காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தை நியாயப்படுத்தக் கூடாது!

You are currently viewing காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தை நியாயப்படுத்தக் கூடாது!

காணாமலாக்கப்பட்டோர் குறித்த அலுவலகத்தை நியாயப்படுத்தும் செயற்பாடுகளில் ஐ.நா ஆணையாளர் ஈடுபடக்கூடாது என வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த அமைப்பினரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையின் முழு வடிவம் பின்வருமாறு… “வலிந்து காணாமல் ஆக்கட்டவர்களின் உறவினராகிய நாம் தொடர்ந்து போராடி வருகின்றோம்.

எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமான இலங்கை அரசிடம் இருந்து எமக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது என்பதை நன்கு உணர்ந்துள்ள நிலையில், நாம் ஐ.நா. மனித உரிமைப் பேரவை,மற்றும் ஐ.நா. பொறிமுறைகள் உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் இருந்தே நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.

இதேவேளை, இலங்கை அரசானது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக காணாமல் போனோர் பற்றிய அலுவலகங்களை வடக்கு, கிழக்கில் திறந்து எமது மக்களையும் உலக சமுதாயத்தையும் ஏமாற்றும் நடவடிக்கைகளில் சில வருடங்களாக ஈடுபட்டு வருகிறது.

இதை ஒருவித நம்பகமும் அற்ற பொறிமுறையாகவும் இறப்பு அத்தாட்சிப் பத்திரங்களையோ அல்லது கண்துடைப்பு நிவாரணத்தையோ வழங்கி வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தாமல் ஏமாற்றும் முயற்சி என்பதை அறிந்து பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் திட்டவட்டமாக நிராகரித்திருந்தபோதும் இலங்கை அரசும் அதற்கு முண்டுகொடுக்கும் வெளிச்சக்திகளும் குறித்த அலுவலகங்களைத் தொடர்ந்தும் இயங்கவைக்க முயன்று வருகின்றனர்.

அதுமட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐ.நா. பொறிமுறையும், குறிப்பாக இலங்கை தொடர்பான தீர்மானங்களை மனித உரிமைப் பேரவையூடாக அமெரிக்காவினதும் இந்தியாவினதும் பின்னணியுடன் இயற்றிவரும் கோர் குழு நாடுகளான பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, வடக்கு மசிடோனியா, மாலாவி மற்றும் மொன்ரநீக்ரோ ஆகியவையும், ஏன் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கூட தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்தப் பொறிமுறையை இயக்குமாறு தொடர்ந்தும் இலங்கை அரசை வலியுறுத்தி வருவதும் அவ்வாறு இலங்கை ஓரளவுக்குச் செயற்படுவதாகக் காட்டும்போது வரவேற்றுவருவதும் கவலையளிப்பது மட்டுமல்ல கண்டனத்துக்குரிய ஒரு செயற்பாடாகவும் அமைந்திருக்கிறது.

அண்மையில் இரகசியமாக கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டுள்ள அலுவலகம் தொடர்பான நகர்வையும் நாம் இந்த வகையிலேயே நோக்கவேண்டியுள்ளது.

காணாமலாக்கப்பட்ட எமது உறவுகள் குறித்த சர்வதேசப் பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கை அரசும் அதன் இராணுவப் படைகளும் தப்பித்துக்கொள்வதற்கு மட்டுமல்ல, காணாமற்போனோர் பட்டியலில் இராணுவத்தில் இருந்து விலகிச் சென்றவர்களின் பெயர்களையும் இணைத்து, இரண்டு தொகைகளையும் ஈடானவையாகக் காட்டி நீதியை மழுங்கடிக்கும் போக்கில் கொழும்பு அரச இயந்திரம் செயற்பட எத்தனிக்கிறது.

இதேவேளை தான் ஒருபுறம் காட்டமான தீர்மானங்களை இலங்கை அரசை நோக்கி நிறைவேற்றப்போவதாகக் காட்டும் அதே ஐ.நா. மனித உரிமைப் பொறிமுறை மறுபக்கம் இலங்கை அரசின் கண்துடைப்பு அலுவலகங்களையும் வரவேற்பது எம்மை விசனத்துக்கு உள்ளாக்குகிறது.

இதுவரை போராட்டங்களில் ஈடுபட்ட எமது உறவுகளின் குரல் சர்வதேசத்தின் காதுகளுக்கு எட்டியபோதும் எமக்கான நீதிக்கதவு இன்னும் திறக்கப்படவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் கொவிட் தொற்று இடர்பாடுகளுக்குள் கிளிநொச்சியில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் இரகசியமாக தோன்றியுள்ளதானது தொடரும் கண்துடைப்புக் குறித்து பலத்த கேள்விகளை எம்மிடையே எழுப்பியுள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் முழுக்கவனத்திற்கு எமது நிலைப்பாட்டை எடுத்துரைக்கவேண்டிய பொறுப்பு தேர்தல் அரசியலூடாக எமது பிரதிநிதிகளாக விளங்கும் அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு உரியது.

தமிழ் சிவில் சமூக, மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இந்தப் பொறுப்பைச் சுட்டிக்காட்டி எமது பிரதிநிதிகளை ஒன்றிணைந்த குரலில் ஒலிக்கச் செய்யவேண்டும்.

சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் ஒரு சிலர் தமது குரலே முழுத் தமிழினத்தின் குரல் போல ஒரு பொய்மையைத் தோற்றுவித்துள்ளார்கள். இந்தப் பொய்மையை உலகுக்கு அம்பலப்படுத்தி பெரும்பான்மைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர் உரிமைகளுக்குப் பின்னால் அணிதிரளவேண்டிய காலம் வந்துவிட்டது.

அதேவேளை, புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் முக்கிய பொறுப்பு தற்போது இருக்கிறது. குறிப்பாக, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் எமது தாயகத்தில்,காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான போராட்டத்தை அடுத்த தளத்திற்குப் பலமாக நகர்த்தவேண்டும். தாயகத்தின் குரலை அசட்டை செய்யும் சக்திகளுக்கு அந்தந்த நாடுகளிலேயே எழுப்பப்படும் குரல் மட்டுமே அழுத்தத்தை ஏற்படுத்தும்.

இலங்கை அரசுடன் இரகசியப்பேச்சுக்களை நடாத்தி, தமிழ் மக்களை இறுதியில் ஏமாற்றும் போக்கை மாற்றவேண்டுமானால் தாயகத்தில் குரல் கொடுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் குரலை சர்வதேசத் தளத்தில் உரத்து ஒலிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட முறையை எந்த வகையிலும் வெளிப்படுத்தாது இருப்பதற்காகவும் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் தொடர்ச்சியாக காணாமல்போனோர் என்ற சொற்பதத்தை பயன்படுத்தி வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களுக்கு குறைந்த நிதியை கொடுத்து அதன் மூலம் காணாமல் ஆகிவிட்டார்கள் என்பதற்கான ஒரு தற்காலிக சான்றிதழ்களை வழங்கி போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கு இந்த காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகின்றது.

இதனால் எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்கள் சர்வதேசத்திடம் கூடிய கவனத்தைப் பெறும் வகையில் மேலும் பல மடங்காக ஒன்றிணைந்த முறையில் கடுமையான வகையில் தீவிரப்படுத்தப்பட வேண்டிய தேவை வந்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் நாம் காணாமல் போனோர் பற்றிய அலுவலக பொறிமுறையினை நிராகரிக்கின்றோம் என்ற செய்தி தொடர்ச்சியாக குறிப்பாக சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தக் கூடிய வகையில் கருத்துக்களை வெளியிடவேண்டும்.

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தை நியாயப்படுத்தும் செயற்பாடுகளில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் ஈடுபடக்கூடாது என்ற கோரிக்கை நாம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் . இலங்கை இராணுவத்தினால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பது உலகறிந்த விடயமாக இருந்தபோதும் காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை சேகரிக்கிறோம் என்று மீண்டும் மீண்டும் கண்துடைப்பு நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விபரங்கள் பல அதிகாரிகள் மட்டத்தில் பல வருடங்களாக சேகரிக்கப்பட்டு அவர்கள் எங்கு காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை தற்போது இந்தப் பொறிமுறைக்கு இருக்கின்றன.

ஆனால் அதற்குப் பதிலாக மீண்டும் மீண்டும் கண்துடைப்பு நடவடிக்கைகளிலேயே இலங்கை அரசும் அதனோடு சேர்ந்து மனித உரிமையை மேம்படுத்த வேண்டும் என்று சொல்கின்ற சக்திகளும் செயற்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் எங்களுடைய கோரிக்கைகளையும், உரிமைகளையும் மறுதலித்து இலங்கை அரசோடு இரகசியமாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு புவிசார் நலன்களை மட்டும் பெற்றுக்கொண்டு செயற்படும் சர்வதேச சமூகத்திடம் தாயகத்திலும்,புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஈழத்தமிழர்கள் எமது கோரிக்கையை பலத்த குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும்“

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments