காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எப்படி இறந்தனர்?- விக்கி!

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எப்படி இறந்தனர்?- விக்கி!

காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் எப்படி இறந்தார்கள் என்ற பின்னணி சர்வதேச சமூகத்துக்கும் எமது மக்களுக்கும் முறையான சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றின் ஊடாக தெளிவுபடுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், காணாமல் போனவர்கள் எங்கே, எப்போது, யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதை ஜனாதிபதி கூற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளிடம் இருந்து ஒரு வார்த்தை வராதா என்ற ஏக்கத்துடன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எமது மக்களின் நம்பிக்கைகளைத் தகர்க்கும் வகையில் காணாமல் போயுள்ள மக்கள் யுத்தத்தின் போது இறந்து விட்டதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதியிடம் கூறியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன.

இறந்தவர்களை மீண்டும் தன்னால் கொண்டுவர முடியாது என்றும் அவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் எதிர்பார்ப்புக்கள், துயரங்கள் எதனையும் கவனத்திற்கொள்ளாமல் பொறுப்பற்ற முறையில் சர்வ சாதாரணமாகக் கூறியிருக்கிறார்.

தமது உறவினர்கள் எங்காவது ஒரு இடத்தில் உயிருடன் தான் இருக்கின்றார்கள் என்றும் என்றாவது ஒருநாள் அவர்களின் குரல் தமது காதுகளுக்குக் கேட்கும் என்றும் பல வருடங்களாக துயரத்துடன் வாழ்ந்துவரும் உறவுகளின் போராட்டங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி இடும் நோக்கத்துடன் ஜனாதிபதி ‘இது தான் உண்மை’ என்று தனக்கு தெரிந்த உண்மைகளின் அடிப்படையில் காணாமல் போனவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால் ஜனாதிபதி எதிர்பார்ப்பது போல இந்தச் செய்தி ‘யுத்தத்தில் பொறுப்புக்கூறல்’ விதி முறைகளுக்கு அமைவானதாக இல்லை.

காணாமல் போயுள்ளவர்கள் யுத்தத்தில் இறந்துவிட்டார்கள் என்று கூறியுள்ள ஜனாதிபதி அவர்கள் காணாமல் போயுள்ளவர்கள் எங்கே, எப்போது, யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதனையும் எந்த விசாரணையின் அடிப்படையில் அவர் இதனை கூறியிருக்கிறார் என்பதையும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நாட்டு மக்களுக்கும் கூறவேண்டும்.

விசாரணை ஒன்றை நடத்தியிருந்தால் அது எப்போது, யாரால் நடத்தப்பட்டது என்பதனையும் அவர் வெளிப்படுத்தவேண்டிய பொறுப்புக்கு தற்போது உள்ளாகியிருக்கின்றார்.

முக்கியமாக காணாமல் போனோர் பலரை இராணுவத்தினரிடம் கையளித்த உறவுகள், நண்பர்கள், நலன் விரும்பிகள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றார்கள். விசாரணைக்கு அவர்கள் எவரையும் அழைத்ததாகக் கூறப்படவில்லை. பின்னர் எவ்வாறான விசாரணையின் அடிப்படையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார் என்று மக்கள் அறிய உரித்துடையவர்கள்.

அதேவேளை, 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் காணாமல் போயுள்ளனர் என்பது யாவரும் அறிந்ததே. அவர்கள் யுத்தத்தில் இறந்து விட்டார்கள் என்று ஜனாதிபதி கூறியிருப்பது இறுதி யுத்தத்தில் நடைபெற்ற போர்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

இதனை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத்தொடரில் உறுப்புநாடுகள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

ஜனாதிபதியின் கூற்று இவ்வாறான நடவடிக்கைகளை மிக அவசியம் ஆக்கியுள்ளது. இக்கூற்றில் இருந்து அரசாங்கம் ஜெனிவாவில் என்ன கூறப் போகின்றது என்பதையும் நாம் ஊகித்துக் கொள்ளலாம்.

இன்றைய ஜனாதிபதியே யுத்தம் நடைபெற்றபோது பாதுகாப்புச் செயளாலராக இருந்ததுடன் தானே யுத்தத்தை வழிநடத்தி முடிவிற்கு கொண்டுவந்ததாக பல தடவைகள் கூறியிருப்பதால் அவரின் கூற்றில் உண்மையிருக்கக்கூடும்.

ஆகையினால்தான் காணாமல் ஆக்கப்பட்ட இத்தனை பல்லாயிரக்கணக்கான மக்கள் எப்படி இறந்தார்கள் என்ற பின்னணி சர்வதேச சமூகத்துக்கும் எமது மக்களுக்கும் முறையான சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றின் ஊடாக தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

இதுவே காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு மன அமைதியை ஏற்படுத்தும். இத்தகைய ஒரு பொறுப்புக்கூறல் நடவடிக்கையே நல்லிணக்கம் ஏற்படுத்த வழிவகுக்கும்.

ஆகவே தான் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் தாம் நடத்திய விசாரணை பற்றிய முழு விபரங்களையும் முதலில் வெளிப்படுத்த வேண்டும் அல்லது அவ்வாறு அவர் நம்பத்தகுந்த விசாரணை எதனையும் நடத்தவில்லையானால் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு அவர் வழிவகுக்க வேண்டும். அக்கால கட்டத்தில் போர் முடிந்த பின்னர் எமக்குக் கிடைத்த தகவலின் படி இராணுவத்தினரே மக்களைச் சரணடையச் சொன்னார்கள் என்றும் இராணுவத்தினர் அவர்களைப் பாரம் எடுத்தார்கள் என்றும் கூறப்பட்டது.

அப்படி என்றால் பாரமெடுத்த இராணுவத்தினரைக் கூப்பிட்டு அவர்கள் பொறுப்பேற்றவர்களுக்கு என்ன நடந்தது என்று ஏன் கேட்கவில்லை என்பதையும் ஜனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்” என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது!!