ஐரோப்பாவில் நிலவும் கடுமையான வெப்ப அலை, உலகம் வெப்பமாதல் வேகமாக மாறி வருவதை காட்டுகின்றன.
இந்த மாற்றங்கள் நோர்வேயிலும் தெளிவாகக் காணப்படுகின்றன என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாக, குளிர் நாடு என்று அறியப்பட்ட, வடதுருவ நாடான நோர்வே, அந்த நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நோர்வேயின் காலநிலை ஆய்வாளர் “Hans Olav Hygen” கூறுகையில், இந்த அசாதாரண வெப்பநிலைகளுக்கு ஆப்ரிக்காவிலிருந்து வரும் சூடான காற்று காரணமாக இருந்தாலும், முக்கிய காரணம் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட காலநிலை மாற்றமே முக்கிய காரணியாக அமைகிறது என கூறுகிறார்.
ஐரோப்பாவின் பல பகுதிகளில் சாதாரண நிலையைவிட, 12 முதல் 16 டிகிரி வரை அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறிப்பாக இங்கிலாந்து போன்ற நாடுகளில் பல வருடங்களாக நிலவிவந்த வெப்பநிலைகளில் மாற்றம் ஏற்பட்டு அவை உயர்வடைந்துள்ளன.
இந்த மாற்றங்கள் இயற்கைச் சூழல் மட்டுமின்றி, மக்களின் வாழ்க்கை முறையையும் பாதிக்கின்றன. முன்பு இருந்தபோல் பனிப்பொழிவு நிறைந்த குளிர்காலங்கள் குறைந்து, அதிகமான வெப்பம் மற்றும் திடீர் வானிலை மாற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
இதன் விளைவாக, “நாம் குழந்தைப் பருவத்தில் கண்ட நோர்வே” என்ற நினைவுகளே இனி மாறி வருகின்றன என்ற கவலை எழுந்துள்ளது. இந்த நிலைமை உலகளாவிய பிரச்சினையாக மாறி, உடனடி நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்துகிறது.






