கனடாவில் கொவிட் 19 நான்காம் அலை அறிகுறிகள் குறித்து எச்சரிக்கை!

You are currently viewing கனடாவில் கொவிட் 19 நான்காம் அலை அறிகுறிகள் குறித்து எச்சரிக்கை!

டெல்டா திரிவு வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் கனடா விரைவில் கொவிட் 19 தொற்று நோயின் நான்காவது அலையை எதிர்கொள்ளக்கூடும் என கனேடிய சிரேஷ்ட சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

சில மாகாணங்கள் கட்டுப்பாடுகளை நீக்கி மீண்டும் திறக்கும் திட்டங்களுடன் முன்னேறிவரும் நிலையில் டெல்டா திரிவு தொற்று மீளெழுச்சி பெற்று வருவதை அவதானிக்க முடிவதாக கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் கூறினார்.

இது சற்று ஆபத்தான கட்டம் என நான் கருதுகிறேன். எனினும் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டு மீண்டும் திறக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன என நேற்று செய்தியாளர்களிடம் பேசி டாம் குறிப்பிட்டார்.

அல்பர்ட்டா மாகாணத்தில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. பிரிட்டிஷ் கொலம்பியா மத்திய பகுதியில் மற்றொரு கொத்தணித் தொற்று குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு முககவச கட்டாய நடைமுறை மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 18 முதல் 39 வயது வரையிலானவர்கள் நான்காவது அலையின் தொடக்கத்துக்கு வித்திடக்கூடிய தரப்பினராக இருப்பார்கள் என கருதுவதாக சுகாதார அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த வயதுப் பிரிவினரில் சுமார் 70 விகிதத்தினர் தடுப்பூசி பெற்றுள்ளனர். எனினும் மருத்துவமனைச் சேர்க்கைகளைத் தவிர்ப்பதற்காக இந்த வீதம் 80 வரை அதிகரிக்கப்பட வேண்டும் எனக் கருதுவதாக கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் கூறினார்.

தடுப்பூசி வீதம் அதிகரிப்பதன் மூலம் தொற்று நோயின் தாக்கங்கள் மற்றும் இறப்புக்கள் கணிசமாகக் குறையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

தொற்று நோயின் மீளெழுச்சிக்கான அறிகுறிகளை பெரும்பாலான பிரதேசங்களில் காண முடிகிறது என டாம் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் டெல்டா திரிவு தொற்று பரவல் கவலை அளிப்பதாக உள்ளது. இங்கு தற்போது உள்ள தளர்வுகள் தொற்று நோய் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி கவலை வெளியிட்டுள்ளார்.

இதேபோன்று டெல்டா திரிவு அல்பர்ட்டாவிலும் அதிகரித்து வருகிறது.

இதேவேளை, தடுப்பூசி பெற தகுதியுள்ள கனேடியர்களில் 81 வீதம் பேர் குறைந்தது ஒற்றைத் தடுப்பூசி பெற்றுள்ளனர். 66 வீதம் பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்.

எனினும் தடுப்பூசியின் பயன்களை முழுமையாக அனுபவிக்க மீண்டும் திறக்கப்படும்போது எச்சரிக்கையான அணுகுமுறை அவசியம் என கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் கூறினார்.

இங்கிலாந்து அதிக தடுப்பூசி வீதத்தைக் கொண்டுள்ளபோதும் அங்கு மீண்டும் டெல்டா திரிவு தொற்று நோய் அதிகரித்து வருவதாக டாம் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் கனேடியா்கள் 80 வீதத்திற்கும் அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதன் மூலமே தொற்று நோயின் வலுவான எழுச்சியில் இருந்து தப்பிக்கொள்ள முடியும் எனத் தான் நம்புவதாகவும் தெரசா டாம் தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments