில் அவர் ஐ.நா. சாசனத்தின் உறுப்புரை 22 இற்கு அமைவாக சிறப்புத் தீர்ப்பாயம் அமைவது, அதுவும் ருவாண்டாவுக்கு ஏற்படுத்தப்பட்டதைப் போல ஏற்படுத்தப்படுவது சாலச் சிறந்தது என்பதையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இது ஒரு புறம் இருக்க, இந்த இரண்டு கோரிக்கைகளும் ஒன்றுடன் ஒன்று சீரிய முறையில் ஒத்திசையக்கூடியவை என்பதைத் தெரிந்திருந்தும் மறுதலிக்கும் வழக்குரைஞர்கள் சிலர் முன்வைக்கும் ஒரு வாதம் என்னவென்றால், இந்தப் பொறிமுறையைக் கோரினால் மனித உரிமைச் சபைக்குள்ளேயே எமது விவகாரம் மேலும் பல வருடங்களுக்கு முடக்கப்பட்டுவிடும் என்பதாகும்.

விசாரணைப் பொறிமுறை சுயாதீனமாகவும் சர்வதேச மயமானதாகவும் இருக்கும் போது எவ்வாறு அது மனித உரிமைச் சபைக்குள்ளே முடக்கப்படமுடியும்? ஒரு விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படும் போது அதற்குரிய கால எல்லைகள் தீர்மானிக்கப்பட்டு குறிப்பு விதிமுறைகளுனேயே (ToR) அது உருவாக்கப்படும். அக் குறிப்பு விதிமுறைகளுக்குள் முதலாவதாக இன அழிப்பு என்ற குற்றத்தையும் அதற்குத் தமிழர்கள் வேண்டும் கால எல்லையையும் கொண்டுவருவது எவ்வாறு என்பது குறித்தே எமது சிந்தனையும் முயற்சியும் இருக்கவேண்டும்.

பொய்ல் சொல்வதற்கு முன்னரே, கடந்த வருடம் ஏப்பிரல் மாதத்தில் சர்வதேச நீதியாளர் ஆணையத்தைச் (International Commission of Juristis) சேர்ந்த கிங்ஸ்லி அப்போட் (Kingsley Abbott) மற்றும் சமான் சியா ஸரீபி (Saman Zia-Zarifi) என்ற இரு சட்ட வல்லுநர்கள் இதே பொறிமுறை இலங்கை விடயத்திலும் அமையவேண்டிய தேவையைக் குறிப்பிட்டுள்ளார்கள். எனினும் அவர்கள் இன அழிப்பு என்பதைக் குறிப்பிடாமல் பெருங்குற்றங்கள் (atrocity crimes) என்ற பொதுச் சொல்லாடலையே கையாண்டிருந்தார்கள்.

சிரியா தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைப் பொறிமுறையில் முதலாவதாகச் சுட்டப்பட்டிருக்கும் குற்றத்தின் வகை இன அழிப்பு என்பதாகும்.

இதை முக்கியமாக நோக்கிய நிலையிலேயே பிரான்சிஸ் பொய்ல் அவர்கள் ஈழத்தமிழர்கள் இதே போன்ற பொறிமுறையையும் கோரவேண்டும் என்ற தனது கருத்தை முன்வைத்திருக்கிறார். அவ்வாறு கோருவது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றை நோக்கிய கோரிக்கையோடு ஒப்பிடுகையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்ற கருத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்ல சிரியா தொடர்பான குறிப்பு விதிமுறைகள் பலமானைவ. சிரியாவுக்கான குறித்த பொறிமுறை ஐ.நா. பொதுச்சபை ஊடாகவே அமைக்கப்பட்டது என்பதையும் நாம் இங்கு கருத்திற்கொள்ளவேண்டும்.

ஆனால், மியான்மார் குறித்த இதேபோன்ற பொறிமுறை ஐ.நா. மனித உரிமைச் சபை ஊடாக 2018 செப்ரம்பரில் அமைக்கப்பட்டது. இதைப் பொதுச் சபையும் வரவேற்றிருந்தது. ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானங்களுக்கு நிகரான வலுவையே ஐ.நா. மனித உரிமைச் சபையின் தீர்மானங்களும் கொண்டுள்ளன என்ற வகையில் ஐ.நா. மனித உரிமைச் சபையிடமும் இந்தப் பொறிமுறைக்கான கோரிக்கையை முன்வைப்பதும் பொருத்தமானதே. எனினும் பெருங்குற்றங்களுக்கான (mass atrocity crimes) பொறிமுறை என்ற பொதுவான பதத்தை விடவும் இன அழிப்பு என்பது குறிப்பிடப்பட்டு ஆராயப்படவேண்டும் என்பது குறிப்பு விதிமுறையில் (ToR) தெளிவாகச் சுட்டப்படவேண்டும் என்ற கோரிக்கை ஈழத்தமிழர்களிடம் இருந்து எழ வேண்டும்.

இதேவேளை, ஐக்கிய இராச்சியத்தில் இருக்கும் பல புலம்பெயர் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து இந்தப் பொறிமுறையைக் கேட்கும் கோரிக்கை ஒன்றை பிரித்தானிய அரசிடம் முன்வைத்துள்ளார்கள். அதிலே குற்றவியல் நீதிமன்று அல்லது சிறப்புத் தீர்ப்பாயம் என்பதைக் குறிப்பிடவில்லை என்ற குறை இருக்கிறது. அதுமட்டுமன்றி அந்தக் கோரிக்கையில் தெளிவான வரையறையற்ற (ToR) மியான்மாரையே முன்னுதாரணமாகக் காட்டியுள்ளார்கள். எனினும் மியான்மாரில் இன அழிப்பு நடைபெற்றது என்ற கருத்து இருப்பதால் புலம்பெயர் அமைப்புக்களின் கோரிக்கைக்கு வலு இருக்கவே செய்கிறது. இன அழிப்புக்குள்ளான தேசத்தை ஈழத்தமிழர் என்று பெயரிட்டுச் சுட்டவும் தவறியுள்ளார்கள். ஆயினும், விமர்சனங்களுக்கப்பால் குறித்த முயற்சி மனமார வரவேற்கப்படவேண்டிய ஒரு கூட்டு முயற்சியாகும். தாயகத்தில் இருந்து கோரிக்கையைத் தயாரிப்பவர்கள் அதிலே இடம்பெற்றிருக்கும் குறைகளையும் நிவர்த்தி செய்து தாம் முன்வைக்கவிருக்கும் வரைபின் பிரதான கோரிக்கைகளை ஒன்றுக்கொன்று இயைவாகத் தக்கமுறையில் கூட்டாக விவாதித்து உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

நன்றி: தினக்குரல்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments